Saturday, August 29, 2009

திருக்குறள்: 82

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 82
Chapter : 9

Hospitality

Thirukkural

: 82


விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா
மருந்து எனினும், வேண்டற்பாற்று அன்று.

பொழிப்புரை :
விருந்தினரை புறத்தே விடுத்துத் தான் மட்டும் தனித்து உண்ணுதல் என்பது, அது தன் உயிரைக் காக்கும் சாவா மருந்தே ஆயினும் கூட, விரும்பத்தக்க செயல் அன்று.

விரிவுரை :
விருந்தினரை வெளிப் புறத்தே இருக்கும்படி செய்துவிட்டுத் தான் மட்டும் உண்ணுதல் என்பது, அப்படி உண்ணும் உணவு தன்னைக் காக்கும் சாவா மருந்தே ஆயினும், அது விரும்பத்தக்கது அல்ல.

வேறோர் பார்வையில், விருந்தினரைப் புறத்தே விடுத்துத் தான் மட்டும் உண்பதற்கு அது சாவா மருந்தாகிய, கிடைத்தற்கரிய அமிழ்தமே ஆகினும், அவ்வாறு விரும்புதல் பண்பல்ல.

அதாவது விருந்தினருக்குத் தெரியாமல் ஒளித்துச் சாப்பிடுவது என்பது கேவலமான செயல். அவர் பார்த்திருக்க, அவரிடம் இது எனது உயிர் காக்கும் மருந்து எனவே தனித்து உட்கொள்கிறேன் என்று சொல்லி விட்டு உண்பதே பண்பு. அவ்வாறு சொல்லாது மறைத்து உட்கொள்வார்களே ஆனால் அது யாரும் விரும்பத்தக்க செயலாக இருக்காது. வருகை புரிந்துள்ள விருந்தினர் தமக்குத் தெரியாமல் அவர் ஏதோ உண்ணுகிறார் என்று மனம் வருந்தக் கூடும்.

எனவே விருந்தினரை உபசரிக்கும் நளினம், அது வியாதிக்கு, உயிர் காக்கும் உணவாகினும், சொல்லி விட்டு உண்பது நாகரீகம்.

இன்றையக் காலங்களில் சக்கரை வியாதி உள்ளோர் அவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டால் உடனடியாக குளுகோசையோ அன்றில் சர்க்கரையையோ வாயில் போட்டுக் கொள்ள வேண்டுமென்பது உயிர்காக்கும், வலிப்புக்களில் இருந்து காக்கும் செயல்பாடு. ஆனால் விருந்தினர் இருக்கும் போது அவருக்கு, இதை மறைத்து, அவருக்குச் சொல்லாமல் உட்கொள்வதைக் காட்டிலும், அவரிடம் பிரச்சினையைக் குறிப்பிட்டுவிட்டு, அவரின் முன்பாகவே உட்கொள்ளுவது தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்குமல்லவா? சொல்லாமல் செய்தால் வருந்த வாய்ப்பிருக்கும் விருந்தினர், விபரமறிந்தால் அவரே வருந்தாமல் உதவ முன்வருவார், உதவியும் செய்வார். இதில் எந்தச் செயலை முதலில் செய்ய வேண்டும் என்பதை விடக் கூட, விருந்தினரிடம் உண்பதை மறைக்காது செய்ய வேண்டும் என்பதைப் பண்பாகக் கொள்ள வேண்டும் என்பது செய்தி. மேலும் அவ்வாறு செய்வதால் விருந்தினரிடம் மதிப்புக் கூடுமே தவிரக் குறையாது.

மருந்தை யாரும் பங்கு போட்டு உண்ணப் போவதில்லை; இருப்பினும் மறைக்காது செயல் படும்போது விருந்தினர் மனம் புண்படாது என்பது அடிப்படைப் பண்பு.

அதைப் போலவே விலை மதிப்பற்ற, கிடைத்தற்கரிய உணவே ஆயினும் அதையும் விருந்தினரோடு சேர்ந்து உண்பதே பண்பு, மறைத்து உண்பது அநாகரீகம். விருந்தைக் காட்டிலும் அமிழ்து ஒன்றும் சிறப்பானதோ அன்றில் முக்கியமானதோ அல்ல என்பதும் நுணுக்கம்.

குறிப்புரை :
அமிழ்தெனினும், மருந்தெனினும் விருந்தோடு உண்ணுவது பண்பு.

அருஞ்சொற் பொருள் :
புறத்ததா - புறத்தே இருக்குமாறு செய்து
வேண்டற்பார் - விரும்புதலின்பால்
வேண்டுவது - விரும்புவது, ஆசைப்படுவது

ஒப்புரை :

ஔவையார். ஆத்திச்சூடி:
இடம்பட வீடெடேல். 18
கிழமைப்பட வாழ். 34
சீர்மை மறவேல். 44
தொன்மை மறவேல். 63


ஔவையார். கொன்றைவேந்தன்:
சூதும் வாதும் வேதனை செய்யும். 31
நல்லிணக்க மல்லது அல்லற் படுத்தும். 48
மருந்தே ஆயினும் விருந்தோடு உண். 70

***

In English: (Thirukkural: 82)

virunthu puRaththathAth thAn uNdal, cAvA
marunthu eninum, vENdaRpARRu anRu.

Meaning :
Even though a Life saving medicine, it is improper to have it alone leaving the guest outside.

Explanation :

Eating alone leaving the Guests outside, even if it is the life saving medicine for self, is improper.

Also even if the eating food is precious ambrosia it is improper to have it alone leaving the Guests outside.

It is a shame and dishonor to eat the food hiding to Guests. It is good to eat even the life saving medicine in front of the Guest, after explaining him it's nature that he has to have alone.
But without telling the guest eating is won't be of likable act to anyone. The Guest may feel pained, insulted and dishonored that the Host is consuming without to their knowledge.

Therefore it must be the culture and good manners to tell the Guest about the medicine for taking it alone.

Now days, the sugar patience should eat instantly some sweet or glucose when their blood sugar level drops. That saves their life and also from epilepsy. But when the Guests around, instead of hiding and consuming it one can just brief them the cause and consume in front of them. Won't that avoid unnecessary embarrassments? Without telling them may create misunderstandings, instead telling them would cause them to come forward to do any assistance or help that may require for the patience. In this the message is that than the priorities of actions too, it is important not to hide the eating in front of the Guests as a culture. By doing so one's value increases with the Guest and never decreases.

No one is going to share the medicine; even then consuming without hiding to the Guest as basic manners makes them not to feel humiliated.

Similarly though the food is expensive or precious, it is good manners to share and eat with Guests and otherwise is bad manners. The message is that the Guests are more precious and valuable than the nectar or precious food.


Message :
Either nectar or medicine, eat with the guests.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...