Sunday, October 11, 2009

திருக்குறள்: 114 (செயல்கள் சொல்லும் நீதி...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 114

செயல்கள் சொல்லும் நீதி...

In English

தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும்.

பொழிப்புரை :
சான்றோர்/நடு நிலையாளர் எனச் சொல்லத் தக்க தகுதியுற்றவர், தகுதி இல்லாதவர் என்பது அவர் அவர் செய்துள்ள வினைப்பலனால் தெரிய வரும்.

விரிவுரை :
நடுநிலைமைமிக்க சான்றார் எனத்தக்க தகுதியுற்றவர், தகுதி அல்லாதவர் என்பவை அவரவர் செய்துள்ள வினைப் பயன்களால் காணப்படும்.

நடுநிலை தவறிய, அநியாயமான பொருள் ஈட்டல்கள், ஆக்கங்கள் ஊதாரி மக்களால் செலவு செய்யப்படுவதும், அவர் கண்ணின் முன்னேயே அழிவுறுவதும், பேரிடர் படுவதும் அவை ஒழுக்கமற்றவரின், ஒழுக்கமற்ற முறையில் கிட்டியவை என்பதை உணர்த்திவிடும். அதைப் போலவே, நடுநிலை மிக்க நல்லார் ஒருவரின் சொத்துக்கள் அழிவுபடாமையும், அவரது வாரிசுகளிடம் பிரதிபலிக்கும் நல்ல குணங்களாலும் அறியமுடியும். அத்தகைய நல்லோர் செய்வித்த பொருட்கள் காலத்திற்கும் நின்று நன்மை பயப்பதைக் காணுங்கால் அவர்தம் ஒழுக்கநெறியும், மேன்மையும் புலப்படாதா?

திருடிச் சேர்த்தவை, கொள்ளையடித்துச் சம்பாரித்தவற்றைக் கொண்டு எவனும் நிம்மதியாக வாழ்ந்ததாய்ச் சரித்திரமில்லை. அதுவே அவனை அழித்துவிடுவதை, தீயவழியில், அராஜகத்தில் மேலும் அவனைச் செலுத்துவதை நாம் அன்றாடம் காணலாம்.

எனவே செயல்களின் தன்மையைக் கொண்டே ஒருவர் நடுநிலையளரா அல்லவரா என்பதை அறியலாம். அவரவர் செயல்பாடுகளுக்குத் தக்கவே சமுதாயம், ஊர், உலகம் அவரைச் சீராட்டிப் பாராட்டவோ அன்றில் தூற்றிக் கரிக்கவோ, ஒதுக்கவோ செய்கின்றது. ஆகவே அதனாலும் நடுநிலையாளரை அடையாளம் காண்பது மிகவும் எளிது.

குறிப்புரை :
செயலின் பலனைக் கொண்டே நடுநிலையாளரை அடையாளம் காணலாம்.

அருஞ்சொற் பொருள் :
தக்கார் - நடுநிலையாளர்

ஒப்புரை :

திருமந்திரம்: 322
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

திருமந்திரம்: 922
நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவண் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

திருமந்திரம்: 1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

ஔவையார். ஆத்திச்சூடி:
54. தக்கோ னெனத்திரி.
57. தீவினை யகற்று.

ஔவையார். கொன்றைவேந்தன்:
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 114

The deed's Justice...

thakkAr thakavu ilar enpathu avar avar
echchaththAl kANap padum.

Meaning :
Just or unjust is the person appears through their respective residues.

Explanation :

Whether one qualifies as the just and or otherwise is known through their deeds.

Unjustifiably and unfairly earned wealth and creations get spoilt by the spent thrift offspring; get destroyed before their own eyes, yield disasters and all such will show up that all came from the undisciplined in the illegal ways. On the other hand one can easily witness the properties of the just and wise not getting destroyed and the good qualities and characters reflecting in their progenies. When the creations of such ever last usefully, won’t their greatness and goodness discern?

The robbed and stolen things and the plundered earnings by one in no history have ever let them live in peace. Instead that itself destroys them completely or again pushes them to continue the bad things forever is what we see.

Therefore by the qualities of the deeds itself one can easily identify whether the person is of the just or not. Society recognizes individuals only through their respective activities to tend and appreciate or to slander and avoid them. Therefore through that too it is very easy to figure out the just people.


Message :
Through the deeds by itself a just person can be identified.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...