Friday, July 17, 2009

திருக்குறள்: 43


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

43


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.


பொழிப்புரை (Meaning) :
மறைந்த மூதாதையர் (பிதிரர்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தான் என்று ஆங்கே ஐ வகையினரையும் ஒழுகி ஓம்புதல் தலையாய கடமை.


விரிவுரை (Explanation) :
வாழ்ந்து மறைந்த மூதாதையர் அதாவது பிதிரர், இறை, வருகை தந்துள்ள விருந்தினர், சுற்றத்தார் எனும் சொந்தங்கள் மற்றும் தான் எனும் இந்த ஐ வகையினரையும் நெறி கெடாமல் ஒழுகி ஓம்புதல் தலையானது, இல் வாழ்க்கையில்.

தென் புலத்தார் என்பது தன் குலத்தின் இறந்த முன்னோர்களைக் குறிக்கும். தென் திசை கடல் கோள்களால் ஆட்பட்டமையால் அத் திசை இறந்தோருக்கு என்றாகியது. இறந்தோருக்குச் செய்யப் படும் நீர்க் கடன்கள் என்பவை அவர்களின் ஆத்ம சாந்திக்காக என்றாலும் அது உண்மையில் அவர்களை நினைவு படுத்திக் கொள்ளும் ஓர் அறச் செயலாகும். அதைப் போலவே இறை ஒழுகுதலின் அவசியத்தை ஏற்கனவே பேசி இருக்கின்றார். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள நண்பர்கள் அன்பர்கள் எனவே அவர்களை மனம் புண்படாத வாறு ஓம்புதல் பண்பு. சுற்றத்தார் என்பது தம்மைச் சுற்றியுள்ளோர் என்று பொருள் படும்படியான பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள். அவர்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இறுதியில் சொல்லப்பட்ட ’தான்’. அதாவது மற்றவர்களுக்கு முதலில் மதிப்பு, பிறகே தான் என்பதைக் குறித்தல் வேண்டும் என்பது ஒரு கலாச்சாரத்தின் பண்பு. ஆகவே வள்ளுவர் ‘தான்’ என்பதை இறுதியில் கூறி உள்ளார். ஆனால் உண்மையில் தன்னைப் பேண வேண்டியது ஒருவரின் முதல் கடமை. தான் நன்றாக இருந்தாலே மற்றவர்களைப் பேண இயலும்.

எனவே இந்த வகையிலான ஐந்து இடத்தோரையும் பேணி ஒழுகுதல் இல்லறத்தானின் தலையாய கடமை ஆகும் என்கின்றார் வள்ளுவர்.


குறிப்புரை (Message) :
முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன்னைப் பேணுதல் இல்லறம் ஒழுகுபவரின் தலையாய கடமை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தென்புலத்தார் - பிதிர்கள், சொந்த மூதாதையர்
ஒக்கல் - சுற்றத்தார்
ஆறு - ஒழுக்கம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.

திருமந்திரம்: 286
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

திருமந்திரம்: 287
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.

திருமந்திரம்: 288
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

திருமந்திரம்: 289
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

ஔவையார். மூதுரை: 17
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

ஔவையார். நல்வழி: 10
ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...