Saturday, July 25, 2009

திருக்குறள்: 51


அதிகாரம்

:

6 வாழ்க்கைத் துணை நலம் திருக்குறள்

:

51


மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


பொழிப்புரை (Meaning) :
இல்லறத்திற்கு தக்க மாட்சிமைகள் உடையவள் ஆகி, தன்னை மணந்து கொண்டவனது பொருள் வளத்திற்குத் தக்கவளாய் வாழ்க்கை நடத்துபவளே இல் வாழ்க்கைக்குச் சிறந்த துணையாவாள்.


விரிவுரை (Explanation) :
இல்லறத்திற்குத் தக்க ஒழுக்கத்துடன், நற் குணங்களுடன், பெருமையுடன, தன்னை மணந்து கொண்டவரின் பொருள் வளத்திற்குத் தக்கவாறு, இல் வாழ்வை நடத்துபவளே, அவளின் கணவனின் வாழ்க்கைக்குத் துணை ஆவாள்.

குடியின் மேன்மை அறியாமலோ, ஒழுக்கங் கெட்டோ அன்றில் கணவனின் பொருள் நிலையை மீறிச் செயல்படுபவளோ கணவனிற்குத் துணையாக இருக்க முடியாது என்பது தெளிவு. இல்லத்தவள் மனை மாட்சிக்குக் கணவனிற்குத் துணை நிற்க வேண்டுமே தவிர ஊறு செய்வது அவர்களது இல்லற வாழ்விற்குக் கேடாகும். வருவாய்க்கு மீறிச் செலவு செய்பவர் நிச்சயம் துன்பமடைவர் என்பது சொல்லாப் பொருள்.

பெண்ணானவள் தான் செல்வச் சீமான் வீட்டில் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அன்றில் ஏழை வீட்டில் பிறந்தவளாக இருப்பினும் புகுந்த வீட்டின் பெருமைக்கும் வளத்திற்கும் தக்கபடி தன்னை மாற்றிக்கொண்டு வாழக் கடமைப்பட்டவள். கணவனின் வளமோ அன்றில் புகுந்த வீட்டின் வளமோ தனக்கு உகந்ததல்ல என்று எண்ணுபவள் அத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம். மாறாக பிறந்த வீட்டின் பெருமை பேசி, கணவனின் பொருள் வளத்தை மீறியோ, குறைத்தோ செயல் படும் பெண் கணவனிற்கு உகந்த துணை அல்ல. அந்த இல்லறம் இனிமையாக விளங்காது.

இல்லம் எனப்படுவது வெறும் கட்டிடத்தை அல்ல, அங்குள்ள தலைவனையும், இல்லத்தரசியையும், அவர் தம் மக்களையும், இதுகாறும் அவர்களின் குடும்பம் பெற்ற நற்பெயரையும் குறிக்கும் சொல். எனவே இதில் எதற்கும் ஊறு விளைவிக்காது, கண்ணியத்துடன், பெருமையைக் குன்றச் செய்யாது எல்லா நல் அறங்களையும் ஒழுகி, கணவனின் வருவாய்க்குள் குடும்பம் நடத்துபவளே இல்லத் தலைவனிற்குத் துணையாக இருக்க முடியும். அவ்வாறு இருப்பதும் அவளுக்குத்தானே பெருமை.


குறிப்புரை (Message) :
கணவனின் வருமானத்திற்குள், மாண்புடன் இல்லறத்தை நடத்தத் தெரிந்தவளே, அவனிற்குப் பொருத்தமான துணையாவாள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மாண்பு - மாட்சிமை, ஒழுக்கமுடைமை


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 448
அகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
.(1). கடலிடம்
.(2). சீவரும்

திருமந்திரம்: 449
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே
.(1). மாபோதகமே

திருமந்திரம்: 450
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
இணக்கமறிந்து இணங்கு. 19
அறனை மறவேள். 30
குணமது கைவிடேல். 36
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
நன்மை கடைப்பிடி. 65
நாடொப்பன செய். 66
பொருள்தனைப் போற்றி வாழ். 85

ஔவையார். கொன்றைவேந்தன்:
ஒருவனைப் பற்றி யோரகத் திரு. 10
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 13
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். 81


ஔவையார். நல்வழி : 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் இழந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

ஔவையார். நல்வழி : 34
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாரும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன் வாயிற் சொல்.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...