Wednesday, August 5, 2009

திருக்குறள்: 62


அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 62
Chapter : 7

Children

Thirukkural

: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பொழிப்புரை :
ஏழ் பிறவிக்கும் தீயவை சாராது, பழி உண்டாக்காத பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால்.


No evil touches them for seven births for those who beget blameless children.


விரிவுரை :
பழி உண்டாக்காத பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், எழு பிறவிக்கும் தீயவை அண்டாது.

அறிவுள்ள மக்களைப் பெறுவது பெறற்கரிய பேறு. அதனினும் பழி படாத பண்புள்ள மக்களைப் பெறுதல், பெற்றவர்களுக்கு இனிவரும் ஏழு பிறவிகளுக்கும் தீயவை வந்து தொடாது.

பழிக்கஞ்சி, ஒழுக்க நெறி நின்று வாழும் நற் குணங்களுடைய மக்களைப் பெற்றிருந்தால் துன்பங்கள் இராது தானே. அதுவும் பண்புடைய மக்கள் என்றாகிவிட்டால் அவர்கள் சான்றோரே. சான்றோரைப் பெற்றோர் எனும் புகழ்ச்சி அம் மக்களைப் பெற்றவர்களை ஏழ் பிறவிக்கும் நின்று துன்பங்களிலிருந்து காக்குமாம்.

பிறக்கும் பொழுதே அனைவரும் சான்றோர்களாய்ப் பிறப்பதில்லை. எனவே இங்கே மக்களை ஈன்றதை அல்ல அவர்களைப் பண்பாளர்களாக வளர்த்தெடுப்பதை வலியுறுத்துகிறது. பெற்றோரின் வளர்ப்பும், அவர் வாழும் சமூகச் சூழ்நிலைகளே ஒருவரை நல்லவராக அல்லாதவராகவோ செய்கின்றது. எனவே மக்களைச் சான்றோர் ஆக்குவதற்கான சூழ்நிலைகளை பெற்றோர் செய்து, வாய்ப்பினைக் கொடுத்து அவரை நன் மக்களாய் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது இக்குறளின் உட் கருத்து. முதலில் பெற்றவர்கள் பண்புடையானவர்களாக இருந்தால்தான் மக்களும் பண்புடையவர்களாக இருப்பார்கள். போட்டதுதானே முளைக்கும்.

மனித ஆன்மாவிற்கு ஏழ் பிறவி என்பது ஒருவகை நம்பிக்கை. அதாவது மரணத்தில் ஆத்மா அழிவதில்லை என்பதும் அவரவர் செய்யும் பாவ, புணியங்களுக்கேற்ப மறுபிறவி உண்டு என்பதும், அப்பிறவிச் சுழற்சியினின்று கட்டறுத்து வீடு பெறுதல் என்பதே மனிதனின் நோக்கம் என்றும் கடவுள் வாழ்த்தில் ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். எனவே உயிர்களின் மறு பிறப்புக்களை அவற்றின் அறிவின் தன்மைக்கேற்ப ஏழு வகை என்று சொல்கின்றார்கள். அதாவது தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்பவை
எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். மறுபிறப்புக்கள் மொத்தம் ஏழு என்பதல்ல ஏழு வகை என்பதே சரியானது.

பெற்றோர் என்பதற்கே மற்ற எம்மொழிகளிலும் இல்லாத சரியான பொருள் தமிழிலேயே உண்டு என்பதை ஏற்கனவே இந்த அத்தியாயத்தின் முகவுரையில் பார்த்தோம். அதாவது பெற்றோர் என்பதற்கு மக்கட் செல்வத்தை முயங்கிப் பெற்றவர்கள்; வாங்கிக் கொண்டவர்கள் என்பது பொருள். அவர்கள் மக்களை உருவாக்குவதில்லை மாறாக முயற்சித்துப் பரிசிலாகப் பெறுகின்றார்கள். பரிசில் என்றால் பெற்றவர்களின் வினைப் பயனிற்கேற்பவே மக்களும் அவதரிக்கின்றார்கள், வழங்கப் படுகின்றார்கள். அதைப் போலவே நடப்பு வாழ்வின் வினைப் பயன்களிற்கு ஏற்ப மறுபிறப்போ முக்தியோ பெறுகின்றார்கள். மறுபிறப்புப் பெறும் தாய் தந்தையருக்கு நல் மக்களைப் பெற்ற பயனின் தாக்கம் ஏழ் வகைப் பிறவிக்கும் உண்டு என்பது வள்ளுவரின் வாக்கு.

இக்குறளில் வள்ளுவர் ஏழ் பிறப்பு என்றமை உயர்வு நவிச்சிக்காக அல்ல. இருவினைப் பயன், மறுபிறப்புக்கள், வீடுபேறு என்பதைப் போன்றே ஏழ் பிறப்பு என்பதும் ஒரு நம்பிக்கைக் கொள்கையே. இவை வள்ளுவரின் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதைக் காட்டிலும் சித்தாந்தக் கருத்துக்கள் என்று கொள்வதே சரி. காரணம் இவையே சித்தர்களின் வாழ்வியல் தத்துவங்களும் ஆகும். குறளின் கவிதை நயத்திற்கான வார்த்தைச் சித்து மட்டுமல்ல வாழ்வியலின் கூறுகளை, நளினங்களை அவற்றின் பிறப்பு, இறப்பு அதை மீறிய வாழ்வுத் தொடர் பற்றிய நுணுக்கங்களையும், தெளிவையும் உணர்த்தும் வள்ளுவரும் ஒரு சித்தரே.

ஆக பெற்றோர் உத்தம புத்திரர்களைப் பெற்றால் எழு வகைப் பிறவிக்கும் நலனே.

குறிப்புரை :
உத்தம புத்திரர்களை உருவாக்கினால் ஏழ் வகைப் பிறவிக்கும் நலனே.

Beget blameless children to benefit the good for ever.

அருஞ்சொற் பொருள் :
பண்பு - பணிவும் அன்பும் கலந்த நல் ஒழுக்கம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 416
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

திருமந்திரம்: 417
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே

திருமந்திரம்: 418
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே

திருமந்திரம்: 419
தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே

திருமந்திரம்: 420
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

மாணிக்கவாசகர். திருவாசகம்:
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

புலவர் புலமைப்பித்தன்:
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அது
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே...

ஔவையார். மூதுரை: 22
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங் காயீந்தேல்
முற்பவத்திற் செய்த வினை.

ஔவையார். நல்வழி: 1
புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாட் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.

***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...