Wednesday, July 29, 2009

திருக்குறள்: 55


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 55
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 55


தெய்வம் தொழா அள், கொழுநன் - தொழுது எழுவாள்
’பெய்’ என, பெய்யும் மழை.


பொழிப்புரை (Meaning) :
தெய்வத்தைத் தொழாது, கொண்ட கணவனையே தெய்வமெனத் தொழுது துயில் எழுவாள், பெய்யென்றுச் சொன்னால் மழை பெய்யும்.


விரிவுரை (Explanation) :
பிற தெய்வத்தைத் தொழாது, தான் கொண்ட கணவனையே தொழுது துயில் எழுபவள், பெய் என்றால் மழை பெய்யும்.

தூய உள்ளத்தோடு நம்பிக்கைகளின் உச்சத்தில் ஒருவர் சொல்லும் அறம் பலிக்கும். பத்தினியின் சொல் பலிக்கும் என்பதும் நம்பிக்கை. முனிவர்கள் வார்த்தைகள் எப்படிப் பலிக்குமோ, சாபங்கள் எப்படிப் பலிக்குமோ அதைப் போன்றே கணவனையே தெய்வமாகத் தொழும் மாதரசிகளின் வார்த்தைகளும் பலிக்கும். அவை அவர் மழையை விரும்பி வருமாறு பணித்தாலும் நிகழும் என்று நன்மை பயக்கும் அறத்தைச் சொல்கின்றார் வள்ளுவர். உண்மையில் பத்தினிப் பெண்டிர் விடும் சாபமும் பலிக்கும். உதாரணம் கண்ணகி மதுரையை எறித்த காதை பிறகு நிகழ்ந்ததே. ஐம்பெரும் காப்பியத்தில் தலையானதாய், சிலப்பதிகாரமாகத் திகழ்கிறது தமிழில். இது நடந்த கதையென்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

இக்குறள் பெண்ணடிமைக்குச் சொல்லப்பட்டதல்ல மாறாக கற்பின் மேன்மைக்கும், அதன் திறத்திற்கும் நம்பிக்கை தரும் சொல்லே. எனவேதான் கணவன் துயில்கின்ற போழ்து, தான் முன் துயில் நீங்கித் தொழுது எழுவாள் என்றார். இதனால் கணவன் விழித்திருக்கும்போது தொழுதால் அவனிடத்தில் எதிர் பார்ப்புக்களை கொண்டிருக்கலாம் என்று பொருள் படும். எனவே இதயத்துள் கணவனைக் கண்கண்ட தெய்வமெனக் கொண்டு, காலை அவன் பாதங்களைத் தொழுது, அவனைத் தொடருதல் எவ்விதத்திலும் தவறான செய்கையாக இருக்க முடியாது. நாம் முன்னமேயே பாதத்தைத் தொழுதல் என்பதற்கு அவர் வழி நிற்றல் என்ற பொருளில் கடவுள் வாழ்த்தில் விளக்கியிருப்பதை ஒப்பு நோக்கவும்.

இசையால் மழையை வரவழைக்க முடியும்போது, இசைந்தொழுகி வாழும் பத்தினிச் சொல்லுக்கு ஏன் மழை வாராது? நம்பிக்கையில் எதுவும் சாத்தியமே.

தெய்வம் தொழாதே கொண்டவனைத் தொழுது எழுபவள் என்பாள் கணவன் ’பெய் எனப் பெய்யும் மழை’ போல்வாள் என்று கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவ்விதம் சொல்வதால் வள்ளுவர் பெண்ணிற்கு அதில் சொல்லவரும் கருத்து யாதும் இருப்பதாய் தெரியவில்லை.


குறிப்புரை (Message) :
கொண்ட கணவனையே தெய்வம் என்று தொழுது ஒழுகும் இல்லத்தரசியின் சொல் பலிக்கும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தொழா அள் - தொழாதவள்
கொழுநன் - கொண்ட கணவன், (கை) பற்றியோன், சார்ந்தோன்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 431
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை
.(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
.(1).நீங்கா தொருவனை
.(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்

திருமந்திரம்: 432
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
.(1).அடைந்தனன்

திருமந்திரம்: 433
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த .(1).பரிசறி யாதே
.(1).பரிசறி யாரே

திருமந்திரம்: 434
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே

ஔவையார். ஆத்திச்சூடி:
காப்பது விரதம். 33
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
தெய்வம் இகழேல். 60.
தொன்மை மறவேல். 63.
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
மேன்மக்கள் சொல்கேள். 94.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...