Sunday, August 9, 2009

திருக்குறள்: 66


அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 66
Chapter : 7

Children

Thirukkural

: 66


’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

பொழிப்புரை :
குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்.

விரிவுரை :
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளதவர்கள்தான் குழல் இனிமையானது அன்றில் யாழ் இனிமையானது என்பார்கள்.

இசைக் கருவிகளில் இசை மேதைகள் வாசிக்கும் போது கிட்டும் ஓசை இனிமையைச் சிறந்தது என்று சொல்கிறவர்களே, நீங்கள் உங்கள் மக்களின் மழலைச் சொல் கேட்டிருக்கிறீர்களா? அதைக் காட்டிலும் சிறப்பானதாக எந்த இசையும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையானது, சுகமானது குழந்தைகளின் மழலை மொழி என்கின்றார் வள்ளுவர். உண்மைதானே.

குழந்தைகளின் மழலை எனும் குதலை மொழி கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம். ஒலிப் பிரட்சியும், மொழிப் பிரட்சியும், இலக்கணத் தவறுகளும், முழு முதற் பிரயோகங்களும், குரலோசை நயங்களும் சில சமயங்களில் புரட்சிகளும், புதுமைகளும், பாவனைகளும், பாசாங்குகளும், நடிப்புக்களும் அறிவின் வளர்ச்சியைப் பிரதி பலிக்கும் அற்புத வெளிப்பாடுகள். இன்பம் பொழியும் சிந்துக்கள். இயற்கை அளிக்கும் முத்துக்கள். சில வேளைகளில் அர்த்தமற்ற அல்லது விளங்காத புதுக் கவிதைகள். எந்தக் கவிஞனுக்கும் சிந்தனைக்குள் சிக்காத கவிதை வரிகள். எந்த இசை மேதைக்கும் எந்தக் கருவிகளிலும் கட்டுப்படாத இசை ஆரவாரங்கள்; மழலைகள்.

மொழிகளே கூட மூல வார்த்தைகளைப் பல சமயம் மழலைகளிலே தான் தத்தெடுத்திருக்கும்.

குறிப்புரை :
குழந்தையின் மழலை கேட்பன எல்லாவற்றிலும் மிக இனிமையானது.

அருஞ்சொற் பொருள் :
குழல் - புல்லாங்குழல்
யாழ் - வீணையைப் போன்ற இசைக் கருவி

ஒப்புரை :

திருமந்திரம்: 281
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

திருமந்திரம்: 282
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

***

In English:

'kuzhal inidhu; yAzh inidhu' enba- tham makkaL
mazhalaich chol kELAthavar.

Meaning :
Flute is sweet, lute is sweet they say those who have not heard their own baby's babble.

Explanation :
Those who have not listened to their own kid's babble only say flute is sweet or lute is sweet.

The music performed by the great musicians on any music instruments is so nice and sweet to listen. Yet, have you ever heard your kid's lisp? It can't be greater music than that. It is so sweet and pleasant, the kid’s lisp, says Valluvar. Is it not true?

Children’s babble, the lisp, is un-surfeit sweet to hear again and again. Children's wrong pronunciation, errors in language, grammatical mistakes, the very first usages, and nuances of voice, occasional revolutions and innovations, imitations, impersonations display the reflective intelligence in them. Poetic are they, just wonderful natural pearls. Some times it may be the unclear and not understandable poems. Those are the lines not occurred to any poets indeed. They are the music, which cannot be played or rendered by any great music maestros. That is the lisp of the children.

In fact even languages could have borrowed the root words from the lisp.

Message :
Children's babble is the sweetest music to hear than all.

***

3 comments:

  1. //குழந்தைகளின் மழலை எனும் குதலை மொழி கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம். ஒலிப் பிரட்சியும், மொழிப் பிரட்சியும், இலக்கணத் தவறுகளும், முழு முதற் பிரயோகங்களும், குரலோசை நயங்களும் சில சமயங்களில் புரட்சிகளும், புதுமைகளும், பாவனைகளும், பாசாங்குகளும், நடிப்புக்களும் அறிவின் வளர்ச்சியைப் பிரதி பலிக்கும் அற்புத வெளிப்பாடுகள். இன்பம் பொழியும் சிந்துக்கள். இயற்கை அளிக்கும் முத்துக்கள். சில வேளைகளில் அர்த்தமற்ற அல்லது விளங்காத புதுக் கவிதைகள். எந்தக் கவிஞனுக்கும் சிந்தனைக்குள் சிக்காத கவிதை வரிகள். எந்த இசை மேதைக்கும் எந்தக் கருவிகளிலும் கட்டுப்படாத இசை ஆரவாரங்கள்; மழலைகள்//


    அருமையான விளக்கம்,தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.

    ReplyDelete
  2. உங்களின் வருகைக்கும், கமெண்டிற்கும் நன்றிகள் தமிழ்க் காதலன் அவர்களே.

    நீங்கள் காட்டிய ரசனைக்காகவே இதன் தொடராய் ‘நான் ரசித்த மழலைகள்’ எனும் அடுத்த பதிவை எழுதி உள்ளேன். அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன். நன்றி.

    ReplyDelete
  3. தம் மக்கள் தன் மகன் என் வித்தியாசம்

    ReplyDelete

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...