Monday, November 9, 2009

திருக்குறள்:137 (மேன்மை தருவது ஒழுக்கமே...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 137

மேன்மை தருவது ஒழுக்கமே...

In English

ஒழுக்கத்தின் எய்துவர், மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர், எய்தாப் பழி.

பொழிப்புரை :
ஒழுக்கத்தினால் எய்துவர் மேன்மை; [ஒழுக்கமற்ற] இழுக்கத்தினால் எய்துவர், எய்த ஒண்ணாப் பழியை.

விரிவுரை :
ஒழுக்கம் உடையவர் அனைவரும் மேன்மையை அடைவர். ஆனால் ஒழுக்கமற்ற இழுக்கத்தினை உடையோர் தாம் செய்த தவறுகளுக்கான பழியை மட்டுமன்று, தாங்க ஒண்ணாப் பழியையும் ஏற்க வேண்டி வரும்.

திருட்டு நகை வாங்கிய வியாபாரியும் திருடனின் கூட்டாளி என்பதால் திருடனென்றே பழி ஏற்க வேண்டும். தண்டனையையும், துன்பத்தையும், அவமானத்தையும், அவப் பெயரையும் அனுபவிக்க வேண்டி வரும். அதன் பயனால் வரும் பழிக்கும், ஏச்சுக்கும் ஆளாக வேண்டி வரும். ஒருமுறை குற்றம் செய்த பாவத்திற்காக எப்போதெல்லாம் குற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் சந்தேகத்திற்கும், சோதனைக்கும் ஆளாக வேண்டியும் வரும்.

ஒழுக்கமற்றவனின் வார்த்தைகள் அம்பலம் ஏறாது. மதிப்பு இருக்காது. மனச்சாட்சி விழித்துக் கொண்டால் செய்யும் தவறுகளால் நிம்மதியும் இருக்காது.

மாறாக ஒழுக்கம் உடையோர் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகாது, தாங்கள் செய்யும் பணியில் சிறப்புறவும், மேன்மை அடையவும், நல்லெண்ணத்தால் பிறருக்குப் பயன் தரும் நற்காரியங்களில் ஈடுபட்டுப் புகழையும், நன்மையையும் பெறுவர். குறைந்த பட்சமாக மன நிறைவு என்னும் மேன்மையையாவது அடைவர் அல்லவா?

எனவே நல் ஒழுக்கத்தை ஒழுகுவதே மேன்மை.

குறிப்புரை :
ஒழுக்கம் மேன்மை தரும்; ஒழுக்கமின்மை பொருந்தாப் பழியும் தரும்.

அருஞ்சொற் பொருள் :
எய்தா - ஏற்க ஒண்ணாத

ஒப்புரை :

திருமந்திரம்: 2103
செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே.

திருமந்திரம்: 2014
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.

திருமந்திரம்: 2105
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே.

திருமந்திரம்: 2106
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

திருமந்திரம்: 2107
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

ஔவையார். ஆத்திச்சூடி:
10. ஒப்புரவு ஒழுகு.
20. தந்தை தாய்ப் பேண்.
36. குணமது கைவிடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 137

Discipline yields excellence...




In Tamil

ozhukkaththin eythuvar, mEnmai; izhukkaththin
eythuvar, eythAp pazhi.

Meaning :
Through discipline one attains excellence; Through indiscipline one attains, unbearable incrimination.

Explanation :
All the disciplined will attain excellence. But the undisciplined will get blamed not only for their lapses but also for others with the unbearable and irrelevant incriminations.

That who buys the stolen jewelry from a thief is also considered as the partner of the thief and hence he should take the blame of stealing. Also he should suffer the punishment, afflictions and disgrace. Because of that he should continue the insult, indignity and reproach from the society. Since has served once for the offense, whenever crime or offense occurs should undergo interrogations and doubts.

The words of undisciplined will not be accepted; will not have any value. Also when the consciousness awakes will not have even peace for the offenses made.

On the other hand, disciplined will not undergo unnecessary problems but will excel in their accomplishments and extol through their deeds of positive thinking and useful good works to all. At the least they would get the self satisfaction and contentment, is it not?

Therefore adopting the good discipline alone is good.

Message :
Discipline yields excellence; Indiscipline yields irrelevant blames too.

***

3 comments:

தேவன் said...

ஐயா ஒரு வேண்டுகோள், திருமந்திரம் பற்றிய விளக்கங்களை சரியாக சொல்ல பதிவர் இல்லை !

தாங்கள் அந்த பணியை மேற்கொண்டீர்கள் என்றால் என்னைப்போன்ற ஆன்மீகவாதிகள் பயனடைவர். மேலும் திருமந்திர பாடலுக்கு ஆளுக்கொரு விளக்கம் தருகின்றனர். அதை தவிர்த்து மிகச்சிறந்த கருத்தை, அதாவது எல்லோரது கருத்தையும் ஒன்று திரட்டி தங்களின் கருத்தையும் பதியுங்கள் அது எல்லோருக்கும்பயனளிக்கும்.

Uthamaputhra Purushotham said...

நண்பர் கேசவன் அவர்களே...

திருமந்திரத்தின் பால் உங்களின் ஆர்வத்தை பாராட்டுகின்றேன். அதிகம் திருமந்திரம் பற்றி ஒப்புரை கொடுப்பதற்கான காரணம் அதன் பால் வாசகர்களுக்கு விருப்பம் உண்டாக்கவே. எனவே அதனாலோ அன்றில் இயற்கையாகவோ உங்களுக்கு விருப்பம் தோன்றி இருப்பின் அது மிகவும் நல்லதே.

இப்போதைய எனது பணியும் நோக்கமும், துணிந்திருக்கும் “குறள் அமுதம்” என்னும் இத்தொடரை இனிதே தொடர்ந்து செவ்வனே நிறைவு செய்வதே. இதுவே எனது முதல் இலக்கியப் பணியும் ஆகும். மேலும் இதன் பிறகு செய்வதெற்கென்ற பல திட்டங்கள் மனதில் இருப்பதால் இப்போதைக்கு எதையும் உறுதி செய்ய இயலாது. எனவே அதன் பிறகே திருமந்திரத்திற்கான விளக்கம் இறை அருளால் இயன்றால் பார்ப்போம்; முயற்சிப்பேன். அவன் ஆட்டுவித்தால் ஆடாதாரே?

உங்களின் ஆன்மீக ஆவலிற்கு, திருமந்திரத்திற்கான அருமையான விளக்கங்கள் கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.

http://www.himalayanacademy.com/resources/books/tirumantiram/TableOfContents.html

திருமூலரின், திருமந்திரத்தையும் சுருக்கி மிகவும் நல்லமுறையில் கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் புத்தகம்:
திருமூலர் திருநெறி, நா. சுப்பிரமணியன், பொன்முடிப் பதிப்பகம், காரைக்குடி. கிடைத்தால் வாங்கிப் படிக்கவும்.

என்னிடம் உள்ள திருமந்திரம் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளுக்கான எப்போதோ நெட்டில் கிடைத்த PDF மென் பதிப்புக்களை விரைவில் இலவச மென்புத்தகங்கள் பகுதியில் இடுகின்றேன். தரவிறக்கம் செய்து கொண்டு பயன் படுத்திக் கொள்ளவும்.

நன்றி.

தேவன் said...

அதெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறது எனக்கு ஆங்கிலமே தெரியாது !

தமிழில் இருந்தால் கூறுங்கள் அய்யா !

நன்றி.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...