Wednesday, October 21, 2009

திருக்குறள்: 122 (உயிரின் உயரிய ஆக்கமே அடக்கம்...)



அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 122

உயிரின் உயரிய ஆக்கமே அடக்கம்...

In English

காக்க, பொருளா அடக்கத்தை-ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை, உயிர்க்கு.

பொழிப்புரை :
காக்க அரும் பொருளாக அடக்கத்தை; ஆக்கம் அதனினும் உயர்ந்தது இல்லை [மனிதர்] உயிருக்கு.

விரிவுரை :
ஒருவர் அடக்கத்தை அரும் பொருட் செல்வமாகக் காக்கவேண்டும். உயிருக்கு அதனினும் உயர்ந்த, மேம்பட்ட ஆக்கம் வேறு ஏதும் இல்லை.

ஒருவர் ஓம்பும் அடக்கமே அவரது உயிருக்கு உயரிய செல்வம் ஆகும். எனவே அதைப் போற்றிப் பாதுகாத்து ஒழுகுதல் வேண்டும். உயிரே போலும் முக்கியக் குணமென்பதை, உயிருக்கே ஒருவர் தரும் உயர்வுமிக்க ஆக்கமாய் ஆக்கிவிடுகின்றார் வள்ளுவர்.

மனிதரின் ஆக்கங்கள் புலன் உணர்வுகளுக்கே என்பதையும் மீறி, அடக்கம் எனும் ஆக்கம் உயிருக்கே உரியதாய் கொள்ளுவதாலும், அதிலும் உயரிய ஆக்கமாய்க் குறிப்பதாலும் அதற்குத் தரப்படும் முக்கியத்தை உணரவும். மானம், புகழ் போன்றவை மனிதர்தம் உயிருக்கு உணர்த்தப்படும் நற்குணங்களாகும். ஆக அதனிலும் அடக்கமே மேம்பட்ட ஆக்கம் எனும் சிறப்புப் பெறுகின்றது என்பதே உணரவேண்டிய பொருள். தன் அடக்கம் எனும் மனத் திடத் திறத்தாலேதான் ஒருவரின் மற்றைய குண நலன்கள் அமையப் பெறுகின்றன என்பதாலேயே இதற்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஈண்டு பெறத்தக்கது.

எனவே அத்தகைய மேம்பட்ட அடக்கமெனும் ஆக்கத்தை வழுவாது ஒழுகிக் காத்தல் வேண்டும் என்பது முதற் குறிப்பு. பின்பாதி அவ்வடக்கம் உயிருனும் மேன்மையானது என்பது முக்கியத்துவத்தைக் காட்டப் பயன்படுத்திய ஒப்பீட்டுக் குறிப்பு.

குறிப்புரை :
அடக்கத்தைக் காட்டிலும் உயர்வான செல்வம் உயிருக்கு ஒன்றில்லை, எனவே அதைப் பேணிக் காக்கவும்.

அருஞ்சொற் பொருள் :
ஊங்கு - உயர்ந்தது, மேம்பட்டது, சிறந்தது

ஒப்புரை :

திருமந்திரம்: 666.
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட .(1). கூத்தனும் நாடுகின் றானே
.(1). கூத்தனை நாடுகின் றேனே

திருமந்திரம்: 748.
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே

திருமந்திரம்: 799.
கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே

திருமந்திரம்: 1061.
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே.

திருமந்திரம்: 1062.
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

திருமந்திரம்: 1103.
தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

திருமந்திரம்: 1108
உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே.

திருமந்திரம்: 2041
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே.

திருமந்திரம்: 2042
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

திருமந்திரம்: 2043
கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

திருமந்திரம்: 2055
தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.

திருமந்திரம்: 2057
குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
7. திருவெம்பாவை:

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163

பட்டினத்தார்:
அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. (25)

சிவவாக்கியர்:
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலொதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே. (209)

ஔவையார். ஆத்திச்சூடி:
55. தக்கோன் எனத் திரி.

ஔவையார். கொன்றைவேந்தன்:
17. கீழோர் ஆயினும் தாழ உரை

ஔவையார். மூதுரை:
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 122

Soul's greater wealth, the self-control...




In Tamil

kAkka, poruLA adakkaththai-Akkam
athanin Ungu illai, uyirkku.

Meaning :
Safeguard the self-control as an invaluable asset; No greater wealth than this is for the soul.

Explanation :

One should preserve the self-control as a precious wealth. There cannot be any greater accomplishment than that for the soul.

One's sustained self-control alone is the highest wealth of the soul. Therefore one should protect and preserve it. It is an important trait which is as good as his life; hence Valluvar makes it as the greatest achievement a soul can get.

Men's creations or accomplishments are not only for the senses but also meant for the soul and that too as the highest of achievements are mentioned only to specify and to understand its importance. Dignity, fame and such good human attributes are meant for their soul. But even among such attributes, self-control is of the greatest importances is notable here. All the traits and qualities of a person depend by his capacity of self-control; that is why such an importance is given to the same is easily understandable.

Therefore safe-guard such precious self-control and preserve without fail is the first part of the kural. And the rest of it is a comparative statement that self-control is such a greater trait for the soul is to speak about its highest importance.


Message :
No greater wealth than the self-control for the soul, therefore foster and protect the same.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...