Monday, August 17, 2009

திருக்குறள்: 72

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 72
Chapter : 8

Love

Thirukkural

: 72


அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார்
என்பும் உரியர், பிறர்க்கு.

பொழிப்புரை :
அன்பிலார் எல்லாவற்றையும் தமக்கென்று உரிமை கொள்வர்; அன்பு உடையவர் தம்மையும் பிறர்க்கு உரியதாய்க் கொள்வர்.

விரிவுரை :
அன்பிலார் எல்லாப் பொருட்களையும் தமக்கென்றே உரியது என்போர். அன்பு உடையவரோ தம்மையே, தமது என்பையும் கூடப் பிறர்க்கு உரியது என்போர்.

உண்மையில் பொருட்களின்பால் அதீதப் பற்றே ஒருவருக்கு அன்பில்லாமை ஆக்குவது கண்கூடு. மாறாக அன்புடையோர் பொருட் பற்றற்ற நிலைமையில் அன்பு மேலிட தம்மையே பிறர்க்குத் தரவும் தயங்கமாட்டார். அன்பின்மை எதையும் தனதாக்கிக் கொள்ளவும், எதையும் வாங்கிக் கொள்ளவுமே விரும்பும். அன்புடைமை எதையும் பிறர்பால் கொடுக்கவே விரும்பும்.

பல சமயங்களில் உணவு உண்ணும் போதும் இதை நன்றாக உணரலாம். அன்பில்லாதவர் அனைத்தையும் வாரித் தான் உண்ணத் தலைப்படுவர். அன்புடையாரோ தமக்கு இல்லை என்ற போழ்திலும் கூட, தமக்கு அன்புடையவரையும், பிறரையும் உண்ணவைத்து, பொதுவாகப் பிறரோடு அன்போடு பகிர்ந்து உண்பர்.

பெரும்பாலும் ஒருவரின் உயர்வான அர்ப்பணித்தலை அவரின் உடல், பொருள், ஆவி என்று சொல்லுவார்கள். அன்பு உடையார் தம்மையே பிறர்க்குத் தரவும் விரும்பியபோழ்திலும், அது அன்பிற்கு அடிமையாகி விடுவதாலும், அவர் உயிர் கொண்டு இருப்பதாலும் மாறுவதற்கும் இடம் உண்டு என்பதனால் வள்ளுவர் என்பையும் என்றார் என்றே தோன்றுகின்றது. என்பு அதாவது எலும்பு என்பது ஒருவர் இறந்தாலும், அவர் உடல் அழிந்துபட்டாலும் மறையாதது என்பதால், அழியாத தமது அங்கத்தினையும் தருவார் என்பது நுணுக்கப் பொருள்.

ஆயின் இன்றைக்கு தமது உடல்களைத் தாங்கள் வாழும்போதே அர்ப்பணிக்கும் அன்புநிறை ஆத்மாக்களும் உள்ளனர். கணவர்களுக்கும், மனைவியரும் தம் அன்புக்குரியவர்களுக்கு இரத்தம், சிறு நீரகம் போன்றவற்றை வழங்கி வாழ வைப்பது இன்று அதிகமாகக் காணக் கிடைக்கின்றது. அறிவியலின் வளர்ச்சி ஒருபுறம் இவ்வாறாக இருப்பினும், இவ்வாறு ஓர் உயிர் பிழைப்பதற்காகத் தங்களையே தரவும் துணிவதற்கு அடிப்படைக் காரணம் அன்பு ஒன்றே.

வெளி நாடுகளில் தமது செல்லப் பிராணிகளுக்கு தமது சொத்து முழுவதையும் எழுதி வைத்து விட்டு இறந்து போகின்றவர்களை அதிகம் பார்க்கிறோம். புறாவிற்குச் தன் சதையையே அளித்த சிபிச் சக்கரவர்த்திக் கதையும் நம்மில் உண்டு. அன்பின் மிகுதியால் தான் வணங்கும் சிலையின் கண்ணில் வடிந்த ரத்தக் கண்ணீருக்கு, தமது கண்ணையே அளித்த கண்ணப்ப நாயனார் கதையும் உண்டு. தமது உயிரையும் பொருட்படுத்தாது தன் எஜமானரை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் கால் நடைப் பிராணியான நாய்களும் உண்டு.

அன்பிற்குச் சிறந்த அடையாளம் தாய், சேய் உறவு. தாய் எதையும் தன் மக்களுக்குக் கொடுப்பதிலும், அவர்களின் மகிழ்ச்சியில் தாம் மகிழ்வதும் அன்பின் வெளிப்பாடுகளே. அது போலவே தாயைக் காத்தலும், தாய் நாட்டைக் காத்தலும், தாய் நாட்டிற்காக உயிரை விடுத்தலும் அன்புடையோரின் அர்ப்பணிப்புக்களுக்கான உதாரணங்கள்.

எனவே அன்பு உடையோர் தமக்கென்று எதையும் விரும்புவதைக் காட்டிலும், பிறருக்குத் தம்மையே வழங்குவதில் இன்பம் கொள்ளுவர் என்பதே உண்மை.

குறிப்புரை :
அன்புடையோர் தம் என்பையும் பிறர்க்குத் தருவர். வழங்குதலே அன்பின் சிறப்பு.

அருஞ்சொற் பொருள் :
என்பு - எலும்பு, புல்

ஒப்புரை :

திருமந்திரம்: 271
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

ஔவையார். மூதுரை: 30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்.

ஔவையார். ஆத்திச்சூடி: 36
குணமது கைவிடேல்.

ஔவையார். ஆத்திச்சூடி: 41
கொள்ளை விரும்பேல்.

***

In English: (Thirukkural: 72)

anpu ilAr ellAm thamakku uriyar; anpu udaiyAr
enpum uriyar, piRarkku.

Meaning :
The loveless grasp everything for their self; the loving offers even themselves, their bones, to others.

Explanation :

Those who are devoid of Love covet everything for themselves whereas those who posses the Love, offer even their bones, themselves to others.

In fact only the greedy and materialistic turn to Loveless in general. On the other hand, those who contain Love are true givers and they won’t mind even offering themselves to others. Loveless is selfish and wishes only to receive from others while Loving loves to give others.

This is more evident when you observe people during their lunch time. The Loveless will try to take all for himself to eat. But the Loving will have heart to offer others first, pave way for others to have happily though there may not be food left for themselves. Loving enjoys the joy of others.

Generally they say that the supreme dedications are by body, heart, mind and soul apart from wealth and assets. Though the Loving wishes to offer themselves to others, it means it leads to some kind of slavery. Since there is a ‘living’ thing in oneself, there is a chance that one might change. Therefore Valluvar seem to point the bone of a person as the great sacrifice which won’t change as well. Also that may be because bone doesn’t get destroyed even after death.

But today we could see great souls offering themselves their bodies to use after death for studies and researches. Also we could see many husbands and wives offering kidneys, blood and other body parts to save their loved ones. Besides the science advancement in these cases, to save a life dedicating and sacrificing themselves all are fundamentally because of the Love.

We hear more about the wills of the dead written their entire properties for their pets in abroad. There is a story in Tamil history, about the great King, Sibi, who had offered his flesh to save a damaged dove. Also there is a story of Kannappa Nayanar, who offered his eye to replace the damaged eye of God’s statue. There are many pets which have saved their fatal prone masters from death not caring their own lives.

Good symbol for the Love is the relation between mother and the kid. Mother always loves to give to her children and joys in their happiness. All these are the result of Love. Same way goes saving the mother, mother country and sacrificing for the freedom of nation etc. All these are just true Love.

Therefore it is true that the Loving enjoys in dedicating themselves to others cause than wishing anything for themselves.


Message :
Loving offer even their bones to others. Giving is the specialty of love.

***

2 comments:

  1. Nakesh Wrote:

    /the loving offers even themselves, their bones, to others/


    Aatu Kaal can be used for Paya curry, but What is the use of having human bones ?

    ReplyDelete
  2. Replied On Aug 19:
    //Aatu Kaal can be used for Paya curry, but What is the use of having human bones ?

    ’கை’ கொடுக்கும் நண்பர்களும், ‘இதயத்தை’ தரும் காதலும் இருக்கும் உலகில், ‘என்பெனும்’ அன்பைத் தருவதும் வழக்கமாம் அன்புடையோருக்கு.

    அன்புடை மாந்தரின் இன்னல்களுக்கும் அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கும் அன்புடையோர் தம் ‘உயிரை’ யும் பொருட்படுத்தாது எதிர்த்து நிற்க, நெஞ்சிலே பலமும், உள்ளத்திலே உரமும், உடம்பிலே ”முதுகு எலும்பும்” வேண்டும்.

    எதிரிகள் முதுகெலும்பை நொறுக்கிய போழ்தும் எதிர்த்து நின்று போராடிய மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கு, மனித நேயம் எனும் அன்பே ஆப்பிரிக்காவில் துணை நின்றது. கத்தியின்றி, ரத்தமின்றி அவர்தம் அகிம்சைப் போராட்டம் சூரிய அஸ்தமிப்பைக் காணாத தேசத்திற்கும் முதுகெலும்பில் சில்லிட வைத்தது.

    ஈழக் களத்தில் உயிரிழந்த நம் தோழர்கள் மறைந்த போழ்ந்தும், அவர்தம் ’எலும்புகள்’ இன்னும் அவர்களின் அர்ப்பணிப்பை, அன்பைப் பறை சாற்றிக் கொண்டு தானே இருக்கும்.

    ’அன்பர்களின்’ மறைவிற்கு வாரிசுகள் செய்யும் காரியம் கூட ‘எலும்பை’க் கொண்டுதானே எண்ணப்படுகிறது?

    பாயாவுக்கு வேண்டுமானால் ஆட்டுக் ’கால்’ போதும், அன்பிற்கு ‘என்பை’ த் தர பெரிய ‘மனம்’ வேண்டும்.

    ReplyDelete

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...