’இலம்’ என்று வெஃகுதல் செய்யார் - புலம் வென்ற புன்மை இல் காட்சியவர். | |
|
பொழிப்புரை : |
[தம்மிடம்] ’இல்லாமை’ என்பதற்காக பிறர் பொருள் மேல் வேட்கை கொள்ளார் - ஐம் புலனை வென்று குறுகிய பார்வையிலிருந்து தெளிவு பெற்றவர். |
|
 | புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன. |
|
விரிவுரை : |
புலன் உணர்வுகளை வென்று குற்றமற்ற பார்வைத் தெளிவு பெற்றவர், தாம் இருக்கும் ’இல்லாமை’ எனும் வறுமை நிலையிலும் பிறர் பொருட்களின் பால் வேட்கை கொள்ளார்.
புலன் வென்ற என்பதற்கு இங்கே ஐம்புலன்களை அடக்கிய துறவியர் எனும் நிலை மாத்திரம் அல்லாது ’புலன் உணர்வுகளைத் தாண்டிய’ என்று கொள்ள வேண்டும். காரணம் ஐம்புலன் உணர்வால் அன்றி ஆறாவது உணர்வாகிய சிந்தனை உணர்வால்; அகக் கண்ணால், பொருட்களின் உண்மையைக் குற்றமிலாது ஆய்ந்து தெளிந்து நோக்கத் தெரிந்த யாவரும் என்பது பொருள். இங்கே பார்வைத் தெளிவு என்பது ஐம்புலனில் ஒன்றாகிய கண் பார்வைத் தெளிவை அல்ல; சிந்தனையின் பால் தோன்றும் அகப் பார்வை என்பதைச் சொல்லவே ’புலம் வென்ற’ என்றார். ஆகவே இங்கே அகப் பார்வைத் தெளிவு என்பது ’நல் அறிவுத் தெளிவு’, ’தெளிவு பெற்ற மதி’ என்பது பொருள்.
கலங்கலற்றுத் தெளிந்த நல் அறிவிற்குத்தான் வாழ்க்கையின் மூலங்களும், கூறுகளும், நோக்கங்களும், தமது, பிறரது எனும் எல்லைகளும், நல்லவை, தீயவை எனும் அறங்களும், நிலையாமைத் தத்துவமும் ஆசா பாசங்கள் எனும் குற்றங்கள் அற்றுத் தெள்ளத் தெளிவாய்த் தெரியும். மோகமெனும் மாயமற்றுத் தெரியும். புலன் உணர்வு கொண்டோருக்கே பசி வந்தால் பத்தும் பறக்கும். புலன் உணர்வுகள மீறித் தெளிந்த நற் சிந்தனையாளருக்கு வினைப் பயனும், பாவ, புண்ணியத் தெளிவும், வாழ்வின் இலக்காகிய முக்திக்குத் தடைவரும் எவற்றையும் விலக்கும் எண்ணமுமே மிகுந்து வரும். எனவே அவர்களிடத்தே பிறன் பொருள் மேல் பற்று எந்த நிலையிலும்; ‘இல்லாமை’ எனும் அவர் தம் வறுமை நிலையிலும் தோன்றாது.
இச் சிந்தனைத் தெளிவு இலாது இருப்போருக்கே அதாவது குறுகிய பார்வையும்; மனப்பான்மையும் கொண்டோருக்கே, பிறன் பொருளை அபகரித்த அல்லது அபகரிக்கும் தமது குற்றங்களிற்கு, தமது இல்லாமையைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள வழி தேடும் நிலை ஏற்படும்.
தாம் வாழப் பிறரையும் கொன்று வாழ்வதோ, எதைச் செய்தாவது வாழ்வதோ என்பது அறிவீனம். அது சிந்தனை எனும் ஆறாவது அறிவற்ற விலங்குகளுக்கு மாத்திரமே பொருந்தும். ஆங்கிலத்தில் சொல்லப் படுகின்ற “survival of the fittest" எனும் கூற்று மனிதரின் இக வாழ்வுக்குப் பொருந்தாது என்பது மேலே சொன்ன வாழ்க்கையின் நோக்கம் எனும் தெளிவுற்ற மதியினோருக்குப் புரியும். எனவேதான் அவர்கள் பிறர் பொருளைக் கவருதல் எளிமை என்றாலும், தமது வாழ்விற்கு, வயிற்றிற்கு இல்லாமை எனும் வறுமை நிலையில் உள்ளபோதும் கூடப் பிறர் பொருளைக் கவரவோ, வேட்கை கொள்ளவோ எண்ணம் வராது.
பிறர் பொருளைக் கவர்ந்து வயிறு வளர்ப்பதைக் காட்டிலும் இல்லாமையால் ஏற்படும் இயற்கை மரணம் தமது மோட்சத்திற்குக் கொடுக்கப்பட்ட இயற்கைத் திறவு கோலே எனும் தெளிவு அவர்களை நல் வழி செலுத்திக் கொண்டிருக்கும். சோதனைகளும், வேதனைகளும் தம்மைப் பண் படுத்தவே தவிர தமது நல்லறத்தை வழுவி இழி நிலை செல்வதற்கு அல்ல எனும் அறிவுத் தெளிவு அவர்களை இன்னும் உயர் நிலைக்கே எடுத்துச் செல்லும்.
தமதென்று ஏதுமே இலாதிருக்கப் பிறர் பொருளின்பால் உரிமை கோரும் போக்குப் புலனை வென்று தெளிவுற்ற பார்வைபெற்ற மதியினரிடம் கிஞ்சிற்றும் தோன்றாது.
ஆசை
வெயிலின் அருமை நிழலில் தெரியும் வீணரே ஏன் வாதம்? விதியின் வழிதான் பயணம் தொடரும் மனிதரே ஏன் கோபம்?
அண்ணன் தம்பி அனைத்தும் வேடம் அளவு மீறிப் பழகாதே... அடிப்பார் நெஞ்சில் துடிப்பாய் நொடியில் அன்பு மனது கேளாதே... கொண்ட மனைவி கொடுத்த பிள்ளை கூட வருவோர் யாருமில்லை... பந்த பாசம் அறுத்து நின்றாலே பாவி மனதில் துயரமில்லை... (வெயிலின்...) கூட்டம் போடும் உறவுகள் எல்லாம் இருக்கிற வரைதான் சொந்தமடா... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை கோபம் கொள்ளுதல் பாவமடா... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது கண்களில் தெரிகிற மாயமடா... இரவும் பகலும் மாறும் என்பது இயற்கை தருகிற பாடமடா... (வெயிலின்...) சுவரே இல்லாச் சிறைதான் ’உலகம்’ சூட்சும உண்மை தெரிகிறதா? சுற்றம்; சூழல்; வாழும் காலம்; பெற்ற தண்டனை புரிகிறதா? போன வினைக்குக் கிடைக்கும் பலனை புரியாது இங்கே மயங்குகிறாய்... புதிய வினையால் தொடரும் விளைவைப் புரிந்து கொள்ளத் தயங்குகிறாய்... (வெயிலின்...) இருப்பினில் வந்ததும் எடுத்துச் செல்வதும் பாவ புண்ணியச் சுமைதானே... இன்பம் துன்பம் என்பது எல்லாம் வினையால் வருகிற நிலைதானே... பாழும் உலகில் மோகம் கொண்டு காதல்; ஆசை; வளர்க்காதே பழைய பாக்கியைத் தீர்க்கவே வந்தோம் புதிய பாவத்தைச் சேர்க்காதே... (வெயிலின்...) ஆசை என்பது ஆட்டம் தொடர ஆண்டவன் வைத்த தூண்டிலடா... அனுபவம் என்பது நிகழ்கிற வரையில் அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா... கொடுத்த வாழ்வை வாழ்ந்து முடித்தால் கடக்கும் தூரம் குறையுமடா... குறுக்கு வழியில் பறக்க நினைத்தால் மீண்டும் குருவி பிறக்குமடா... (வெயிலின்...) எதிரே வருகிற இன்னலைக் கண்டு அழுது துடிப்பது மடமையடா... எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்து முடிப்பது கடமையடா... இல்லை என்றே அறிந்த பிறகும் ஏங்கித் தவிப்பது துன்பமடா... இருப்பதைப் பகிர்ந்து அன்பினில் திளைத்தால் எல்லா நாளும் இன்பமடா... (வெயிலின்...) தேவையைச் சுருக்கி ஆசையை விடுத்தால் பின்வினைப் பாவம் ஓடுமடா... புலன்களை அடக்கி இறைவனைத் தொழுதால் புத்தியில் ஞானம் கூடுமடா... பெற்றதைக் கொண்டே வென்றிட வேண்டும் வாழ்வின் நோக்கம் முக்தியடா... பிறவிச் சுழற்சி மறுமை அறுத்தால் பெறுவோம் மோட்சச் சித்தியடா... (வெயிலின்...)
*** |
|
குறிப்புரை : |
புலன்களை வென்றுப் பார்வைத் தெளிவுற்ற நற் சிந்தனையாளர் தமது இல்லாமை எனும் வறுமையிலும் பிறன் பொருளின் மேல் வேட்கை கொள்ளார்; அவை தம்மவை அல்ல எனும் தீர்ந்த தெளிவால். |
|
அருஞ்சொற் பொருள் : |
புன்மை - அற்பம், இழிவு, கீழ்த்தரம், தூய்மைக் கேடு, சிறுமை, வறுமை, துன்பம், குற்றம், பார்வை மங்கல். |
|
ஒப்புரை : |
|
திருமந்திரம்: 436. அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப் பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் கரகின் றவைசெய்த காண்டகை யானே.
திருமந்திரம்: 449. உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோத மாமே
பட்டினத்தார். பொது: 17 இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே! ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே! பருத்ததொந்தி நம்மதென்று நாமிருப்ப, நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான்!
பட்டினத்தார். பொது: 22 எரி எனக்கென்னும், புழுவோ எனக்கென்னும் இந்த மண்ணும் சரி எனக்கென்னும், பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க நரி எனக்கென்னும், புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?
பட்டினத்தார். திருக்கழுக்குன்றம். காடோ? செடியோ? கடல்புற மோ? கனமே மிகுந்த நாடோ? நகரோ? நகர்நடு வோ? நலமே மிகுந்த வீடோ? புறந்திண்ணை யோ? தமி யேன் உடல் விழுமிடம்? நீள்தோய் கழுக்குன்றி லீசா! உயிர்த்துணை நின்பதமே!
பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: 13 ஊருஞ் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல; பெண்டீர் சதமல்ல; பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல; செல்வஞ் சதமல்ல; தேசத்திலே யாருஞ் சதமல்ல; நின்தாள் சதம்; கச்சி ஏகம்பனே!
மாணிக்கவாசகர். திருவாசகம். 6. நீத்தல் விண்ணப்பம் : வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம் ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119
ஔவையார். ஆத்திசூடி: 12. ஒளவியம் பேசேல். 27. வஞ்சகம் பேசேல். 108. ஓரஞ் சொல்லேல்.
ஔவையார். கொன்றை வேந்தன்: 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
ஔவையார். நல்வழி: செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும் பானை பொங்குமோ மேல்! 17
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம். 26
ஔவையார். மூதுரை: எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. 22 |
|
*** |