Tuesday, August 4, 2009

திருக்குறள்: 61



அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 61
Chapter : 7

Children

Thirukkural

: 61

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட் பேறு அல்ல பிற.

பொழிப்புரை :
இல்லறத்தோர் பெறும் பேறுகளில் அறிவு அறிந்த மக்கட் பேற்றைப் போன்றது அல்லாத வேறு ஏதும் யாம் அறிந்தது இல்லை,

Among the blessings family men can get, we know not any greater one than that of the learned and wise children.

விரிவுரை :
அறிய வேண்டியவற்றை அறியும் அறிவுள்ள அல்லது அறிந்த மக்களைப் பெறுவதைப் போன்று உலகில் இல்லறத்தோர் பெறக் கூடிய சிறந்த பேறென்று வேறெதையும் யாம் அறியவில்லை.

அறிவு அறிந்த மக்கள் என்றால் கல்வி கேள்விகளில் சிறந்த வாரிசுகள் என்பது பொருள்.

பெற்றோருக்குத் தாம் பெற்ற மக்கள் சிறந்த கல்வி அறிவாளர்களாகத் திகழ்ந்தால் அதைக் காட்டிலும் சிறந்த பேறு வேறு ஏது இருக்க முடியும்? மக்கட் செல்வத்தைப் பெறுவதே பெறும் பேறு அதிலும் அறிவார்ந்தவை என்றால் மிகப் பெறும் பேறுதானே.

இல்லறத்தானின் கடமைகளில் மக்கட் செல்வம் பெறுதல் முக்கியமானது. அவரையும் அறிவில் சிறந்தோராய் ஆக்குதல் பெற்றோரின் அடுத்த கடமை. தாம் பெற்ற செல்வங்களை அறிவிற் சிறந்தோராய், நன் மக்களாய், சான்றோராய் இவ் உலகில் ஆக்க வேண்டிய பொறுப்புப் பெற்றோருக்கு உண்டு. அம்முயற்சிகளைச் செய்து தர வேண்டியது பெற்றோராயினும், அறிவிற் சிறந்து விளங்க வேண்டியது மக்களின் பொறுப்பாகின்றது. எனவே அது பெற்றோரைப் பொறுத்தவரையில் அடுத்துப் பெறும் பேறாகின்றது.

எனவே அறிவார்ந்த மக்களைத் தமதாகக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற பெற்றோருக்கு அவர் பெற்ற பேறுகளுள் அதைக் காட்டிலும் சிறப்பானது வேறு ஏதும் இருக்க முடியாது.

அதாவது நாம் முன்னுரையில் சொன்னது போல் மக்கட் செல்வத்தை பெறுவதே பேறு. அதிலும் அறிய வேண்டியவற்றை அறியும் மக்களைப் பெறுதல் பெரும் பேறு. ஏனென்றால் மூளை வளர்ச்சி அடையாத மக்களைப் பெறுவதால் துன்பமே அன்றி அதானால் பயன் ஏது?

குறிப்புரை :
அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் காட்டிலும் சிறந்த பேறு இல்லறத்தானுக்கு வேறு ஏதும் இல்லை.

Wise children are the greatest blessings family men can get.

அருஞ்சொற் பொருள் :
மக்கள் - குழந்தைச் செல்வங்கள், வாரிசுகள்.

ஒப்புரை :

திருமந்திரம்: 119
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.

திருமந்திரம்: 136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

ஔவையார். நல்வழி: 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும் பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும் பானை பொங்குமோ மேல்.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்:
ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு நீதரும் மகிழ்ச்சி.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...