Saturday, June 27, 2009

திருக்குறள்: 26

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 26


செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்.


பொழிப்புரை (Meaning) :

செய்வதற்கு அரியனவற்றைச் செய்வார் பெரியோர், சிறியோர் செய்வதற்கு அரியனவற்றைச் செய்ய இயலாதார்.


விரிவுரை (Explanation) :
செய்வனவற்றுள் அரிதான செயல்களைச் செய்து முடிப்போர் பெரியோர் ஆவர். அவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியோரே. எளிய காரியங்களைச் செய்பவர் சிறியவர் என்பது ஈண்டு பெறத்தக்கது.

செயற்கரிய செயல்கள் பற்றற்று ஒழுகுவோருக்கே, துறந்தோருக்கே சாத்தியம் ஆகுவது இயல்பு. எனவே அவர்களே பெரியோர் எனப்படுபவர். உதாரணத்திற்குச் சித்தர்கள் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி இயமம், நியமம் செய்து மனத்தை அடக்கிப் பெறும் அட்டமா சித்திகளைச் சொல்லலாம்.

செயற்கெளிய செயல்கள் நாம் அன்றாடம் செய்பவை, உலகத்தொழில், பொருளீட்டல், இன்ப துன்பம் துய்த்தல், எளியாரை வாட்டுதல் போன்றவை. இவ்வகைச் செயற்கு உரியனவற்றைச் செய்ய இயலாதவர் சிறியாரிலும் சிறியார் என்பதும் சொல்லாது கூறிய உட்பொருள் எனக் கொள்க.

எனவே அரிய செயல்களைச் செய்துமுடித்துப் பெரியோர் எனப் பெயர் பெற முதலில் அதற்குத் தக்க முறையில் புலன்களை அடக்கி, அற ஒழுக்கத்தின் பால் நின்று மன அடக்கம் கொண்டு தகுதி பெற்றுப் பிறகு செயலினைச் சிந்தித்து, அறிந்து, ஆய்ந்து, திட்டமிட்டு வென்று முடிக்க வேண்டும் என்பது பொருள். கூடவே முற்றும் துறந்தும் அரிய செயல் செய்ய இயலாதவர்கள் பெரியோர் எனப்பட மாட்டார்கள் என்பதும் நுண்பொருள்.

ஆக ஒருவர் பெரியோர் அல்லது சிறியோர் எனும் பாகுபாடு அவர் செய்து முடித்த காரியத்தினாலே மட்டுமே தவிர அவரது வயதாலோ அல்லது மற்றைய வேறு காரணங்கள் எதனாலுமோ அல்ல என்பது இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளத் தக்கது.


குறிப்புரை (Message) :
செயற்கரிய செயல்களைச் செய்வோர் பெரியோர்; மாட்டாதவர் சிறியோர்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
செயல் - செய்து முடிப்பது, காரியம்.


ஒப்புரை (References) :

செயற்கரியவாவன இயமம், நியமம் முதலாய எண் வகை யோக உறுப்புக்கள். கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்) , ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும், மனவடக்கமும் சிறந்ததாம்.

தாயுமான அடிகள்:
வெந்தழலி விரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல் கொள்ளல்லாம்
சந்ததமு மிளமியோ டிருக்கலா மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது.


மனம் அடக்குதலும், அவா அறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

திருமந்திரம்: 1426
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.

திருமந்திரம்: 1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே.



***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...