Tuesday, August 4, 2009

திருக்குறள். அதிகாரம்: 7. மக்கட் பேறு.



அதிகாரம்

: 7

மக்கட் பேறு

முகவுரை

Chapter : 7

Children

Preface

இல்லறத்தின் பால், வாழ்க்கைத் துணையைப் பெற்று, இல்லறத்தின் அடுத்த கட்டமாகிய மக்கட்பேற்றைப் பெறுதலை இங்கே விளக்குகின்றார். பெறுவது பேறு. இல்லறப் பேறுகளுல் தலை சிறந்தது மக்கட்பேறு.

இல்லற வாழ்வின் நோக்கங்களில் தலையானது மனித குலத் தொடர்சிக்கான மக்களைப் பெறுதல். அவை அவரவர் தம் குலம் தழைக்கப் பெறும் பெரும் பேறு. அதிலும் அம்மக்கள் நன் மக்களாய், நல் குடிமக்களாய், எல்லோரும் போற்றும் சான்றோராய்ச் சிறப்புற்றால் அதை விட வேறு பேறு ஏதும் இருக்க முடியாது.

பெற்றவர்கள் வாழ்வின் உச்ச எச்சமாய் இவ் வுலகில் விட்டுச் செல்வது பெற்ற செல்வங்களையே. அதனால்தான் இல்லறம் சிறந்தது என்றாகின்றது. புகழ் காலங்களை விஞ்சி நிற்கும் எச்சமாகினும், உயிர்கள் தங்கள் வழித் தோன்றல்களை உருவாக்குவதே இயற்கையின் இயற்கை விதி மற்றும் அவசியத் தேவை. எனவே பெற்றவர்களின் மக்கட்பேறானது துறவிகள் பெறும் ஞானப்பேற்றைப் போன்றே, ஏன் அதைக்காட்டிலும் சிறப்பானது.

பெற்றோர் என்பதற்குத் தமிழில் வாங்கிக் கொண்டவர்கள் என்பது பொருள். யாரை? அதாவது அவர்களது குழந்தையை, மக்கட் செல்வத்தை முயன்று பெற்றவர்கள். அவர்களைப் படைத்தவர்கள் என்றோ, உருவாக்கியவர்கள் என்றோ சொல்லவில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இயற்கையிடமிருந்தோ, தெய்வத்திடமிருந்தோ பரிசிலாகப் பெற்றவர்கள் பெற்றோர். இவ்வாறான இவ்வார்த்தையை மிகவும் சிந்தித்தே தமிழில் உருவாக்கி இருக்கின்றார்கள். வேறு மொழிகளில் இவ்விதமாக பெற்றோரைக் குறிக்கும் சொல் காரணப் பெயராகவோ அன்றில் அர்த்தம் கொடுக்கும் சொல்லாகவே காண்பது அரிது.

பெற்றோர்கள் பெற்றார்கள் மழலைச் செல்வத்தை. அவர்களை ஆக்கியவர்கள் என்றால் சில சமயங்களில் ஆணவத்தில் அழிப்பதற்கும் உரிமை கோருவார்கள். எனவேதான் அவர்களை மக்கட் செல்வத்தைப் பெற்றவர்கள் என்றாக்கினார்கள்.

பெற்றார்கள் என்றால் திரும்பிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. எவ்வாறாக? தாங்கள் பெற்ற செல்வங்களை வளர்த்து, ஆளாக்கி, பொறுப்புள்ள குடிமக்களாய், நன் மக்களாய், அறிவுடையோராய் இந்தச் சமூகத்திற்கு வழங்கக் கடன் பட்டவர்கள், கடமைப் பட்டவர்கள், பெற்றவர்கள்.

அன்பையும், அறிவையும், வாழ்வையும் தாம் பெற்றவர்களுக்கு எந்த எதிர் பார்ப்பும் இன்றிச் செய்யும் பெற்றோர்கள் தெய்வங்களே. அவர்களை அந்த நிலைக்கு உயர்த்துவது அவர் பெறும் மக்கட் செல்வங்களே.

எனவேதான் வள்ளுவப் பெருந்தகை மக்கட்பேற்றைப் போன்றதொரு சிறந்த பேறில்லை என்கிறார்.

ஒப்புரை (Reference)
திருமந்திரம்: 132
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

கண்ணதாசன்:
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம் - அது
பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம், மௌனம்;
ரத்தத்துடன் கலந்தந்த பாசம், பாசம் - அது
நாள் கடந்து பிள்ளையுடன் பேசும், பேசும்! ...

2 comments:

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...