Saturday, August 29, 2009

திருக்குறள்: 83

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 83
Chapter : 9

Hospitality

Thirukkural

: 83


வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து, பாழ்படுதல் இன்று.

பொழிப்புரை :
[தம்மிடத்தே] வருகின்ற விருந்தினரை நாள்தோறும் பேணுபவனது வாழ்க்கை, வறுமை மிகுந்து பாழ்பட்டுப் போவது இல்லை.

விரிவுரை :
தம்மை நோக்கி வருகின்ற விருந்தினரை நாள்தோறும் விரும்பிப் பேணுபவனது வாழ்க்கை, வறுமை மிகுந்து வீணாகி, பாழ்பட்டுப் போவதில்லை.

மாறாகச் செழிப்படையும் என்பது உட்கருத்து. அதாவது தோண்டத் தோண்ட ஊற்றுத் தண்ணீர் சுரப்பதைப் போலவே, கொடுப்பவர்க்கு விளைச்சலே மிகும். வறுமை அல்ல. இது ஓர் இயற்கைத் தத்துவம். மேலோட்டமாகப் பார்ப்பவருக்கே கொடுக்கக் கொடுக்கக் குறைவல்லவா ஏற்படும் என்று தோன்றும். உண்மையில் யாருக்குக் கொடுக்கும் மனம் வருகிறதோ அவருக்கு அவரை அறியாமலேயே வசதி வாய்ப்புக்கள் பெருகி, கொடுக்கின்ற தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும். எனவே வறுமை என்பது தோன்றாது மாறாக இன்னும் வளர்ச்சியே மிகும்.

இங்கே வைகலும் என்பதற்கு நாள்தோறும் என்பது மட்டுமன்று, தங்குதல், கழிதல் என்னும் பொருளும் உண்டு என்பதால், அதாவது வந்த விருந்தினரை வீட்டில் அமரச் செய்து விட்டு தன் பணியைத் தொடருதல் என்பதும் உண்மையில் நாகரீகமற்றது. அதாவது இன்றைய நாளிலே, தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்போர் வந்த விருந்தினரை, பேச்சுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருத்தல் தவறு. அவர் என்ன காரியத்திற்கு வந்தார் என்பதை அறியாமலேயே அவரையும் தான் காணும் தொலைக் காட்சி நிகழ்ச்சியை மறைமுகமாக வற்புறுத்திப் பார்க்க வைத்தலும் தவறே.

முதலில் வந்த விருந்தினருக்குக் கவனம் கொடுத்தல் முக்கியம். அவர் தமது வீட்டில் தங்கி இருக்கும்வரையிலும் அவரோடு தங்கி, அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்தலே நாகரீகம். அப்படி என்றால் எல்லாரும் விருந்தாக மற்றோர் இல்லம் சென்று வாழலாமே என்பது குதர்க்கம், தேவையற்ற எண்ணம்.

விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தல் வேண்டும். ஏனென்றால் நீங்கள் விருந்தினராக மற்றையோர் இல்லம் நாடிச் செல்லும் சமயம், உங்களையும் அவர் இன்முகத்தோடு வரவேற்றுப் புண்படாமல் காப்பார் என்று கொள்ள வேண்டும், நம்ப வேண்டும். அப்படி அவர் செய்யவில்லை எனில் அவரை நாடி மீண்டும் நீங்கள் செல்லப் போவதில்லையே. அவ்வமயம் அவரும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மீண்டும் உங்களை நாடி வருவார்.

விருந்தினரைப் பேணுதல் என்பது அவருடன் கழிக்கும் இனிமையான பொழுதே. ஒருவர் உங்களை நாடி வந்தால் முதலில் அவரை இன்முகத்துடன் வரவேற்று, அவர் அருந்த ஏதாவது பானமாவது அன்றில் நீராவது கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்திப் பிறகு பேசுதல் வேண்டும். அவர் நோக்கம் அறிந்து, அவருக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்து, அவரை ஓய்வெடுக்கச் சொல்லி உதவிகள் செய்ய வேண்டும். அவர் வந்த நோக்கத்தைத் தடித்தனமாகக் கேட்காமல், அவர் வந்துள்ள நேரம், காலம், சூழ்நிலை அறிந்து ஊகித்து அறிய முற்படுவதோடு, அவராக அவர் வந்திருக்கும் காரணம் பற்றிப் பேசுமாறு செய்தல் வேண்டும். வந்துள்ளவர் புதியவர் என்றால் என்ன விபரம் என்று நேரடியாகக் கேட்கலாம்.

வந்தவர் இரண்டு நாட்கள் தங்கி அவருக்குத் தனிப்பட்ட காரியத்தை ஊரில் செய்ய வந்திருக்கிறார் என்றால், அவருக்கான வழிமுறைகளைச் சொல்லி விட்டு, ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுச் செய்துவிட்டு, என் வேலையைச் தொடரலாமா என்று கேட்டுத் தொடரலாம்.

சில சமயங்களில் வரும் விருந்தினர் அனைவரும் உயர் குணங்களோடு இல்லாது போவதுண்டு. அவர்கள் பிறரிடம் கிட்டும் இலவசங்களுக்காக வரும் சுய நல வாதிகளாகவும், கொடுப்பவரின் தாராள மனப்பான்மையை அல்லது அவரது கருணையைப் பயன் படுத்திக் கொள்வதற்கென்றே இருப்பதுவும் உண்டு. எனவே அத்தகையோரை அனுபவங்களில் உணர்ந்து, தேவையற்ற பயன் பாடுகளை வழங்குதலை நாசூக்காகத் தவிர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதைப் போலவே எல்லா விருந்தினர்களும் உங்களைச் சுரண்டி இலாபம் பெற வருவதில்லை. இருப்பினும் உங்களுக்குப் பிடிக்காத உதவியை, செய்கையை அவர் எதிர் பார்த்தால் அவர் மனம் புண்படாதவாறு உங்களின் இயலா நிலையை அவருக்கு விளக்கிப் புரியவைத்து, அக் காரியத்தை நீங்கள் செயல்படுத்தாதும் இருக்கலாம். அதாவது வெளிப்படையாகப் பேசி விடுவது தேவையற்ற அனுமானங்களைச் செய்வதைத் தடுத்துவிடும்.

அதைப்போலவே ஒருவருக்குச் செய்யும் உதவியானது, எதிர்பார்ப்பின்றிச் செய்தால் மிக நல்லது. நன்றி உள்ளவர்களுக்குச் செய்கின்ற உபகாரம் என்றைக்கும் நன்மை பயக்கும் எனும் நம்பிக்கை மட்டுமே போதும், நமக்குக் கெடுதல் வாராது, குறைவு வாராது மாறாக நாம் ஆற்றும் நன்மையைப் போன்று பன்மடங்கு நன்மை, நமக்குத் தானாகவே தேடி வரும். நம்புங்கள்.

பெரும்பாலும் நாம் பிறரிடம் எதை எதிர் பார்க்கிறோமோ அதையே நாம் அவர்களுக்குச் செய்தல் நலம் என்பார்கள். ஆனால் இதில்கூட “எதிர் பார்ப்பு” இருக்கிறது. ஆயின் நாம் நல்லவர்களாக இருந்து, நன் நடத்தையைக் காட்டி மற்றவர்களுக்கு எப்போதும் உதாரண புருடர்களாகத் திகழ்ந்தால் மிக்க நல்லதல்லவா?

விருந்தாடிகளை வரவேற்பதிலும், உண்பதிலும், உபசரிப்பதிலும் அன்பையும், இனிமையையும், பண்பையும் காண்போம். நிச்சயம் நன்மைகள் நம்மைத் தொடரும்.

குறிப்புரை :
விருந்தினரைப் பேணுவதால் வறுமை வாராது; செழுமையே நிறையும்.

அருஞ்சொற் பொருள் :
வைகல் - தங்குதல், வாழ்தல், கழிதல்
வைகலும் - நாளும், நாள்தோறும்
ஓம்புவான் - பேணுவான்
பருவந்து - பெருத்து, மிகுந்து(வறுமை பெறுத்து இவ்விடத்தே)
பாழ்படுதல் - அழிவடைதல், நாசமாகுதல், வீணாகுதல்
இன்று - இல்லை, கிடையாது.

ஒப்புரை :

ஔவையார். ஆத்திச்சூடி:
நன்றி மறவேல். 21
சேரிடமறிந்து சேர். 50
பீடுபெற நில். 79


ஔவையார். கொன்றைவேந்தன்:
ஐயம் புகினும் செய்வனசெய். 9
தோழனோடும் ஏழமை பேசேல். 47
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். 74
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம். 75

ஔவையார். நல்வழி: 18
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டா - மற்றோர்
இரணக் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.

***

In English: (Thirukkural: 83)

varu virunthu vaikalum OmbuvAn vAzhkkai
paruvanthu, pAzhpaduthal inRu.

Meaning :
Life of those who tend and care the guests day-by-day will not go ruin by impoverishment.

Explanation :

The Life of those who tend and care their Guests everyday will not go ruined by poverty.

Instead their Life will flourish and prosper. It is like the flow of water in a well that fills back as long as it is drawn, the givers get filled with more yields and not poverty. This is a law of nature. Superficial look makes one to think that when something is given it gets reduced. In fact, one who gets bighearted gets unconsciously his wealth and comforts rising to make him affording. Therefore it yields no poverties but only more wealth.

"Vaikal" in Tamil means not only "daily" but also "staying" and "spending". Hence it is improper again and discourtesy to leave the guests in bay and doing one's own work. Nowadays, those who keep watching TV at their receptions or halls just say 'hello' to their guests and continue to watch their show ignoring or giving any importance to the visitors. That is completely wrong thing to do. Even without knowing what purpose made the Guest to visit him, it is only wrong again to make him watch the show forcibly indirectly.

Firstly it is important to give the attention to the visiting Guests. Also as long as the Guests stay making them more comfortable is again a good manner necessary. It is absurd and perverse argument that it would make everybody to become the Guests in someone's house.

You should treat the Guest with kind and compassion. Because you must believe that when you become the Guests and visit them they will reciprocate you the same way. If they do not treat you well, you won't visit them anymore. Subsequently they too won't have any face to visit you later.

Treating the Guests is nothing but entertaining and enjoying moment spending with them. When someone visits you, welcome him or her with pleasing smile, then offer a cold drink or water to make the visitor to ease first and then converse. By understanding the visitor's intention of visit, make necessary comforts and help him to take rest. Don't be blatant in asking the purpose of his visit but try to guess and understand by the time and situation and induce him to talk about his visit by himself. It is Ok to ask him directly the details, if the visitor is a stranger.

If the visitor has come to stay for couple of days to do his personal work at your place, you can offer help for any guidance required, followed by offering any other helps as necessary after asking him, you may politely ask and continue to care about your own work.

Sometimes, few visitors turnout be of not good quality. They may be selfish, greedy and exploiters of the bighearted host. Therefore one must be good enough to understand such through experiences and avoid unnecessary offerings decently. Same way not all the visiting Guests would be of such to exploit you. However, if you do not want to offer something you don't like to do, you can politely explain them your discomfort and inability and need not to do the thing. It is better to talk openly to avoid and stop the unnecessary misunderstandings later.

Similarly it is better to offer help to anyone without expecting anything in return. The hope that the help offered to a thankful will never go waste is sufficient. No evil thing befalls on you and no any poverty strikes on you. Instead for all the good things you do, only multiplies benefits come to you automatically. Trust this.

They say that it is better to do same things to others what we expect out of them. But there is an "expectation" in this too. But being good and offering good to others in general makes one exemplary to others. Is it not good one to be such?

Let us show kindness, Love and culture in welcoming, tending and treating our visitors. Certainly good things follow us.


Message :
Tending the Guests will bring no impoverishment but only prosperity and enrichment.

***

2 comments:

  1. Nakesh on Sep 1, 2009:

    Life of those who tend and care the guests day-by-day will not go ruin by impoverishment.



    later the person who feeds them will be termed as elicha vayan .In Tamil there is a saying,ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

    ReplyDelete

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...