கெடுவாக வையாது உலகம் - நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. | |
|
பொழிப்புரை : |
கெட்டுப் போகும்படி விட்டுவிடாது உலகம்; நடு நிலையோடு நன்னெறியின் கண் தங்கியவரது [வாழ்க்கைத்] தாழ்வை. |
|
| புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன. |
|
விரிவுரை : |
நடு நிலையோடு நன்னெறியின் பால் தங்கியவனது வாழ்க்கையில் ஒருவேளை தாழ்வு அன்றில் வறுமைத் துன்பம் ஏற்படுமானால், அதைக் கேடாகக் கருதித் தூற்றாது உலகம்.
நடுநிலை வழுவாது நன்னெறியின் பால் இருந்தவரின் சரிவை மேலும் கெட்டுப்போகும்படி விட்டுவிடாது உலகம். அதாவது அவர் தாழ்வு நிலை போக்கிக் காப்பாற்றப் போற்றப் படுவார் என்பதும் பொருளாகும். இது வள்ளுவரின் சொற்திறனை, கவித்திறனைக் காட்டக்கூடிய குறள்.
இன்னல்கள் எல்லாருக்கும் வரும் போகும். ஆயின் நடுநிலை தவறாத நன்னெறியின் பால் தங்கியிருக்கும் சீலருக்கு ஏற்பட்ட தாழ்வை உலகம் ஏளனம் செய்யாது தடுத்துக் காக்கும் என்பதே இங்கு மறை பொருள்.
நன்னெறியோடு நடுநிலை வகிக்கும் பெருந்தகையாளர் ஊராரின், மற்றவரின் புகழ்ச்சிகளையும், இகழ்ச்சிகளையும் கூட சமமாகக் கொள்ளக் கூடிய நடுநிலை மனதுடையவராதலால், இங்கே “கெடுவாக வையாது உலகம்” என்பதற்கு “கெட்டுப்போகும்படி விட்டுவையாது உலகம்” என்பதே சரியானதாக இருக்கும். மேலும் ஒரு கூறா மறை பொருள், நீதி தவறி மேன்மை அடையும் சான்றோரை, நீதிபதிகளை தூற்றாது விட்டுவிடுமா உலகம்? இல்லை அவர்களால் தான் நீதி தவறிய மேன்மையோடு நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா? மனிதர்களே! உங்களின் செயல்பாடுகளை உலகம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது நினைவில் இருக்கட்டும். |
|
குறிப்புரை : |
நடுநிலையாளருக்கு ஏற்படும் துன்பத்தை உலகம் மேலும் கெடாது போக்கிவிடும். |
|
அருஞ்சொற் பொருள் : |
கெடுவாக - பொருள் கேடாக வையாது - தூற்றாது, விட்டு வைக்காது தாழ்வு - அவமானம், சரிவு, வீழ்ச்சி, குற்றம், பிழை, துன்பம் |
|
ஒப்புரை : |
|
திருக்குறள்: 220. (22. ஒப்புரவறிதல்) ’ஒப்புரவினால் வரும், கேடு’ எனின், அஃது ஒருவர் விற்றுக் கோள் தக்கது உடைத்து.
திருமந்திரம்: 321 நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
திருமந்திரம்: 951 அகார உகார சிகார நடுவாய் வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவன்சிந்தை செய்ய ஓகார முதல்வன் உவந்துநின் றானே.
திருமந்திரம்: 1453 கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழு மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.
ஔவையார். ஆத்திச்சூடி: 63. தொன்மை மறவேல். 65. நன்மை கடைப்பிடி.
ஔவையார். மூதுரை: அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். 4
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18
சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று? 28 |
|
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...