Friday, October 23, 2009

திருக்குறள்: 124 (மிக உயரிய மாறா அடக்கம்...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 124

மிக உயரிய மாறா அடக்கம்...

In English

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

பொழிப்புரை :
[தனது உயரிய] நிலையிலும் மாறாது அடக்கம் உடையவனது [மனத்] தோற்றம் மலையினும் மிகப் பெரியது.

விரிவுரை :
உயர்ந்துவிட்ட நிலையின் போழ்தும் குணம் குன்றாது, வார்த்தை மாறாது, புகழ் தாழாது, தீ நெறி வழுவாது, யாரையும் ஏவாது எந்த நிலையிலும் அடக்கத்துடன் வாழுபவனின் மனத் தோற்றமானது மலையினும் சாலப் பெரியது.

நிலை மாறாத நன்னெறியாளரின் அடக்கமானது சாலச் சிறந்ததாய்க் கொள்ளக் காரணம், அஃது உண்மையானது, போலித் தன்மை அற்றது, அழியாத மலையினும் உறுதியில் உயர்வானது. வாழ்வில் வசதி வந்த பிறகு ஆணவத்துடனும், அதற்கு முன்னர் அடக்கத்துடனும் நடந்து கொள்பவர் அற்பமானவர்கள், நிலையற்றவர்கள். எந்த நிலையிலும் அடக்கத்துடன் திகழுவோரின் மனத் தோற்றத்திற்கு, உயர்விற்கு முன்னர் மலை சிறியது. மலையினைக் காட்டிலும் அவ்வளவு உயரியது, விசாலமானது, உறுதியானது அத்தகைய பண்பாளரின் மனம் என்பது பொருள்.

அடக்கம் என்பதைச் சீராக என்னிலையிலும் மாறாத குணமாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது உட்கருத்து.

குறிப்புரை :
மாறா அடக்கம் மலையினும் பெரியது.

அருஞ்சொற் பொருள் :
திரியாது - தவறாது, கெடாது, வழுவாது, வேறுபடாது, மாறுபடாது, அலையாது.
தோற்றம் - காட்சி, மனப்பதிவு, புகழ், இயல்பு, தன்மை.

ஒப்புரை :

திருமந்திரம்: 1304.
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

திருமந்திரம்: 1311.
ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே.

திருமந்திரம்: 1326.
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

திருமந்திரம்: 1327.
அடைந்திடும் பொன்வௌfளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

திருமந்திரம்: 1377.
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே.

திருமந்திரம்: 1397
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தனநாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

திருமந்திரம்: 1440.
சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திரம்: 1441.
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.

திருமந்திரம்: 1442
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

திருமந்திரம்: 2059
ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.

திருமந்திரம்: 2060
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.

திருமந்திரம்: 2061
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.

திருமந்திரம்: 2062
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய
மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565

இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567

பட்டினத்தார்:
ஓங்கார மாய்நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதி னாலுலகும்
நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
ஆங்கார மானவர்க் கெட்டாக் கனிவந் தமர்ந்திடுமே. (41)

சிவவாக்கியர்:
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே. (257)

ஔவையார். ஆத்திச்சூடி:
64. தொன்மை மறவேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

ஔவையார். மூதுரை:
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 124

The tallest Unchanged self-control...




In Tamil

nilaiyin thiriyAthu adangiyAn thORRam
malaiyinum mANap perithu.

Meaning :
The manifestation of one’s steadfast self-control regardless of the social status is much bigger than a mountain.

Explanation :
Even with high social status, without changing the good behavior, without failing in words, without fading the fame, without bad practices, without any intimidations when one maintains the steadfast self-control at all the time, then that person's manifestation is much bigger than a mountain.

The reason behind considering those unchanged good people as greater than mountain is their self-restrain is true, un-deceitful and stronger than an indestructible mountain. Behaving unruly and inappropriately due to change of social status , i.e. upraise or success or betterment in life but that one who have behaved properly with humbleness in earlier state of life, is cheap and shows the unstable character. For those who behave with self-restrain regardless of any state in life, let whatever be the power or wealth or health, then for their manifestation of their mind even the mountain becomes smaller. Their heart and mind is so taller, stronger, greater and stable than a mountain is the explicit meaning here.

Self-control must be a uniform trait for one at any stage or status of Life is the implicit meaning here.

Message :
The steadfast self-control is greater than a mountain.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...