Monday, August 10, 2009

நான் ரசித்த மழலைகள்

இலக்கணப் பிழை:
ஒரு குழுந்தை அதன் தோழக் குழந்தையிடம் சொல்லிற்று: “எங்க அப்பா நாளைக்கு மிட்டாய் வாங்கிக்கிணு வந்துச்சே”. அது நேற்று நடந்த செயலா, அல்லது நாளை வாங்கி வருவாரா என்பதன் இரண்டுக்குள் கிடக்கும் உண்மை. இவற்றை சிந்த்திதுப் பார்த்தால் தமிழில் ‘Thesaurus' எழுதுவதற்கு மிகவும் உதவும். எப்படி எல்லாம் வாக்கியத் தவறுகள் ஏற்படலாம், அதைச் சரியாக எப்படியெல்லாம் மாற்றி அமைக்கலாம் என்பதற்கு இது உதவும் தானே.

தமிழீஸ் எனும் சுகம்:
என் மகன் வெளிநாட்டில் பிறந்து வளர்கின்றான். இந்தியாவிற்கு வந்த போது வயது மூன்றரை. மழலை கொஞ்சிற்று. சில. இரண்டு கைகளையும் ஜெட் விடுவது போல் தூக்கி வைத்துக் கொண்டு அவன் அம்மாவிடம் எப்போதும் சொல்வது “தூக்கு மி அம்மா”.

மாமனின் மனைவி வசந்தியை ‘மாமி’ என்று தமிழ் சேர்த்து ‘வசந்தா மாமி’ என்று அழைத்த செல்லம், அம்மாவை அம்மா என்றும் மாமி என்றும் இரண்டும் கலந்து சொல்லும் செல்லம், இப்போது வசந்தா மாமிக்கும் அவனாகவே கண்டுபிடித்துக் கொண்ட சொல் ‘வசந்தா அம்மா’.

கவனிப்பு, கண்டுபிடிப்பு:
இந்தியாவில் எங்கள் வீட்டின் முன்பு போன எருமை மாடுகளை என் தமக்கைப் பெண் இவனைத் தூக்கிக் கொண்டு சென்று காட்டியபோது, ஆச்சரியப் பட்ட குழந்தையின் கண்டு பிடிப்புக்கள். முதல் மாட்டைக் காட்டி அது ‘அப்பா மாடு’, இரண்டாவது மாட்டைக் காட்டி ‘இது அம்மா மாடு’, மூன்றாவது சிறியதாக இருந்த மாட்டைக் காட்டி ‘இது நான் மாடு’. அதில் ஒரு மாடு சாணம் இட, இவன் வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு சொல்லுவது ‘யாக்’, shame, shame.

வீதியில் யாரோ எதையோ கூவிச் சென்றால், அதைப் பிடித்துக் கொண்டுவிடுவான். அதையே அவனும் கூவிப் பார்ப்பான். இப்படித்தான் நாம் ‘பெங்களூர்’ போவோமா என்று கேட்டால், அன்றைக்கு முழுவதும் அவனாக ‘பெங்களூர்’ ‘பெங்களூர்’ என்றே சொல்லி விட்டு, ஒவ்வொரு வாக்கியத்திலும் அது பொருந்துகிறதா என்று சொல்லிப் பார்த்துக் கொள்கின்றான். வென் ஷல் வி கோ டு பாங்களூர்’.

வீதியில் ஒரு ஐஸ்க்ரீம் வண்டி வர, என் மனைவி இவனையும் தூக்கிக் கொண்டு போய், அதில் எல்லாக் குழந்தைகளுக்கும் ஐஸ்கீரிம் வாங்கிக் கொடுத்து, அதற்குரிய பணத்தைக் கொடுத்து விட்டு, ஐஸ் வண்டிக்காரரிடம் கடைசியில் மீதத்தை வாங்கிக் கொண்டு, கடைசி ஐஸ்கீர்மையும் வாங்கிக் கொண்டு திரும்பினார். அவர் மடியில் இருந்த இவன், முதலில் எல்லாக் குழந்தைகளும் வாங்கிச் செல்லும் கவனத்தில் அம்மா ஐஸ்கிரீம் காரனுக்குக் கொடுத்த பணத்தைப் பார்க்கவில்லை. ஆனால் கடைசியில் பாக்கியை வாங்கியதையும், ஐஸ்கிரீம் வாங்கியதையும் கவனித்திருக்கிறான். இது நடந்து மூன்று, நான்கு நாட்களுக்குப் பிறகு மதுரையில் எங்கள் சொந்தக் காரர் வீட்டிற்குப் போனபோது அவர்களுடைய குழந்தைகளுடன் சின்ன மிதிவண்டியை ஓட்டி விளையாடினான். இப்போது அவனாகவே அந்த வண்டியை ‘ஐஸ்க்ரீம் வண்டியாக’ பாவனை செய்து ‘ஐஸ்’ என்று கூவினான். சரி ஐஸ்காரரே இங்க ஒண்ணு கொடுங்க என்று நாம் சொன்னால், காற்றில் கையைக் காட்டி, வாயில் எதையோ முணு முணுத்து இந்தாங்க என்று கொடுப்பான். சரி என்று அடுத்த குழந்தையைக் காட்டினால், wait என்று சொல்லிவிட்டு, take the money என்று இன்னும் ஏதோ காற்றில் கொடுத்தான். பாக்கியாம். எவ்வளவு பணம் என்றால் சிக்ஸ்டி பைவ் டாலர் என்றான். உலகத்திலேயே ஐஸ்கிரீமையும் கொடுத்து, காசையும் கொடுக்கும் ஒரே ஐஸ்காரர். பணத்தை வாங்கிக் கொள்ளவில்லையே என்றால் புரியவில்லை. ஏனென்றால் ஐஸ்வண்டிக்காரன் கொடுத்ததைத்தானே பார்த்திருக்கிறார், வாங்கியதை அல்லவே.

சமூகத் தாக்கம்:
மதுரையில் விளையாடிய குழந்தை இவனைக் காட்டிலும் கொஞ்சம் பெரியவள். பக்கத்து வீட்டுக் குழந்தை வந்து கேட்டது ‘ஏய் நம்ம ரன்னிங் ரேஸ் ஓடலாமா’. அவள் ஒற்றைக் கையைத் தூக்கி காட்டி, ”போடா ங்கோ” என்றாள். சினிமாவோ, அல்லது அக்கம் பக்கம் பார்த்த மொழியின் பாதிப்பு. அவர்களுக்குள் நடக்கும் சம்பாசணையை நான் பார்க்கிறேன் என்றதும் என்னைப் பார்த்து ஒரு நெளிப்பு, ஒரு சிரிப்பு.

புதுமை:
எனது தமக்கையாரின் குழந்தைகளில் மூத்தவன் சிறியவனாக இருந்த போது, ஒரு நாள், ஒரு பாட்டை அவனாக வித்தியாசமாகப் பாடிக் கொண்டே வந்தான். வயது மூன்று இருந்திருக்கலாம். பேச்சு நன்றாக வந்து விட்டது. இருந்தும், த்ராத.. த்ராத.. த்ராத ரத்ர த்ரா ரத்ர த்ராத. த்ராத... த்ராத... என்று புதிய முறையில் ஒரு பாடலைப் பாடிக் கொண்டு வந்தான். அதாவது அப்போதெல்லாம் டிவிக்களில் அடிக்கடி காட்டப்பட்ட பாடல் ‘ராஜா, ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா’, அதைப் புதுவிதமாகப் பாடினான்.

புத்தம் புது வார்த்தை:
எனது தமக்கையாரின் மகள், அவள் சிறியாதாக இருந்த போழ்து, இரண்டு அல்லது இரண்டரை வயதிருக்கும்போது, என்னிடம் வரும்போதும், அவளாக இருக்கும்போதும் ஒரு புதிய வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருந்தாள். ’ப்பளகா’, ‘ப்பளா கா’. என்று இரண்டு முறை சொல்லி விட்டு விரல் சூப்புவாள். என்னடா சொல்கிறாள் என்று பார்த்தால், என் தமக்கையார் வீட்டிலும் யாருக்கும் புரியவில்லை. பிறகு ஒரு சமயம் TV போட்ட போது ‘இஞ்சி இடுப்பழகா...’ என்ற பாடல் வந்தவுடன், டிவியை நோக்கிக் கையைக் காட்டி சொன்னாள் ‘ப்பளா கா’. இப்போது புரிந்தது ‘இடுப்பழகா’ வார்த்தையில் அவளுக்குப் பிடித்தது ‘ப்பழா கா’.

இமிடேசன்:
இன்னொரு குழந்தை வயது மூன்றரை இருந்திருக்கும், கிரிக்கெட் மட்டையும், பந்தும், இரண்டுமே பிளாஸ்டிக்தான் வைத்திருந்தான். அவனாக அந்தப் பந்தை தனது மட்டையால் அடிக்க முயலுவான். விளையாடுவோமா என்றேன். ம்ஹ்ம். சரி என்று ரெடியானான். நான் பாட்டிங், அவன் போலிங் என்று ஒத்துக் கொண்டு, அறையின் சுவர் ஓரத்துக்குச் சென்று போலிங் செய்யத் திரும்பி நின்றான். போடு என்றால் வெயிட் என்று கத்திவிட்டு பந்தை முகத்தருகே கொண்டு சென்று, ஆண்டவனை நினைத்துத் தியானித்தான். இதோ பந்தைப் போடப் போகிறான் என்று பார்த்தால், தூ என்று அதில் மூன்று முறை எச்சில்வராமல் துப்புவதுபோல் துப்பிவிட்டு, அவனது நிஜாரில் உரசி விட்டு, போலிங் செய்தான். இப்போது நான் ‘அய்யே இது என்ன’ என்றால், அவனது பதில் ‘அப்பியித்தான் போல் பண்ணனும்’.

டைரக்ஷன்:
அதே குழந்தை, ஒரு பிளாஸ்டிக் மெஷின் கன் வைத்திருந்தான். அவன் வாயாலேயே டிஸ்யும், டிஸ்யும், டும், டும் என்று அவனாக பின்புல இசை அமைத்து முழங்காலில் மண்டியிட்டு, பறந்து கொண்டு, சோபாவிலிருந்து குதித்துக் கொண்டு என்று வித விதமாக நின்று சுடுவான். ஒரு முறை அவன் சுடும்போது மேல் பட்டதாய் பாவித்து ’ஆ’ என்றால், அவன் அப்பியி இல்ல என்று சொல்லி அழகாகச் சாவது எப்படி என்று ஸ்லோ மோஷனில் நெஞ்சைப் பிடித்துச் சுருண்டு, கீழ் விழுந்து ’ஆஹ்ஹ்ஹ்’ என்று சொல்லி இறப்பதை நடித்துக் காட்டினான். சரி சாவதுன்னா என்னாப்பா? ’அப்பிடியீ கண்ணை மூடிக்கிணு தூங்கணும்’. வள்ளுவர் எங்கோ இதைச் சொல்லி இருக்கார், அதை அப்புறம் பார்ப்போம்.

கோஇன்சிடென்ஸ்:
இன்னொரு இண்ட்ரஸ்டிங் எபிசோட். இதே மெசின் கன்னை வைத்துக் கொண்டு அவன் இன்னதென்று இல்லாது சகலத்தையும் குறிபார்த்துச் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில்தான் இந்திராகாந்தி அம்மையாரைச் சுட்டுக் கொன்ற செய்தி டிவியில் வந்து கொண்டிருந்தது. வீட்டில் அனைவரும் அதை மும்முறமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவருக்கொருவர் இந்திரா காந்தியை யார் சுட்டது என்று கேட்டும், பதில் சொல்லியும் செய்தியைப் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு முறை அவரது பாட்டி அவனிடம் கேட்டார். யாருப்பா இந்திராகாந்தியைச் சுட்டது. ”நான் தான்” என்றான். வெகு நாளைக்கு தான் தான் இந்திராகாந்தியைச் சுட்டதாய் எண்ணிக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தான். வருந்துவதா, சிரிப்பதா என்று தெரியாமல் எல்லோரும் ரசித்தார்கள். குழந்தை சுடும்போது இந்திராகாந்தி டிவியில் இறந்தால் யாரென்ன செய்ய முடியும்?

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்:
இன்னொரு முறை ஒரு ஹோட்டலில், எதிர்புறமாக, நேர் எதிர்புறமல்ல, ஒரு நீண்ட டேபிளில் ஒரு பெரிய குடும்பம் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் பக்கவாட்டில் பார்க்கும் அளவில், ஒருவரும் அவரது மகள், இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கலாம், மற்றும் பலரும் இருந்தார்கள். இக்குழந்தை ஒரு தனி நாற்காலியில் நின்று கொண்டு சாப்பிட்டு முடித்திருந்தாள். நான் சென்று உணவை ஆர்டர் செய்துவிட்டுப் பார்க்கும் சமயத்தில் அவர்கள் அனைவரும் உண்டு முடித்து ஐஸ் கீரீமிற்காக காத்திருந்தார்கள். முதல் ஐஸ்க்ரீம், செர்ரி பழத்துடன், அதற்கும்மேல் ஒரு ஃவேஃபர் பிஸ்கட்டோடு அந்தக் குழந்தையின் முன்னர் வைக்கப்பட்டது. வண்ண மயமாக இருந்த அந்த ஐச்க்ரீமின் உயர்ந்த கிண்ணத்தைப் பார்த்து, குழந்தைக்கு ஒரே சந்தோசம். பியரர் அதை டேபிளில் வைக்கும் போது, அதைப் பார்த்துக் குதித்துக் கொண்டிருந்தாள். இப்போது அந்தக் குழந்தையின் தந்தை அந்தக் குழந்தைக்கு ஐஸ்கிரீமில் நேரடியாகக் கை வைத்து விடக் கூடாதே என்று எண்ணியவராய் அதை தனது இடது கையால் தடுத்துக் கொண்டு, வலது கையால் ஃபேஃபர் பிஸ்கட்டை கிண்ணத்தின் மேலிருந்து உருவினார். ரணகளாமாகிவிட்டது டேபிள். அந்தக் குழந்தை கத்திய கத்தலில் மொத்த ஓட்டலும் ஒரு முறை நிசப்தமாகி ஸ்தம்பித்துப் பின்னர் இயங்கியது. ஒரே க்ரீச். அவரின் இடது கையை தன்னால் முடிந்த வகையிலெல்லாம் அடித்துக் கொண்டு, அவரின் முகத்தையும், கழுத்தையும் கிள்ளி, அழுது அவள் செய்த அட்டகாசமெல்லாம் எங்கே அந்த ஐஸ்கிரீம் தனக்கு இல்லையோ என்பதால்தான். அவர் முகத்தை குழந்தையின் சரமாரி அடியிலிருந்து கொஞ்சமாக விலக்கிக் கொண்டு ஒருவழியாக அந்த ஃபேபர் பிஸ்கட்டில் கொஞ்சம் ஐஸ்கீரீமை முகர்ந்து எடுத்து அதற்கு ஊட்டினார். என்ன மாயம் என்கின்றீர்கள். குழந்தை இப்போது அதை மிகவும் ரசித்துச் சுவைத்துக் கொண்டு அந்த இன்பமெல்லாம் கண்ணில் தெரிய, அந்த ஈர, எச்சில் உதடுகளோடு அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவர் போதும் போதும் என்று சொல்லும் வரையிலும் விடாமல் முத்தம் கொடுத்தாள். மொழியே கிடையாது. இன்னும் அக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஆனால் அதன் கோபமும், தாபமும், அன்பும், வெளிப்படுத்திய விதமும் இந்த உலகம் மாத்திரம் முழுவதும் எனதானால் அவளுக்கே எழுதி வைத்து விடலாம். எங்கிருந்து இந்த அறிவு அந்தக் குழந்தைக்கு வந்தது. கோபப்படவும், சந்தோசப்படவும், அன்பைக்காட்டவும். எல்லாம் வினாடிகளில் மாறும் தொடர் உணர்ச்சிகள். பெரியவர்களானால்தான் மூட் மாற நேரமாகும் போல் இருக்கிறது.

பேசுவதே இனிமை: (இம்பெர்சனேசன்)
இன்னொரு குழந்தை, மூன்று அல்லது மூன்றரை வயது ஆகியும் இன்னும் பேச்சு வராமல் அமெரிக்காவில் பார்த்த நண்பரின் குழந்தை. அவர்கள் இந்தியாவிற்கு, சென்னைக்கு விசிட் சென்று திரும்பினார்கள். என்ன ஆச்சரியம், குழந்தை இப்போது பேசிக் கொண்டே இருக்கிறான். அதுவும் மிக அழகாக. எப்படி இந்த மேஜிக் என்று அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தபோது கேட்டேன். அதற்குக் குழந்தையின் அம்மா சொன்னார், சென்னையில் அவர்களது மாமனார் வீட்டில் ஒரு மாதம் தங்கி இருந்தார்களாம். போன இரண்டொரு நாளிலேயே பேச ஆரம்பித்து விட்டானாம். பிறகு வீட்டில் அவரது மாமனாருக்கும், குழந்தைக்கும் தினமும் சண்டையாம். எல்லாருக்கும் தாத்தாவிற்கும், பேரனிற்கும் பஞ்சாயத்து வைக்கவே நேரம் போதவில்லை. தாத்தா பேரனைப் பார்த்துச் சொன்னாராம ‘நீ போடா உங்க வீட்டிற்கு’. அதற்கு அவனும் அதையே திருப்பி அவருக்கு ‘நீ போடா உங்க வீட்டிற்கு’. குழந்தை அப்படியே பிடித்துக் கொண்டு விட்டான். ஊரில் நான் எவ்வள்வு பெரிய மனிதன், என்னைப் பார்த்து இந்த வாண்டு, முளைச்சு மூணு இல விடலே, படவா’ என்று அவர் பொருமினால், நம்புங்கள். அவனும் முடிந்தவரை அதை ரிபீட் செய்கின்றான். தாத்தா டீசிங் செய்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டாலும், குழந்தைகள் பெரியவர்களை அப்படியே இமிடேட் செய்கின்றார்கள். அவனிற்கு வேறு வார்த்தைகள் தெரியாது. அவர் சொல்வதை அவர் சொல்லும் பாணியிலேயே செய்து காட்டுகின்றான். அதில் அவனுக்கு ஒரு அலாதி சந்தோசம். குழந்தைகள் பெரியவர்களையே பிரதிபலிப்பதோடு அவர்களைப் போலவே அதைச் செய்வதில் சந்தோசமும் படுகின்றார்கள்.

முடிவுரை (வாங்க ரசிக்கலாம்):
எனவே நண்பர்களே, டிவி சானல்களில் அழுகைத் தொடர்களையும், பெரிய திரையில் ஓடிப் பிடித்துப், பாடிக் காதலிக்கும் சினிமாக்களையும், அறிவியலிற்குப் பொருந்தாத சண்டைக் காட்சிகளையும் பார்த்துப் பார்த்து என்ன கண்டீர்கள்? அவை அனைத்தும் மாயத்திரையின் பொய்ப் பிம்பங்கள்.

இயற்கையில் அமைந்த வாழ்வை ரசியுங்கள். குழந்தைகளைக் காட்டிலும் ரசிப்பதற்குச் சிறந்ததாய் வேறு எதுவுமே இல்லை. புதுசு, புதுசாய் நிகழ்வுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் இன்ப ஊற்றுக்களே அவர்கள். சமயம் கிட்டும் போதெல்லாம், யாருடைய குழந்தையாய் இருந்தால்தான் என்ன?, மழலைகளின் ரகளைகளை ரசியுங்கள். மகிழ்ச்சி நிச்சயம்.

***

1 comments:

Anonymous said...

Haha... Romba inimaiyaana padhivu,Nalla rasanai aasiriyarukku, Idhu pola innum niraya ezhuthungalen neril paarthathai, rasithathai [Mazhalaigalai patri mattum]

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...