Saturday, July 18, 2009

திருக்குறள்: 44

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

44


பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.


பொழிப்புரை (Meaning) :
பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்டு வாழும் வாழ்க்கை உடையவராயின், அவர் தம் வாழ்க்கை வழியில் குறைவு என்பது எக்காலத்திலும் இருக்காது.


விரிவுரை (Explanation) :
பழிக்கு அஞ்சித் தான் சேர்த்த பொருளைப் பிறரோடு பகுத்து உண்ணும் வாழ்க்கை உடையப் பெற்றோருக்கு அவர் தம் வழியில் குறைவு என்பது எப்போதும் இல்லை. அதாவது எப்போதும் நிறைவே அவர் தம் வாழ்க்கை வழியில் என்பது பொருள்.

அதாவது பொருள் சேர்ப்பதல்ல நிறைவு; பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணுதலே உண்மையில் ஒருவருக்கு என்றைக்கும் நிறைவைத் தரும் என்பது பொருள். இதுவே பகுத்துண்ணுவதே பண்பிற்கு அழகு என்றானது.

பகிர்ந்து உண்ணுவதால் குறைவு ஏற்படும் என்பது வெளிப் பார்வைக்கு, வெளி எண்ணிக்கை மட்டுமே தோன்றும். உண்மையில் பகிர்தல், ஈதல் என்பதே இருப்பதைக் காட்டிலும் நிறைவைக் கொண்டு தரும் உத்தியாகும்.

ஆக, பழிக்காகவாவது அஞ்சி ஒருவர் முன்னர் சொன்ன மூவர் மற்றும் ஐந்து இடத்தாரோடாயினும் பகிர்ந்து உண்ணுதலை உடையவராயின் அவர்தம் வாழ்வில் குறைவென்பது எப்போதும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.


குறிப்புரை (Message) :
பகுத்து உண்ணுதல் எப்போதும் நிறைவான வாழ்வைத் தரும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
எஞ்சல் - குறைதல், மிஞ்சுதல்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 250
ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

திருமந்திரம்: 252
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

திருமந்திரம்: 255
தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம்: 267
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

திருமந்திரம்: 268
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

ஔவையார். கொன்றைவேந்தன்: 4
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஔவையார். கொன்றைவேந்தன்: 70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

ஔவையார். நல்வழி: 9
ஆற்றுப் பெருக்கற் றடிகடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.

***



0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...