|
| |
பொழிப்புரை : | |
தந்தை தன் மக்களிற்கு ஆற்ற வேண்டிய நற்செயல், கற்றோர் அவையில் முந்தி இருக்கச் செய்தல். | |
| |
விரிவுரை : | |
ஒரு தந்தை தன் பெற்ற மக்களுக்கு ஆற்ற வேண்டிய நற் கடமை, அவர்களை கற்றோர் அவையில் முந்தி இருக்கும்படி செய்தல். அவையம் என்பது கற்றோர், அறிஞர்கள் கூடியிருக்கும் சபை ஆகும். எனவே அத்தகைய சபையில் முந்தி இருக்கும் தகுதி, முதன்மைத் தகுதி, முன் வரிசைத் தகுதி கல்வி கேள்விகளில் சிறந்து இருப்போருக்கே பொருந்தும் என்பதாகும். அந்நிலைக்குத் தம் மக்களை உரியவர்களாக ஆக்குதல் தந்தையின் கடமை என்பதும் பொருள். அதாவது அவர்களைக் கல்வித் தகுதி உடையவர்களாக ஆக்குதல். ”ஆற்றும் நன்றி” என்பதற்கு ஆற்ற வேண்டிய நற் செயல், கடமை என்று பொருள் கொள்ள வேண்டும். மேலும் தந்தை இதைத் தன் மக்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றிச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ‘ஆற்றும் நன்றி’ என்றார். எமக்கு மக்களாய்ப் பிறந்த்த உங்களுக்கு நன்றி இதுவே என்று கல்வியைத் தரவேண்டுமாம். நன்றிகள் திருப்பி வழங்கப் படுபவை; அவை நன்றியை எதிர் பார்ப்பதில்லை. மேலும் மகற்கு என்பது ஆண் குழந்தைக்கு மட்டுமல்ல இரு பாலருக்கும் பொருந்தும். இத்தகைய வள்ளுவத்தின்நுணுக்கம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு தந்தை கல்விச் செல்வத்தை தம் மக்களுக்கு வழங்குதலே, பெறுமாறு செய்தலே கடமை. மற்றையச் சொத்துக்களை அல்ல. பொருட் செல்வம் அழிந்து போகும். அறிவுச் செல்வம் நிலைத்து இருப்பதோடு பொருளைச் செய்து கொள்ளும் அறிவையும் திறத்தையும் தர வல்லது. எனவேதான் உலகில் கல்வி தானத்தையே அன்ன தானத்திலும் சிறந்ததெனச் சொல்லுவர். ஏழைக்கு மீனைக் கொடுத்தால் ஒரு வேளைக்கு மட்டுமே உதவும், அவனிற்கு மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் எப்போதும் உதவுமல்லவா? தாய் சொல்லி தந்தையை அறியும் மக்களிற்கு, தந்தை காட்டும் குருவினிடமிருந்து அறிவைப் பெற்று தெய்வம் எனும் மெய்யறிதலைப் பெறவேண்டும் என்பதற்கே மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அறிவுப் பாதையை வகுத்தார்கள். அன்புக்கு அன்னை, அறிவிற்குத் தந்தை என்றார்கள். எனவே தந்தையின் கடன் கல்விச் செல்வத்தை அவர் பெற்ற செல்வங்கள் பெறுமாறு செய்வித்தலே. அதாவது நல்ல பள்ளி, நல் ஆசிரியர்கள், சிறந்த கல்விக் கூடத்தில், கல்லூரிகளில் தமது பிள்ளைகள் பயிலுமாறு செய்வித்தலும் இலக்கிய, அறிவுசால் விடயங்களில் ஆவலை உண்டு செய்தலும் அத்தகைய போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளுமாறு செய்தலும், கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளுவதை ஊக்குவித்தலும், தேவையான பயிற்சி, புத்தகங்கள், கல்வி உபகரணங்களை, கருவிகளைப் பெறச் செய்தலும், கல்விக் கூடங்களை, கல்லூரிகளை, ஆசிரியர்களை அணுகவும், ஆலோசிக்கவும், ஆரோக்கியத்தையும் அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருத்தலும் ஆகும். | |
| |
குறிப்புரை : | |
தமது மக்கள் கல்விச் செல்வத்தைப் பெறுமாறு செய்தலே தந்தையின் கடமை. | |
அருஞ்சொற் பொருள் : | |
நன்றி - நற் செயல் அவையம் - சபை (சான்றோர் குழுமிய சபை) | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 139 தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. திருமந்திரம்: 168 அருளும் அரசனும் ஆனையம் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின் மருளும் பினையவன் மாதவ மன்றே. திருமந்திரம்: 238 கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே. திருமந்திரம்: 294 துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. 5 திருமந்திரம்: 316 கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. புறம்: 312, பொன் முடியார். சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே. ஔவையார், கொன்றைவேந்தன்: 7 எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். ஔவையார். மூதுரை: 13 சுவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். | |
| |
*** |
| |
| |
Meaning : | |
Father's good doing to his children is to make them to be the forefront among the learned and wise ones. | |
| |
Explanation : | |
A father's duty to his children is to make them to be on the forefront of an educated society. That is the reason the grant for education is considered as better than that given for the food. Giving a fish to the poor will help only for that moment whereas teaching him to capture the fish will help him forever. Is it not? | |
| |
Message : | |
Father's boon to the children is to provide the best education. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...