முகக் கண் பார்வையால் அல்லாது அல்லது கண் பார்வையே இல்லாது அகக் கண்ணோட்டத்தால் தெளிவான தம் கருத்தினைச் சொல்லினும், சொல்லாதீர் ஒருவர் முன்னால் நின்று தாம் தமது புறக் கண்ணால் காணாதவற்றைச் சொல்லால்.
அதாவது தமது புறக் கண்ணால் காணததை இட்டுக் கட்டிப் பொய்யாகத் திரித்துச் சொல்லாதீர் என்கின்றார். அகக் கண்ணால் கூறும் தமது கண்ணோட்டப் பார்வை எவ்வளவு விரிவானதாக வேண்டுமானலும் இருக்கட்டும், அஃது கருத்து மட்டுமே. ஒருவர் முன்னால் பேசுகின்ற சொல் முழுமையான கருத்தாக இருந்தாலும் கேடில்லை ஆனால் அஃது பிறரைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக இருத்தல் கூடாது என்பது உட்பொருள்.
’நான் பார்த்ததில்லை’. ’ஆனால் இவ்விதமாக இருக்கலாம், இன்ன இன்ன காரணுங்களுக்காகக் கருதுகின்றேன்’ என்று சாதக, பாதகங்களை முழுமையாகச் சொல்வது என்பது அகத்தே ஆய்ந்து கூறும் கருத்து என்ற அளவில் எடுத்துக் கொள்ளப் படலாம். நாம் அறிந்தவற்றை, தெளிந்தவற்றை காரண காரியங்களோடு உண்மை மாறாது வருகின்ற சந்ததியினருக்கு, சக மனிதருக்குத் தெரிவிக்கலாம். அஃது உண்மையில் ஒருவரின் கடமையும் கூட. ஆனால் உண்மைக்குப் புறம்பானதை, கண்ணால் காணததைச் சொல்லுதலோ, எழுதுதலோ கூடாது என்பதே இக் குறளின் குறிப்பு.
கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்பது பழ மொழி. எனவே கண்ணால் கண்டதே பொய்யாக இருக்கக் கூடிய சாத்தியமுள்ள உலகில், ஒருவரின் பால் கண்ணால் காணதவற்றைப் பேசலாமா?
ஒருவர் கண் முன்னால் இல்லாத போது அவரைப் பற்றிப் புறம் பேசுவதே தவறு. இதில் அவரைப் பற்றித் தமது கண்ணால் காணததைச் சேர்த்து பிறிதொருவர் முன்பு பேசுதல் என்பது மிகப் பெரிய தவறு. பொய்யும் புரட்டும் சேர்ந்து பேசுவதும் தூற்றுவதுமாகிய புறங்கூறுதல் தீய அறத்திலும் மிகப் பெரிய தீங்கானது.
கதை கட்டுதல், வதந்தி செய்தல், வதந்தி பரப்புதல், வத்தி வைத்தல், வம்பு வளர்த்தல், அவதூறு செய்தல், பொய்ப் பழி உண்டாக்குதல், பொய்க் கிளர்ச்சிக்கு வித்து இடுதல் ஆகிய பொய்மை உரைகளால் ஒருவர் முன்பு உரைக்கும் பொய் உரை அவரால் உண்மை என்று நம்பப்பட்டு பலருக்கும் சென்று சேரலாம். அஃது வதந்தியாகப் பரவி அதனால் சம்பந்தப் பட்டோருக்கும் அல்லாதோருக்கும் தீய பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். பலரால் நம்பப் படுகின்ற பொய், உண்மையோ எனும் மாயத்தையும் பிறகு ஏற்படுத்தலாம். அத்தகைய போலி நிஜங்களால், கிசுகிசுக்களால் சமயங்களில் மரணங்களும் நேரலாம். எனவே அத்தகைய தீங்குகளிற்குக் காரணமாகின்ற பொய் எனும் வஞ்சகத்தை, கள்ளத் தனத்தை, கண்ணில் காணாததை விளையாட்டிற்காகக் கூடப் பேசுதல் கூடாது என்பதே இக்குறள் குறிப்பிடும் நல்லறம் ஆகும்.
இக்குறளின் கருத்தில் முன்னர் குறிப்பிட்டுள்ள மற்றைய உரையாசிரியர்கள் அனைவரின் உரைகளிலிருந்தும் நான் முழுமையாக மாறு படுகின்றேன். காரணம் பதம் பிரிக்கப் படாத மூலக் குறளானது கீழ்க்கண்டவாறு:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
இதை அனைவரும் பரிமேலழகரை ஒட்டிப் பதம் பிரித்த விதம் கீழ்க் கண்டவாறு:
கண் நின்று, கண் அறச் சொல்லினும், சொல்லற்க முன் இன்று பின் நோக்காச் சொல்.
ஆதலின் அவர்களது கருத்து கூடிய வரையில், ”ஒருவர் நேர் எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொல்லினும், அவர் நேரில் இல்லாத போது பின் விளைவை ஆராயாது சொல்லும் சொல்லினைச் சொல்லாதீர்” என்பதே.
இறுதிக் கருத்து ’புறங் கூறாதீர்’ என்றே இருப்பினும், பதம் பிரிக்கின்ற வகையால் பொருள் வேறுபடலாம் என்பது மேலே சொன்ன விளக்கங்களால் அறியலாம். புதியதாக விளக்க உரை கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் அல்ல, மறை பொருளைக் கொணரும் நோக்கில் பார்க்கின்ற போழ்து, ”உண்மைகளைக் கூறும் கருத்து என்பது சரி, ஆனால் உண்மையற்ற புறங் கூறுதலே தவறு. அஃது கூடாது” என்பதையே திருவள்ளுவர் இங்கே சொல்ல முற் பட்டிருக்கின்றார் என்பதே எனது தெளிவான திடமான கருத்து. மேலும் இனிய சொல் பேசுதலை வலியுறுத்தும் வள்ளுவர் நேருக்கு நேர் நின்று கடும்பேச்சைப் பேசலாம் என்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றும் எண்ணுகின்றேன். |
கண் - விழி, நோக்கு, பார்வை, கண்ணோட்டம், அருள்நோக்கு, கருத்துச் சார்பு, அணுகுமுறை அற - அறும்படி, தீர, முற்ற, முழுதும், மிகவும், தெளிவாக, செம்மையாக |
நல்ல விளக்கம்..
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி முனைவர் இரா.குணசீலன் அவர்களே.
ReplyDeleteதங்களின் கருத்துக்களில் பெருமையுறுவேன். அடிக்கடி தலை காட்டுங்கள்.