Friday, November 6, 2009

திருக்குறள்:135 (ஆக்கமும் உயர்வும் தருவது ஒழுக்கமே...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 135

ஆக்கமும் உயர்வும் தருவது ஒழுக்கமே...

In English

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று, இல்லை-
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொழிப்புரை :
பொறாமை கொண்டவரிடத்தே ஆக்கம் இல்லாதது போன்றே - ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்வு இல்லை.

விரிவுரை :
பொறாமை நெஞ்சு உடையவர் கண் ஆக்கம் இல்லை, அது போன்று, ஒழுக்கம் இல்லார் கண் உயர்வு இல்லை.

நல் ஆக்கம் எனும் நேர்மறைச் செயலாக்கம் பொறாமை எனும் தீய, எதிர்மறை எண்ணங் கொண்ட இதயத்தாருக்கு சாத்தியம் ஆவது இல்லை. அது போன்றே நல் ஒழுக்கம் அற்ற மனிதருக்கு உயர்வு என்பது ஒருபோதும் சாத்தியம் ஆவது இல்லை. ஒழுங்கீனம் எதிர்மறையானது; இன்னலையும் இழிவையும் தருவது; அதால் ஆக்கத்தையோ, உயர்வையோ தர இயலாதது.

பொறாமை கொண்டவனின் ஆக்கம் பதறுதலுக்கும், தவறுதலுக்கும் இடைப்பட்டுச் சிதறி, தவறுகளால் நிறைந்து, நிறைவு பெறாச் செயலாய், அரை குறையாய் மரித்துப் போகும். எனவே பொறாமை கொண்டோரின் செயல்கள் ஆக்கபூர்வமானவையாக; பயனுடையதாக, முழுமையாக இருப்பதில்லை. அதே போன்று ஒழுக்கமற்றவரின் செயல்களும் கட்டுப்படாதவையாக, ஒழுங்கற்றதாக, ஆக்கபூர்வமற்றதாக, நிறைவற்றதாக, கெடுதலைப் பெருக்குவதாக அமைவதால் அவற்றால் ஒரு போதும் உயர்வைத் தர இயலாது.

ஆக ஆக்கம் என்பது நேர்மறை எண்ணத்திற்கும், பொறாமைக் குணம் இல்லாதாருக்குமே சாத்தியம் என்பது ஒரு மறை பொருள். மேலும் ஒழுக்கம் உடையோருக்கே உயர்வு என்பதும், அவராலேயே பயனுள்ள, ஆங்கங்கள் செய்ய இயலும் என்பது இன்னொரு மறை பொருள். எனவே ஒழுக்கமே பொறாமையற்ற நல் இதயத்தையும் நல்கும் என்பதும் ஈண்டு பெறத்தக்கது.

குறிப்புரை :
ஒழுக்கம் உடைய நெஞ்சு ஆக்கத்தையும், உயர்வினையும் நல்கும்.

அருஞ்சொற் பொருள் :
அழுக்காறு - பொறாமை
ஆக்கம் - படைப்பு, நன்மை, பயன், வளர்ச்சி, முன்னேற்றம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 2091
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

திருமந்திரம்: 2092
இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே.

திருமந்திரம்: 2093
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லார்அவர் பேறெது வாமே.

திருமந்திரம்: 2094
நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

திருமந்திரம்: 2095
மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே.

திருமந்திரம்: 2096
நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே.

ஔவையார். ஆத்திச்சூடி:
44. சக்கர நெறி நில்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 135

Discipline only gives creation and eminence...




In Tamil

azhukkARu udaiyAnkaN Akkam pOnRu illai-
ozhukkam ilAnkaN uyarvu.

Meaning :
Like the jealous mind doesn't benefit creative gains, indiscipline mind never gains excellence.

Explanation :
Envious mind doesn’t possess creative benefits, same way, undisciplined won't have any excellence.

Good creations, the positive deeds are not possible for those who have the jealous and envious attitude. Similarly for those who do not have good discipline, excellence in anything is not at all possible. Indiscipline is negative; it offers only affliction and disgrace; it cannot give creativity or excellence.

The jealous minded creations will be incomplete and die half-way through due to tense, agitation and errors and the scattered work filled with mistakes. Therefore the jealous minder’s deeds will be of no creativity, no useful or incomplete in its sense. Similarly the deeds of undisciplined will be uncontrolled, indiscipline, no creativity, incomplete and devastating and hence they cannot give excellence any time.

Therefore creativeness is possible only for the positive thinking and for those who do not have jealous and envious attitude is one implicit meaning. Also the excellence is possible only for the disciplined and only they can do useful and meaningful creations is another implicit meaning. And hence discipline alone can give good heart with no jealousness is understandable.

Message :
Disciplined mind benefits creativity and excellence.

***

3 comments:

தேவன் said...

நிறைய எழுதி இருக்கிறீர்கள் ஆனால் விளங்க வில்லை,

ஐயா அழுக்காறு - ஆறு அழுக்குகள் என்ன ?

அதற்கே தாங்கள் விளக்கம் அளிக்கவில்லையே,

ஆக்கம் - படைப்பு, நன்மை, பயன், வளர்ச்சி, முன்னேற்றம்.

இதைப்போன்றே அதற்கும் ஆறு வகை அதையும் விளக்குங்கள்.

(தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.)

Uthamaputhra Purushotham said...

நண்பர் கேசவன் அவர்களே,

உங்களின் பின்னூட்டத்திற்கு உண்மையில் மிக்க நன்றி. அதாவது இத்தகைய பின்னூட்டத்தில்தான் நான் செய்யும் தவறுகள் வெளி வருவதாலும், திருத்திக் கொள்ள வாய்ப்பு அமைவதாலும் மிகவும் பயனுள்ளதாகக் கருதுகின்றேன்.

திருக்குறளின் மறை பொருட்களை வெளிக்கொணருவதே இத் தொடரின் முக்கிய நோக்கமாதலால், நிச்சயம் தாங்கள் இடித்துக் கூறினும், மாற்றுக் கருத்துச் சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வேன். இருப்பினும், தாங்கள் உண்மையினை எனக்கு விளக்குவதற்காக, தமக்கு ‘விளங்க வில்லை’ என்று சொல்லி, தம்மைத் தாழ்த்திக் கொண்டு சொன்ன பண்பு கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கின்றேன். உண்மையில் மிகவும் பாராட்டத் தகுந்த உள்ளீடு உங்களது. அடுத்த முறை தாங்கள் உங்கள் மாற்றுக் கருத்தை எந்தவித சங்கோஜமுமின்றிப் பதிவு செய்யுங்கள், மிகவும் விரும்பி வரவேற்கிறேன்.

இனித் தாங்கள் சொல்லிய விபரங்களோடு, எங்கே தவறினேன், எங்கே மாற்றுக் கருத்து உண்மையாகிறது என்பதைப் பார்ப்போம். 17வது அத்தியாயம் அழுக்காறாமை பற்றி இருக்கும்போது, ஒழுக்கமுடைமையில் அழுக்காறு பற்றி ஏன் பேசுகின்றார் என்றே எண்ணம் முதலில் வந்தது. எனவே இச் சந்தேகக் கண்ணோடு, வழக்கம்போல் மற்றைய உரை ஆசிரியர்களின் கருத்தென்ன என்று பார்த்தேன்.

1. பரிமேலழகர் அழுக்காறு என்பதோடும், மணக்குடவர் மனக்கோட்டம் என்பதோடும் நிறுத்தியிருந்தார்கள். ஏனையோர் பொறாமை என்றே பயன் படுத்தி இருந்தனர். அழுக்காறு என்னும் வார்த்தைக்கான நேரடிப் பொருள் ‘பொறாமை’ என்றே அகராதியிலும் கண்டேன். ஆதலின் இதில் மிகவும் ஆழப்படாது, மேலோட்டமான பொறாமை என்னும் அர்த்தத்திலேயே நானும் பயணிக்க நேர்ந்ததால், தவறு நிகழ்ந்தது. என்னுடைய வழக்கமான ஆழப்படாமைக்குக் காரணம் அழுக்காறு என்பதை நுணுக்கியோ, பிரித்தோ நோக்காததே. அதற்கு அழுக்காறு என்பது கூட்டு வார்த்தை இல்லை என்பதும் உண்மையே.

2. இப்போது தொடர்புள்ள மற்றைய வார்த்தைகளைத் தாங்கள் கேட்டது போல் பார்ப்போம்:

அழுக்கம் - கவலை
அழுக்கறல் - அழுக்காறடைதல், அழுக்கு நீங்கல்
அழுக்கறுத்தல் - பொறாமை கொள்ளல்
அழுக்காமை - ஓர் ஆமை
அழுக்காறாமை - பொறாமை உடையாமை
அழுக்காறு - அசுத்தநெறி, பொய், பொறாமை
அழுக்கு - அசுத்தம், ஆமை, ஊத்தை, பொறாமை, மலம், மாசு
அழுங்கல் - அச்சம், அலையல், அழுதல், அழுந்தல், ஆரவாரித்தல், இரங்கல், ஒலித்தல், ஒளிமழுங்கல், கெடுதல், சோம்பல், துன்பம், நோய், வருத்தம்
அழுங்காமை - அஞ்சாமை, அலையாமை, அழாமை, அழுங்கு, அழுந்தாமை, ஆராவாரியாமை, இரங்காமை, ஒலியாமை, ஒளிமழுங்காமை, கெடாமை, சோம்பாமை, வருத்தப்படாமை.
அழுங்கு - குமரி, அழுங்கென்னேவல், ஆமை, ஓர் மிருகம்.
அழுங்குப்பிடி - நெகிழாது பிடித்தபிடி.

ஆக அழுக்கிற்கு வேண்டுமானால் தாங்கள் கேட்டபடி ஆறு வேறு பட்ட வார்த்தைகளும், அர்த்தங்களும் இருக்கின்றன. ஆனால் அழுக்காறு என்பதற்கு மூன்று பொருள் மாத்திரமே. இருப்பினும், பொறாமை என்னும் வார்த்தையைக் காட்டிலும் இங்கே அசுத்தநெறி என்பதே சாலப் பொருத்தமானதாக இருந்திருக்கும். அதாவது தலைப்பை ஒட்டிப் பார்க்கும் போழ்து.

எனவே திருத்திய தீர்ப்பு:
பொழிப்புரை:
அசுத்தநெறி கொண்டவரிடத்தே ஆக்கம் இல்லாதது போன்றே - நல் ஒழுக்க நெறி இல்லாவரிடத்தே உயர்வு இல்லை.

விரிவுரை:
பொறாமை என்னும் வார்த்தை உள்ள இடத்தே எல்லாம் அசுத்தநெறி என்று மாற்றிக் கொள்ளவும். தூய நெறியாகிய ஒழுக்க நெறி இல்லாதவரிடத்தில் உயர்விற்கான வாய்ப்பு இல்லை என்பதே மறை பொருள். ஆக தூய நெறி என்னும் ஒழுக்கமே, மாசற்ற தன்மையையும் ஒருவருக்கு நல்கும் என்பது தெளிவு.

குறிப்புரை: மாற்றம் இல்லை.

இவ்விதமாக மேற்கண்ட மாற்றுப் பொருளுக்கான பெருமை முழுவதும் திரு. கேசவன் அவர்களையே சாரும். இம் மாற்றங்களை மென்புத்தகத்தில் பதிவு செய்வேன்.

எனது முன் பதிவில் உள்ள தவறிற்கு வாசகர் அனைவரிடமும் மன்னிப்பை வேண்டுகின்றேன். இதை அருமையாகச் சுட்டிக் காட்டிய கேசவனிற்கு மிக்க நன்றி.

இவ்விதமே தவறுகளைச் சுட்டிக் காட்டும் அன்பர்களை மிகவும் மதித்துப் போற்றுவேன். குறள் அமுதம் சிறப்புடன் திகழ உதவும் நல் இதயங்களுக்கு அனைவரின் சார்பிலும் மீண்டும் நன்றி.

நண்பர் கேசவன் அவர்களே, இதில் தங்களுக்கு எவ்விதம் மாற்றுக் கருத்து இருக்கலாம் எனத் தோன்றியது என்பதைப் பதிவு செய்தால் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மிகவும் பனுள்ளதாக இருக்கும். மேலும் தற்போது திருத்திச் சொல்லிய விளக்கம் பொருத்தமாக இருக்கிறதா என்பதைத் தெளிவு செய்யவும். அன்றில் உங்களிடம் மற்றைய மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். நன்றி.

அன்புடன்,

உத்தமபுத்திரா

தேவன் said...

/// திருத்திச் சொல்லிய விளக்கம் பொருத்தமாக இருக்கிறதா ///


போதும் ஐயா அருமை! நன்றி !!

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...