Monday, December 7, 2009

திருக்குறள்:160 (பொறுமை எனும் உயரிய நோன்பு...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 160

பொறுமை எனும் உன்னத நோன்பு...

In English

உண்ணாது நோற்பார் பெரியர் - பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்.

பொழிப்புரை :
உண்ணாமல் தவமிருப்போர் பெரியர்; பிறர் சொல்லும் இனியவை அற்ற சொல்லைப் பொறுத்துக் கொள்பவர்களின் பின்னரே.

விரிவுரை :
பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குப் பிறகே, உண்ணாமல் தவமிருப்போர் பெரியவர் என்று கருதப்படுவர்.

அதாவது உண்ணாமல் நோன்பிருக்கும் துறவியர் உயர்ந்தோர் எனினும், அவர்களைக் காட்டிலும் பிறர் கூறும் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களே மிகவும் உயர்ந்தோர் என்பதே உட் கருத்து.

மனம் ஒருங்கி நோன்பிருக்கப் பசி பொறுத்து உண்ணாமல் இருப்பது என்பது உயர்வானதே. இருப்பினும் அதைக் காட்டிலும் தீயோர் கூறும் கடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது இன்னும் உயர்வானதாகும்.

தன் உடம்பின் பசி பொறுத்தலைக் காட்டிலும் பிறர் திணிக்கும் இழிச் சொல்லைக் கொள்ளாது காட்டும் பொறுத்தல் மேன்மையானது. உடல் சகிப்புத் தன்மையிலும் உளச் சகிப்புத் தன்மை உயர்வானது என்பதே இதன் நுணுக்கம்.

பொறுமை இழத்தலின் முக்கியக் காரணம் பிறர் சொல்லும் தீய சொல்லை ஏற்றுக் கொண்டு எதிர் வினையாற்ற முயற்சிப்பதாலேயே அதிகமாக ஏற்படுகின்றது என்பதாலேயே இன்னாச் சொல்லைப் பொறுக்க வேண்டியதின் அவசியத்தை வள்ளுவர் இந்த அதிகாரத்தின் இவ்விரண்டு குறள்களாலும் வலியுறுத்திக் கூறி உள்ளார்.

எனவே இனிமையான இல்லற வாழ்விற்கு, பிறர் கூறும் இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். பிறர் கூறும் இன்னாச் சொல்லைப் பொறுப்பார் பூமி ஆழ்வார் என்பது நிச்சயம்.

பொறுமை எனும் நோன்பே உன்னதமானது.

குறிப்புரை :
பசி பொறுத்து உண்ணாது இருக்கும் நோன்பினும் பிறர் கூறும் இன்னாச் சொல்லைப் பொறுத்தல் உயர்வான தவமாகும்.

அருஞ்சொற் பொருள் :
நோற்பார் - தவம் செய்பவர், துறவிகள்,

ஒப்புரை :

திருமந்திரம்: 537.
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காமே.

திருமந்திரம்: 538.
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

திருமந்திரம்: 966.
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

திருமந்திரம்: 1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே.

திருமந்திரம்: 1603
அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

திருமந்திரம்: 1604
மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.

திருமந்திரம்: 1617
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

திருமந்திரம்: 1661
தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்)


நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83

ஔவையார். ஆத்திசூடி:
96. மொழிவ தறமொழி.
98. வல்லமை பேசேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
55. நேரா நோன்பு சீர் ஆகாது
17. கீழோர் ஆயினும் தாழ உரை

ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 160

Forbearance is the noble penance...




In Tamil

uNNAthu nORpAr periyar - piRar sollum
innAch chol nORpArin pin.

Meaning :
Those who fast and do penance are greater however only next to those forbearing the ill words of others.

Explanation :
Only after those forbearing the ill words of others, those who fast and do penance will be considered as great.

Though the ascetics who fast and do penance are great, still greatest are those who bear with the ill words uttered by others is the implicit meaning here.

Fasting by controlling the hunger by focused mind is great. However, bearing with the ill words uttered by wicked persons is considered as still greater.

Than controlling the hunger of the self, bearing others inflicted ill words is superior. The mental restraining is greater than the physical one is the subtle message here.

Important reason for the impatience is the urge to retaliate the ill words spoken by others. That is why Valluvar has given more importance and emphasized to bear with the ill words through these two Kurals of this chapter.

Therefore for a happy domestic order of life, forbearing with the ill words spoken by others is very important. Those who bear with the ill words uttered by others will rule the world as the saying goes as such.

Forbearance is the noble penance.

Message :
Than the fasting by abstaining from food, the forbearing the ill words of others is greater penance.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...