Monday, June 22, 2009

சித்தர் நெறிக் களஞ்சியம்


பிரபஞ்ச தத்துவம்:
இறைவன் படைக்கும் முன் இந்தப் பிரபஞ்சம் பெயர் உருவமற்று சுத்த வெளியாய், நிர்க்குண்மாய், சின்மாத்திரைப் பரப்பிரம்மமாக இருந்தது.

அதிலிருந்து பிரமையினால் கானல் நீர் தோன்றுவது போல் மூலப் பிரகிருதி என்னும் இல் மாயை ஒன்று தோன்றியது. அந்த மூலப் பிரகிருதி வெண்மை, சிகப்பு, கறுப்பு என்னும் மூன்றுவித நிறங்களோடு மூன்றுவிதச் சக்திகளாயிற்று. வெண்மை நிறத்தே மாயா சக்தி. சிகப்பு நிறத்தது அவித்தா சக்தி. கறுப்பு நிறத்தது ஆவரண விக்‌ஷேப சக்தி. இவற்றை முறையே மாயை, அறியாமை (அஞ்ஞானம்); முனைப்பு (அகங்காரம்) எனச் சொல்லலாம்.

மாயா சக்தி சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்க்கும் அதில் பரப்பிரம்மம் பிரதி பலிப்பதினால் தோன்றிய பிரதிபிம்பமே ஈஸ்வரன் என்று கூறப்படும். ஈஸ்வரன் அந்த மாயைத் தன் வசப்படுத்திக் கொண்டு நம் அறிவிற்கு மேம்பட்டவனாய் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களுக்கும் அப்பாற்பட்டவனாய் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அந்தக் கரணங்களுக்கும் எட்டாதவனாய்த் தனது அருளினால் பிரும்மா, திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்னும் ஐந்து வடிவங்கள் கொண்டு எல்லா உயிர்களுக்கும் பற்றுக்கோடு ஆகி மேலான இன்பத்தைத் தருபவன்.

எனவே, பரப் பிரம்மத்திலிருந்து மாயையும், மாயையில் இருந்து அவித்தை எனப்படும் அறியாமையையும் (அஞ்ஞானம்) அந்த அறியாமையிலிருந்து அகங்கார ஆற்றலும், அகங்காரத்திலிருந்து சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து நுண் பொருட்களான பஞ்ச தன் மாத்திரைகளும், அவற்றிலிருந்து நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பருப் பொருள்களான ஐம்பெரும் பூதங்களும், அப்பஞ்ச பூதங்களினால் பிரபஞ்சமும்
பிராணிகளும் உண்டாயின. மாயையினால் உண்டான பிரபஞ்சமும், மாயா சரீரமும் தோன்றி மறைந்து, தோன்றி மறைந்து உயிர்களை மீண்டும், மீண்டும் பிறப்பு இறப்புக்களுக்கு ஆளாக்கிக் கொண்டே வரும். முடிவில் எல்லாம் அழிவுறும் பிரளய காலத்தில், எல்லா நதிகளும் கடல் நீரிலே உண்டாகிக் கடைசியில் கடலிலேயே விழுந்து ஒன்றாகக் கலந்து விடுவது போலவே, பிரும்மா முதல் மனிதர் மிருகங்கள் முதலான சராசரப் பொருட்களெல்லாம் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து உண்டாயினவோ அந்தப் பரப்பிம்மத்திலேயே ஒன்று கலந்து ஏகமாய் ஐக்கியமாகிவிடும்.

நம் உடல்:
மனித உடலானது அவரவர் கையினால் எட்டு சாண் அளவு நீளமும், நான்கு சாண் அளவு பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன.

பூதங்கள்: 5 (ஐம்பூதங்கள்)
1.நிலம் (பூமி, பிருத்துவி, மண்)
2.நீர் (புனல், அப்பு, ஜலம்)
3.நெருப்பு (அனல், தேயு, அக்னி)
4.காற்று (கால், வாயு)
5.ஆகாயம் (விசும்பு, விண்)

இவற்றை பஞ்ச பூதங்கள் எனவும், ஐந்து பருப்பொருள்கள் என்றும் சொல்வார்கள்.

அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருப்பது என்பதை விளக்கக் கீழே.

ஐம்பூதங்களால் உடல் உண்டாதல்:
நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனப்படும் ஐந்து பருப்பொருட்களில், அதாவது பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொன்றும் சமஷ்டி, வியஷ்டி என இரண்டு பாகங்களாகி இரண்டு பூதங்களாயிற்று. சமஷ்டி என்றால் ஒன்றாயிருத்தல், இதற்கு உதாரணம் தோப்பு. வியஷ்டி என்றால் வெவ்வேறாக இருத்தல். இதற்கு உதாரணம் மரம். இவற்றில் முதற்பாகப் பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாயிற்று. இரண்டாவது பாகப் பஞ்ச பூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாகி, அவை ஒன்று சேர்ந்து மனித உடல் உண்டாயிற்று.

அதன் விளக்கம்:
முதலில் ஆகாயம்: இரண்டு பாகங்களான போது, முதற்பாதிப் பாகமான சமஷ்டி ஆகாயம் ஞாதாவாயிற்று. அதாவது அதில் தோன்றிய பிரம்மமும், பிரம்மத்தின் பிரதிபிம்பமும் கூடியதே ஞாதாவாகும். இந்த ஞாதாவை அக்‌ஷ்ரன் எனவும் க்‌ஷேத்ரஞ்ஞன் எனவும், புருஷன் எனவும், ஜீவன் எனவும்சொல்வார்கள்.

ஆகாயத்தின் இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி ஆகாசத்தை நான்கு பாகங்களாக்கி, அவற்றோடு முறையே பஞ்சபூதங்களை கீழ்க்கண்டவாறு சேர்த்தபோது அவ்வவற்றிற்கு எதிரே சொன்னவை பிறந்தன.

முதற்பாகம் & காற்று : சங்கல்பம் (மனஸ்) என்னும் மனத் தத்துவம் பிறந்தது.
2வது பாகம் & நெருப்பு: புத்தி (அறிவு) என்னும் தத்துவம் பிறந்தது
3வது பாகம் & நீர் : சித்தம் (நினைவிறுத்தல்) என்னும் தத்துவம் பிறந்தது
4வது பாகம் & நிலம் : அகங்காரம் (முனைப்பு) என்னும் தத்துவம் பிறந்தது.

இவை நான்கு அந்தக்கரணங்கள் அல்லது அகக்கருவிகள் எனப்படும்.

அடுததாகக் காற்று: இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற் பாதிப் பாகமான சமஷ்டி வாயுவானது தொழிற் காற்றாக மாறியது.

இரண்டாவது பாதிப்பாகமான வியஷ்டி வாயுவானது கீழ்க்கண்டவாறு நான்கு பாகங்களாகவும், அவ்வவற்றில் குறிப்பிட்டது போலும் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாசம்: சமான வாயு (நிரவற்காற்று)
2வது பாகம் & நெருப்பு: உதான வாயு (ஒலிக்காற்று)
3வது பாகம் & நீர்: பிராண வாயு (உயிர்க்காற்று)
4வது பாகம் & நிலம்: அபான வாயு (மலக்காற்று)

இவ்வைந்து பஞ்சபிராணன்களாக எல்லா உயிர்களுக்கும் இருந்து வருகின்றன.

அடுத்ததாக நெருப்பு: இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி அக்னி கண்களாயின.

இரண்டாவது பாதிப் பாகம் ஏனைய பூதங்களுடன் சேர்ந்து கீழ்க்கண்டவாறு அவ்வவற்றில் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாசம்: செவிகள்
2வது பாகம் & காற்று: உடல்
3வது பாகம் & நீர்: வாய் அல்லது நாக்கு
4வது பாகம் & நிலம்: மூக்கு

அடுத்தாக நீர்: இரண்டு பாகங்களாகி, அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி நீர், சுவை (ரசம்) என்னும் தன்மாத்திரை ஆயிற்று. அதாவது ருசி அறிவதாயிற்று. இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி நீர் நான்கு பாகங்களாகி, கீழ்க்கண்டவாறு ஏனைய பூதங்களுடன் சேர்ந்து, அவ்வவற்றில் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாசம் : ஓசை (சப்தம்)
2வது பாகம் & காற்று: ஊறு (ஸ்பரிசம்)
3வது பாகம் & நெருப்பு: ஒளி/பார்வை (ரூபம்)
4வது பாகம் & மண்: நாற்றம்/வாசனை/நுகர்தல் (கந்தம்)

அடுத்ததாக நிலம்: இரண்டு பாகங்களாகி அவற்றில் முதல் பாதிப் பாகமான சமஷ்டி நிலமானது குதம் (மலத்தைத் தள்ளும் மலவாய்) ஆயிற்று. பிறகு இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி நிலம் மற்றைய பூதங்களுடன் சேர்ந்து கீழ்க்கண்டவாறு, அவ்வவற்றில் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாயம்: வாக்கு (பேசுவதற்குரிய வாய்)
2வது பாகம் & காற்று: பாணி (கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் உரிய கை)
3வது பாகம் & நெருப்பு: பாதம் (நடப்பதற்கும் நிற்பதற்கும் உரிய கால்)
4வது பாகம் & நீர்: குய்யம் (அதாவது ஆண் பெண் இன்பத்திற்குரிய மர்மக் குறி)

மேற் கூறிய இருபத்தைந்து தத்துவங்களும் சேர்ந்து உடல் பிறக்கிறது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து குணங்களுடைய நிலத் தத்துவத்தினால் தாவர ஜங்கம உருவங்களான பிரபஞ்சம் அனைத்தையும் பிரும்ம தேவன் படைக்கிறார்.

ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கு குணங்களை உடைய நீர் தத்துவத்தினால் பிரபஞ்சங்கள் அனைத்தையும் மகாவிஷ்ணு காத்தருள்கிறார்.

ஒலி, ஊறு, ஒளி என்னும் மூன்று குணங்களுடைய நெருப்புத் தத்துவத்தினால் பிரபஞ்சங்கள் அனைத்தையும் ருத்திரர் அளிக்கிறார்.

ஒலி, ஊறு என்னும் இரண்டு குணங்களுடைய காற்றுத் தத்துவத்தினால் மகேஸ்வரர் மாயா சம்பந்தமுள்ள உயிர்களுக்கெல்லாம் பிரமையை உண்டாக்குகிறார்.

ஒலி எனும் ஒரே குணமுள்ள ஆகாசத்தினால் உயிர்களுக்கு ஞானத்தை (அறிவை) சதாசிவம் உண்டாக்குகின்றார்.

பஞ்ச ஞானேந்திரியங்கள் (ஐம்பொறிகள்)
1. மெய் 2. வாய் 3. கண் 4. மூக்கு 5. செவி

இவற்றின் இயல்பு:
1. மெய் (உடம்புத் தோல்) வாயுவின் அம்சமாகையால் அதன் தன்மைகளான குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை என்னும் நான்கு வித ஸ்பரிசங்களை (ஊறு) உணர்ந்தறியும்

2. வாய் அல்லது நாக்கு: நீரின் அம்சமாகையால் அதன் தன்மைகளான உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளையும் (ரசத்த) ருசித்தறியும்.

3. கண்: நெருப்பின் அம்சமாகையால் அதன் ஒளியை அதாவது கறுப்பு, சிகப்பு, பச்சை, நீலம், மாசிர நிறம், நீளம், குட்டை, பருமன், மெலிவு முதலான பத்து ரூபங்களையும் (ஒளியை) பார்த்தறியும்.

4. மூக்கு: நிலத்தின் அம்சமாகையால் அதன் தன்மைகளான சுகந்தம், துர்கந்தம் என்னும் வாசனைகளை நுகர்ந்தறியும்.

5. செவி: ஆகாசத்தின் அம்சமாகையினால் அதன் குணங்களான பலவித ஓசையையும் (சப்தத்தையும்) கேட்டறியும்.

இவை ஐந்தின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை அறிவதால் பஞ்ச ஞானேந்திரியங்கள் எனக் கூறப்படுகின்றது.

பஞ்ச கர்மேந்திரியங்கள்:
1.வாய் 2.கை 3.கால். 4. மலவாய் (குதம்) 5. கருவாய் என வகுக்கப்பட்டு ஐந்து தொழில் உறுப்புக்கள் என வழங்கப்படும்.

இவற்றின் செயல்கள் முறையே: 1. சொல்லல் 2. நடத்தல் 3. ஏற்றல், கொடுத்தல் 4. விடுதல் 5. மகிழ்தல் என வழங்கப்படுகின்றன.

1. வாய்: (வாக்கு) இது ஆகாசத்தின் அம்சமாகையால் அதன் குணமாக நின்று பேசுவதால் வாக்கு ஆகும்.
2. கை: (பாணி), இது காற்றின் அம்சமாகையால் கொடுத்தல், வாங்கல், பிடித்தல், விடுதல் முதலானவற்றை செய்யும்
3. கால்: (பாதம்) இது நெருப்பின் அம்சமாகையால் நடத்தல், நிற்றல், அமர்தல், எழுந்திருத்தல் முதலானவற்றைச் செய்யும்.
4. மலவாய் (குதம், பாயுரு) இது நிலத்தின் அம்சமாகையால் மலஜலங்களை வெளியே தள்ளும்.
5. கருவாய் (உபஸ்தம்) அல்லது ஆண் பெண் மர்மக்குறி. இது நீரின் அம்சமாகையால் சிறு நீர் கழிப்பதோடு ஆணின் இன்பச் சுரப்பான சுக்கிலத்தையும், பெண்ணின் இன்பச் சுரப்பான சுரோணிதத்தையும் வெளிப்படுத்தி போகானந்தம் விளைவிக்கும்.

இவை ஐந்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரியம் செய்வதால் கர்மேந்திரியங்கள் எனப்பட்டன.

பஞ்ச தன்மாத்திரைகள்:
1. சுவை 2. ஒளி 3. ஊறு 4. ஓசை 5. நாற்றம் என வகுக்கப்பட்டு ஐந்து நுண்ணிய பொருள்கள் எனப்படும்.

இவற்றின் இயல்புகள்:
1. சுவை (ரசம்): நீரின் தன் மாத்திரையான இது நாவில் நீர் சம்பந்தமிருப்பதால் அந்த நாவிலிருந்து அறு சுவைகளின் பேதங்களை உணர்விக்கும்.

2.ஒளி (ரூபம்): நெருப்பின் தன்மாத்திரையான இது, கண்களில் நெருப்பின் இயல்பு சம்பந்தமிருப்பதால் பத்து விதமான உருவங்களையும் விழிவழியே காண்பிக்கும்.

3.ஊறு (ஸ்பரிசம்) காற்றின் தன்பாத்திரையான இது உடலில் பிராணன் முதலான வாயுக்கள் அனைத்தோடும் வியாபித்திருப்பதால் தொட்டுக்காட்டும் ஊறு குணத்தை உடலிலிருந்து உணர்த்தும்

4. ஓசை (சப்தம்) ஆகாயத்தின் தன் மாத்திரைகளான இது காதின் உட்புறத்திலுள்ள மெல்லிய ஜவ்வின் வழியாக ஓசையை உணர்விக்கும்.

5. நாற்றம் (கந்தம்) நிலத்தின் தன் மாத்திரையான இது மூக்கில் மண் சம்பந்தமிருப்பதால் அந்த மூக்கின் வழியே நறுமணம், துர்கந்தமான வாசனைகளை அறிவிக்கும்.

ஒலியானது ஆகாயத்திலும் செவியிலும் ஒடுங்கும்
ஊறானது காற்றிலும் உடலிலும் ஒடுங்கும்
ஒளியானது நெருப்பிலும் கண்ணிலும் ஒடுங்கும்
சுவையானது நீரிலும் நாவிலும் ஒடுங்கும்
நாற்றமானது மண்ணிலும் மூக்கிலும் ஒடுங்கும்
வாக்கானது (வசனமானது) ஆகாயத்திலும் வாயிலும் ஒடுங்கும்
உணர்வானது (கமனமானது) காற்றிலும் காலிலும் ஒடுங்கும்
வழங்குதலானது, (தானமானது) நெருப்பிலும், கையிலும் ஒடுங்கும்
விடுதலானது (விசர்க்கமானது) நீரிலும், குதத்திலும் ஒடுங்கும்
இன்பமானது (ஆனந்தமானது) மண்ணிலும், குய்யத்திலும் ஒடுங்கும்

அந்தக்கரணங்கள் (அகக்கருவிகள்)
1.மனஸ் 2. புத்தி 3.சித்தம். 4 அகங்காரம் தமிழில் 1.மனம் 2.அறிவு, 3. நினைவு 4.முனைப்பு. என வகுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் இயல்புகள்:
மனம் நினைக்கும், புத்தி நிச்சயிக்கும். அகங்காரம் கொண்டெழுப்பும், சித்தம் மூன்றுக்கும் காரணமாக இருக்கும்.

1. மனம் - இது வாயுவின் அம்சமாகையால் தன் சொரூப குணமான நினைப்பு, மறப்பு என்னும் சங்கல்ப, விகல்பங்களைச் செய்து கொண்டு காற்றைப் போலவே அலைந்து திரியும். இதற்கு அதிதேவதை-சந்திரன். ஸ்தானம்-நாபி (கொப்பூழ், உந்தி)

2. புத்தி: இது நெருப்பின் அம்சமாகையால் பொருட்களின் சுய உருவை நிச்சயிக்கும் உருவ விருத்தியே புத்தியாகும். மேலும் இது செயல்களையும் பொருள் வகைகளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து நிச்சயித்து உணரும். இதற்கு அதிதேவதை-பிரமன். ஸ்தானம்-முகம்.

3.சித்தம்: இது நீரின் அம்சமாகையால் பொருளின் நினைப்பே சித்தமாகும். இது பொறிகளுக்கு சலனத்தை விளைவித்து அதன் வழியே விஷயங்களுக்கு இழுத்துச் செல்லும். சித்தமே மனம். இவ்விரண்டும் ஒரே பொருளாக இருப்பதால் இதற்கும் ஸ்தானம் நாபியாகும். இதற்கு அதிதேவதை திருமால்.

4. அகங்காரம்: இது நிலத்தின் அம்சமாகையால் ஊனுடலை ’நான்’ என்று அபிமானிக்கும் வடிவவிருத்தியே அகங்காரமாகும். இது செயல்களை ஆழ்ந்தாலோசிக்காமல் ‘நான்’ ‘எனது’ என்று அபிமானித்து முனைப்புக் கொண்டு புண்ணிய பாவங்களைச் செய்து கொண்டிருக்கும். இதற்கு அதிதேவதை - ருத்திரன். ஸ்தானம்-இதயம்.

இவை நான்கும் உடலில் வியாபித்து ஞானேந்திரியங்கலையும் கர்மேந்திரியங்களையும் அதனதன் விருத்திகளில் புகுத்துகின்றன.

தாதுக்கள் 7
1.இரசம் (சாரம்) 2. இரத்தம் (உதிரம், குருதி, செந்நீர்) 3. மாமிசம் (ஊன்) 4. மேதஸ் (கொழுப்பு) 5. அஸ்தி (எலும்பு, என்பு) 6. மச்சை (மூளை) 7. ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் (ஆண் பெண் இன்பச் சுரப்பு, வெண்ணீர்)

பஞ்ச கோசங்கள்: (ஐவுடம்புகள்)
1. உணவுடம்பு அல்லது பருவுடம்பு (அன்னமய கோசம்)
2. காற்று உடம்பு அல்லது வளியுடம்பு (பிராணமய கோசம்)
3. மனவுடம்பு (மனோமய கோசம்)
4. அறிவுடம்பு (விஞ்ஞானமய கோசம்)
5. இன்ப உடம்பு (ஆனந்தமய கோசம்)

இவற்றின் இயல்புகள்:
ஏழு தாதுக்களால் எடுத்தது பருவுடம்பாகும். அன்ன சாரத்தினால் பிராணமும் பலமும் அடங்கியிருக்க்பது காற்று உடம்பு. பிராண பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனவுடம்பு. அந்த மனதில் (வித்தை) விஞ்ஞானம் தோன்றுவதால் ஏற்படுவது அறிவுடம்பு. அந்த விஞ்ஞானத்தால் (வித்தையால்) ஆனந்தம் தோன்றும்போது இன்ப உடம்பு ஆகும்.

புளியை அதன் ஓடு மூடிக் கொண்டிருப்பது போல் இவ்வைந்து உடம்புகளும் பரமாத்வாவையும், ஜீவாத்மாவையும் மூடிக் கொண்டு அவற்றைக் காணப்படாமல் செய்வதினால் இவை கோசங்கள் / உடம்புகள் எனப்படுகின்றன.

திருமூலர் தன் அனுபவ வாயிலாகக் கண்ட தத்துவங்கள் 4,00,48,500 எனக் கூறி, அதனைச் சுருக்கி, தொண்ணூற்றாறு என வகைப்படுத்தி, அதனையும் சுருக்கி இருபத்தைந்து எனக் குறிப்பிடுகின்றார்.

திருமந்திரம்: 2138
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிர
மேலுமோ ரைந்து நூறுவேறா யடங்கிடும்
பாலவை தொண்ணூறோ டாறாட் படுமவை
கோலிய ஐயைந்துளாகும் குறிக்கிலே.

சிவவாகிய சித்தர்: 198
பொய்க் குடத்தில் ஐந்தொதுங்கி போகம்வீ சுமாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்திருப்பதே.

சிவவாக்கிய சித்தர்: 213
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும்அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.

சிவவாக்கிய சித்தர்: 262
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.

ஆன்ம தத்துவங்கள்: 24
பூதங்கள் ஐந்து: நிலம், நீர், தீ, வளி, விசும்பு (மண், புனல், அனல், கால், வான்)
தன்மாத்திரைகள் ஐந்து: ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பன. மேற்கூறிய பூதங்கள் ஐந்தின் சூக்கும நிலையே தன்மாத்திரைகள். இவையே பஞ்ச பூதங்களுக்குக் காரணமாயும், அவற்றின் உதவியோடு இந்திரியங்கள் நுகர்ச்சியில் தொழிற்பட ஏதுவாக இருக்கின்றன.
ஞானேந்திரியங்கள் ஐந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி
கன்மேந்திரியங்கள் ஐந்து: வாய், கால், கை, எருவாய், கருவாய் என்றும் வாக்கு, பாதம், பாணி, பாயும், உபந்தம் எனவும் குறிப்பிடப்படும். இவை ஐம்பூதங்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு பேசல், நடத்தல், கொடுத்தல், விடுத்தல், இன்புறல் என்னும் தொழில்களைச் செய்யும்.
அந்தக் கரணங்கள் நான்கு: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன. இந்திரியங்களால் புறத்தே செயல்பட, அவைதரும் பதிவுகளை அகத்தே தொழிற்படுத்தும் அகக்கருவிகள் இவை.

மனம் யாதானும் பொறியுணர்வைப்பற்றி இன்னது இன்னதாகலாம் என ஐயநிலையில் நிற்கும்.புத்தி அதனை இன்னது என நிச்சயிக்கும் , இதைச் சவிகற்பக் காட்சி என்பர். அக்காட்சிக்கு வேண்டிய முயற்சிக்கு உடம்பில் வாயுக்களையும், இந்திரியங்களையும் ஊக்குவிப்பது அகங்காரம். அங்ஙனம் வந்த நிச்சய உணர்வை முன்னரே பெற்றுள்ள உணர்வுகளோடு இணைத்து அதனைப் பொருட் பெற்றி வடிவில் உட்கோடல் சித்தத்தின் தொழில். ஆன்மா, மனம் முதலிய கருவிகளைக் கொண்டு உணரும் போது பற்றுதல், நிச்சயித்தல், ஒருப்பட்டு எழுதல், சிந்தித்தல் என நான்கு வகைப்படும். புத்தி இன்னதென்று நிச்சயிக்கும்போது அதனை முன்னைய பழக்கம் பற்றி வினைக்கீடாக அதை தனக்கு உறவாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ உணரும். அந்த உணர்தலால் இன்பம், துன்பம், மயக்கம் எனுக் குணங்கள் ஒன்று பரிணமிக்கும். அதையே ஆன்மா உணரும்.

இந்த ஆன்ம தத்துவம் 24 உடன் கூடிய ஜீவாத்மா என்பதைச் சேர்த்து குறுகிய தத்துவங்கள் 25 எனக் கொள்ளவும்.
இருபத்தைந்து ததுவங்களால் உடம்பு எவ்விதம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதை முன்னரே விளக்கியுள்ளது காண்க.

வித்தியா தத்துவம்: ஏழு.
ஊழி, ஊழ், தொழில், அறிவு, விழைவு, ஆள், மருள் எனவும் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் குறிக்கப்பெறும். இவற்றுக்கான விளக்கங்கள் மிகவும் விரிவானவை எனவே இங்கே குறிப்பிட இயலாது.

மாயைப் பற்றி மட்டும் கொஞ்சம். மாயை எனப்படுவது மலங்களுள் ஒன்றன்று. அஃது தூலம், சூக்குமம், பரம் என மூவகைப்படும். தூலமாய் நின்ற அவத்தையில் பிரகிருதி மாயை எனவும், சூக்குமமாய் நின்ற அவத்தையில் அசுத்தமாயை எனவும், பரமாய் (அதிசூக்குமமாய்) நின்ற அவத்தையில் சுத்தமாயை எனவும் அழைக்கப்படும்.

சிவதத்துவம்: ஐந்து.
சுத்தமாயை (தூமாயை)யினின்றே சிவ தத்துவங்கள் ஐந்தும் தோன்றின. இவை சுத்த தத்துவங்கள் எனப்படும். சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்திதத்துவம், சிவதத்துவம்.

இதுகாறும் கூறிவந்த முப்பத்தாறு தத்துவங்களும் அகக் கருவிகள் எனப்படும்.

புறக்கருவிகள் : 60.
அவற்றின் கூறுகள் கீழ்க்கண்டவாறு.

நிலம்: மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை 5
நீர்: நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் 5
தீ: ஊண், உறக்கம், உடனுறைவு, உட்கு, மடி 5
வளி: ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் 5
வெளி: வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை 5
செய்தற்கருவி: பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல், மகப்பெறுதல் 5
அறிவுவளி: உயிர்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவு காற்று 5
தொழில்வளி: தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று 5
நாடி: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச் செவி நரம்பு, உள் நாக்கு நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு 10
ஓசை: நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை 4
முப்பற்று: பொருட்பற்று, புதல்வற்பற்று, பொய்யுலகபற்று 3
(மண், பெண், பொன்)
முக்கணம்: அமைதி, ஆட்சி, அழுத்தல் 3
இவ்வாறாக புறக்கருவிகள் 60
(உட்கு=பயம், இவறன்மை=குரோதம், செருக்கு=ஆணவம்)

ஆக மொத்தம் தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்பர்.

திருமந்திரம்: 2107
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ் செய்திருந்த புறநிலை
ஓதும் மலங்குண மாகுமா தாரமோ
டாதிய வத்தை தொண்ணூற் றாரே.

இவற்றை ஞானாமிர்தம் எனும் சைவ சித்தாந்தப் புத்தகத்தில் இலக்கியச் சுவையோடு காணலாம்.

குறிப்புரை (References) :

திருமந்திரம்: 1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

திருமந்திரம்: 2385
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.



1. சித்தர் பாடல்கள், அரு. இராமனாதன், பிரேமா பிரசுரம், சென்னை.
2. திருமூலர் திருநெறி, நா. சுப்பிரமணியன், பொன்முடிப் பதிப்பகம், காரைக்குடி.

3 comments:

Anonymous said...

excellent

Anonymous said...

Haiyoooooooooo.....
Irandu naalaga padikiren ,padikiren,
Muttai mandaile idhil ulla vilakkangal purindhadhu, En muttaal mandaiyile vaarththaigal padhiyve illai... Ennama vilakkam achariyam aachariyam aachariyam....

Uthamaputhra Purushotham said...

@Anonymous
நன்றிகள். எல்லாப் புகழும் அறிவுக் களஞ்சியங்களான சித்தர்களுக்கே. சித்தர் நெறிகள் மிக மிக ஆழமனாவை; இயற்கையின் இரகசியங்கள் போலவே.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...