Tuesday, July 14, 2009

திருக்குறள்: 40

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

40


செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.


பொழிப்புரை (Meaning) :
ஒருவற்கு உயர்வு தரும் செயலானது ஆய்ந்து பழிச் செயல்களை விடுத்தலும்; ஆய்ந்து செயத் தக்கது நல் அறச் செயல்களைச் செய்வதுமே.


விரிவுரை (Explanation) :
ஒருவனிற்கு மேன்மை தரும் செயலானது என்றும் ஆராய்ந்து பழி எனும் தீ வினைகளை ஒதுக்கி, செயத் தக்க நல் அற வினைகளைச் செய்வதே.

ஒருவன் ஆராய்ந்து பழிச் செயல்களிலிருந்து அதைச் செய்யாது காத்துக் கொண்டு, அறச் செயல்களை ஆய்ந்து செயல்படுத்த வேண்டும்.

பழி பாவத்திற்கு அஞ்சி, நல் வினைகளேயே எப்போதும் ஆராய்ந்து செய்தால் ஒருவனிற்கு அது உயர்வைத் தரும்.


குறிப்புரை (Message) :
ஒருவன் எப்போதும் ஆராய்ந்து தீ வினைகளை விடுத்து, நல்வினைகளையே செய்ய வேண்டும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஓரும் - ஆராய்ந்து, ஆய்ந்து, சிந்தித்து. தெளி
உயற்பாலது - உயர்வு தருவதும், மேன்மை தருவது


ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை : 8
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.

ஔவையார். மூதுரை : 9
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது.

ஔவையார். நல்வழி : 31
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாதலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.


***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...