Friday, October 16, 2009

திருக்குறள்: 119 (சொற் குற்றமற்ற நீதி...)


அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 119

சொற் குற்றமற்ற நீதி...

In English

சொற் கோட்டம், இல்லது செப்பம்-ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

பொழிப்புரை :
சொல் வழுக்கு இல்லாது [ஆகும்] நடுநீதி; ஒரு தலை உளச் சாய்வு இலாது பெற்றால்.

விரிவுரை :
ஒருதலை உளச் சாய்வு இன்றிப் பெற்றால், சொல் பிறழ்தல் இல்லாது சொல்லும் நடுநீதி அமையும்.

அதாவது எண்ணத்தாலும் ஒருதலைச் சார்பு என்பது இல்லாது நீதி பெறப்படுமாயின் அஃது சொற் குற்றம் அற்ற நீதியாக இருக்கும்.

எண்ணத்தால் ஒருதலைச் சார்பைக் கொண்டு செய்யப்படும் நீதி, சொல்லப்படும் சொற்கள் வழுவி பழுது பட்டுவிடும். எனவே நடுநிலைமை தவறாது இருத்தல் என்பது உள்ளத்தாலும், எண்ணத்தாலும், செயலாலும் ஆகும். அதுவே சொற்களாய்ப் பிறகு வடிவு பெற்றுச் செழுமை செய்யப்பட்ட நடு நீதியாக வெளிவரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்வதல்லவே நீதி.

ஆகவே சொல் வழுக்குப்படாது ஒருவர் துலங்க அவரது எண்ணங்கள் எப்போதும் நடுநிலையோடு இருத்தல் வேண்டும்.

குறிப்புரை :
உளத்தே நடுநிலைமையோடு செய்யப்படும் நீதியே சொற் குற்றமற்றுத் திகழும்.

அருஞ்சொற் பொருள் :
கோட்டம் - அந்தி, அழுக்காறு, கோணல், வளைவு, மாறுபாடு, கோவில், நெளிவு, ஒருபால் கோடல், சாய்தல்
செப்பம் - ஒழுங்கு, செம்மை, நேர்த்தி, நடுநிலை, நேர்வழி, நடுநீதி, பழுதுபார்த்தல், பாதுகாப்பு.

ஒப்புரை :

திருமந்திரம்: 391
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர்ந் தானே

திருமந்திரம்: 974
பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.

திருமந்திரம்: 1076.
அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே.

ஔவையார். ஆத்திச்சூடி:
7. எண்ணெழுத் திகழேல்.
74. நொய்ய வுரையேல்.
76. பழிப்பன பகரேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
87. மனந்தடு மாறேல்.
98. வல்லமை பேசேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 119

The word error free judgment...




In Tamil

soR kOTTam, illathu seppam-oruthalaiyA
utkOttam inmai peRin.

Meaning :
Unbiased mind provides the judgment with error free words.

Explanation :
When the justness is drawn with no support to one side in mind, the said judgment will have no errors in its words.

Unbiased mind and thinking yields the justness with no faults. Therefore such judgment will be literally error free in its deed.

The judgment made with support to any one side in the mind will deliver improper, imperfect and impaired sentence. Therefore the justness unbent must be in the mind, in the heart, in the thinking and in the deeds of the judge. That would shape up the proper sentence with words of no faults what so ever. The judgment must be the same in words and deeds and it cannot differ inner and outer in its sense. Is it not?

Therefore for the sentences to be proper one must have unbiased thinking and justness in heart at always.

Message :
The judgment made from the unbiased mind will be faultless in words.

***

3 comments:

  1. தீபாவளி அன்று நாங்கள் திரை விமர்சனம் எழுதும்போது நீங்கள் திருக்குறள் உரை எழுதுகின்றீர்கள்.
    அனைத்து பதிவர்களின் சார்பாக வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    ReplyDelete
  2. வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றிகள் நண்பர் செல்வக்குமார் அவர்களே.

    குறளில் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளதே. குறைந்த பட்சமாக தினமும் ஒரு குறளை விளக்கினால் கூட மூன்றரை வருடம் தேவைப்படுகிறதே. இடையில் அவ்வப்போது முகவுரைகளும், முடிவுரைகளும் வேறு.
    எனவே பண்டிகைகளிலும், விடுமுறைகளிலும் கூட இடைவிடாது தொடர வேண்டி உள்ளது.

    எனவே எல்லா நாட்களும் நமக்கு ஒன்றுதான். கொண்டாடப்பட வேண்டிய சிறந்த நாட்கள்தான்.

    அனைவரும் சிரமம் கருதாது எல்லா நாட்களிலும் குறள் அமுதத்தைப் பொறுத்து ஏற்றுக் கொள்வீர்களென நம்புகின்றேன்...

    ReplyDelete

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...