Showing posts with label thunai. Show all posts
Showing posts with label thunai. Show all posts

Tuesday, November 3, 2009

திருக்குறள்:132 (விரும்பிப் பேணுக நற்றுணை ஒழுக்கம்...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 132

விரும்பிப் பேணுக நற்றுணை ஒழுக்கம்...

In English

பரிந்து ஓம்பிக் காக்க, ஒழுக்கம்-தெரிந்து ஓம்பித்
தேரினும், அஃதே துணை.

பொழிப்புரை :
வேண்டி விரும்பிப் பேணிக் காக்க[வும்], ஒழுக்கம் - அறிந்து ஆராய்ந்து தெளிந்தாலும், அஃதே [சிறந்த] துணை.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
ஒழுக்கத்தை வேண்டி விரும்பி ஒழுகிக் காக்கவும்; அனைத்தையும் அறிந்து ஆராந்து தெளிந்தினும், மனித மேம்பாட்டிற்கு, வாழ்விற்கு ஒழுக்கமே சிறந்த துணை ஆகும்.

அதாவது ஒழுக்கத்தைப் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம், ஊர், உலகம், நல் அறம் எனப் பிறர் வலியுறுத்தினும் கூட, சில சமயங்களில் அவை நமக்குக் கடினமாக இருப்பினும் கூட, அவற்றையெல்லாம் காட்டிலும் உண்மையில் நல் ஒழுக்கத்தின்மேல் விருப்பம் கொண்டு ஒழுகி, அதை நம்மிடம் வழுவாதவாறு காக்க வேண்டும்.

வாழ்வில் உய்ய அனைத்தையும் ஆராய்ந்துப் பேணிப் பார்த்துத் தெளிந்தாலும் ஒழுக்கத்தை மீறிய, தவிர்த்த நல் வழி, துணை வேறு ஏதும் கிடையாது. அதாவது ஒருவருக்குத் தனிமனித சுய ஒழுங்கைப் போன்ற நல்ல அடிப்படை, அடிமட்டத் துணை வேறு ஏதும் கிடையவே கிடையாது. துணிவு, தெளிந்த சிந்தனை, ஆர்வம், விடா முயற்சி, திறமை போன்றவை முன்னேறுவதற்கு ஒருவருக்கான தனிப்பட்ட குணங்களாகினும் அடிப்படையில் இவற்றைக் கடைப்பிடிக்க நல் ஒழுக்கம் அத்தியாவசியமாகின்றது. ஒழுக்கத்தினின்று தவறாத குணமும் கடைப் பிடிப்பும் நிச்சயமாக வெற்றியையே நல்கும். ஒழுக்கமற்ற தன்மையில் வெற்றி என்பது தானாக நிகழும் விபத்தே.

நாம் ஏகும் சாலை நல்லதா, அல்லதா என்று சுய பரிசோதனை செய்து, ஒழுக்கமற்று வழுவிய பாதைகளைச் சீரமைக்க வேண்டிச் சிந்திப்பினும் கூட, அல்லது வேறு ஒருவர் சீர் செய்ய முயற்சித்தாலும் கூட, அடிப்படையில் ஒருவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் தன்மையிலேயே மீண்டும் வாழ்வின் வெற்றியோ, தோல்வியோ அமையப் பெறும். உதாரணத்திற்கு போதைப் பொருளிற்கு அடிமையாகியவரை எண்ணிப் பாருங்கள். அவர்களின் உண்மையான உடன்பாடின்றி, ஒழுக்கத்திற்குக் கட்டுப்படும் தன்மையின்றி அவர்களை எந்த வைத்தியமும் முழுமையாகக் குணப்படுத்திவிட முடியுமா? எனவே எவ்விதமாக ஆராய்ந்து பார்த்தாலும் மனித வாழ்வில் ஒழுக்கத்தை விடுத்து, அதாவது விட்டுவிட்டு, எந்தக் குண நலனையும் அமைத்துவிட இயலாது. மனித வாழ்வு எனும் கட்டிடத்திற்கு ஒழுக்கமே அடித்தள அடிக்கல் என்று கொள்ளலாம்.

ஆக ஒழுக்கத்தைத் தவிர்த்து வாழ்வில் முன்னேற்றம் என்பதோ, வாழ்விற்கு அர்த்தம் என்பதோ கிடையவே கிடையாது. ஆதலின் அப்படிப்பட்ட ஒழுக்கத்தை மருந்தே போலும் ஒழுகுவதை விட, அதன் பலாபலனை அறிந்த அறிவுடன், ஆர்வத்துடன், தீராக் காதலுடன், வழுவ மறுக்காத பாசத்துடன், வாழ்வை வெறுக்காத நேசத்துடன் ஒழுகுதலே நல்லது மட்டுமல்ல, வாழ்க்கை வெற்றிகளுக்கான வல்லதுமாகும்.

எனவே ஆராய்ந்து தெளிந்த நற்றுணையான ஒழுக்கத்தை, விருப்பத்தோடு ஒழுகிக் காத்து மேன்மையுறுவோமாக.

குறிப்புரை :
அடிப்படைத் துணையான ஒழுக்கத்தை விருப்பத்துடன் ஒழுகிப் பாதுகாக்கவும்.

அருஞ்சொற் பொருள் :
பரிந்து - இரங்கி, கருணையோடு, அன்போடு, இணங்கி, மன்றாடி, விரும்பிப் பணிந்து, வேண்டி, வக்காலத்து, சிபாரிசு

ஒப்புரை :

திருமந்திரம்: 2074
காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

திருமந்திரம்: 2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே.

திருமந்திரம்: 2076
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

திருமந்திரம்: 2077
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.

திருமந்திரம்: 2078
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே.

ஔவையார். ஆத்திச்சூடி:
60. தூக்கி வினை செய்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 132

Practice Discipline, the aid, with Love...




In Tamil

parinthu Ombik kAkka, ozhukkam-therinthu Ombith
thErinum, aHtE tuNai.

Meaning :
Fall in love, practice and preserve the Discipline; Of course all deliberations perceive discipline alone as the best intimate aid.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
Guard your good discipline with love and care by practicing and preserving it; all studies after all perceive and assure that discipline alone as the great and intimate aid.

Though the good disciplines are mostly imposed on us through parents, teachers, society, place, world, good virtues and others, and though at times they are tough and difficult to adopt, beyond all that one should have the true self motto and interest towards the discipline to follow meticulously without any negligence.

By all means when one completely analyzes to redeem the Life and conclude, there is no any greater method or avenues other than following the good discipline. That is actually there is no any good assistance or fundamental and basic aid to self than that of good self discipline. Though boldness, clear mind, desire, persistence, competence and such kind are the necessary traits for individual to succeed, essentially the good discipline is mandatory to adopt all these. Adhering to the un-deviating good discipline and sincere following will certainly yield success alone. Through indiscipline success happens only by accidents.

Though we retrospect and analyze whether we are in right path or not and then think and try to correct and rectify our wrong ways; or even when others try to rectify or set right us, basically one's own adopted self discipline alone can guide through one's own success or failure in Life. For example, consider the case of narcotic addicts. Without their real co-operation, without their interest to adhere to self control and discipline, is it possible to cure them completely through any medication? Therefore, however we analyze, without discipline or ignoring it in human life, no other trait or quality can be made inbuilt. For the concrete structure of the human being, we may consider, discipline as the necessary basement.

Therefore by omitting or ignoring the discipline there is no success or excellence or meaning to life at all. Hence, instead of practicing it as medication, practice it by understanding its results, with desire, love and care, without any hesitation to life. It is not just good alone but it is the only way to true success.

So Let us follow sincerely the good discipline, the good self aid with love and desire to succeed and excel ever.

Message :
Practice and Preserve the discipline, the basic aid, with interest and liking.

***

Friday, August 21, 2009

திருக்குறள்: 76

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 76
Chapter : 8

Love

Thirukkural

: 76


"அறத்திற்கே அன்பு சார்பு" என்ப, அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

பொழிப்புரை :
அறத்திற்கு மட்டுமே அன்பு சார்புத் துணையானது என்பார் அறியாதார்; [உண்மையில்] மறத்திற்கும் அதுவே துணை.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
அன்பானது அறவழிகளுக்கு மாத்திரமே துணை நிற்கும் என்று கொள்வார் அறியாதவர். அதுவேதான் அறமற்ற மறச் செயல்களுக்கும் துணை நிற்பதாகும்.

மற வழியில் நடப்பதற்கும் கூட அன்பே காரணாமாக நிற்கிறதாம். எப்படி? ஒருவரின் மறச் செயல்களுக்குக் காரணம் வெறுப்பும், நம்பிக்கை இன்மையும், கெட்ட எண்ணங்களுமே, பிறர்பால் அன்பின்மையுமே. அவற்றுக்கு அடிமுதல் காரணம் அவரது மனம் புண்படும்படி அல்லது அமைதியுறா வண்ணம் அல்லது துன்பம் தரும் ஏதோ ஒரு நிகழ்வு, அடிப்படையில் அன்பை மறுதலித்து நிகழ்ந்திருக்கும். எனவேதான் அவரது தீய செயல்களுக்கும், அவர் பால் வழங்கப்படாத அன்பே தூண்டுகோலாய்த் துணை நிற்கின்றது.

ஆக கெட்டவர்கள் என்பவர் எவரும் கிடையாது. அன்பற்றவர்களே, அன்பு காட்டப் படாதவர்களே அவர்கள் என்பது உட் கருத்து. அதாவது அன்பு செய்தால் கெட்டவர்களைக் கூட நல்லவர்களாக மாற்றிவிட முடியும் என்பது தெளிவு. அன்பினால் தீராத நோயையும் குணப் படுத்தலாம்; தீவிர வாதியையும் குணப் படுத்தலாம்.

அன்பு என்பது அனைத்தையும் சீர் செய்யும் அற்புத மருந்து; ஆதரவைத் தரும் ஒப்பற்ற விருந்து.

அன்பை அறிவோம்!





(1) வலியவரும் எளியவர்முன்
மண்டியிடும் மந்திரமும்
வீழ்த்தவரும் வேங்கையரும்
தாழ்ந்துவிடும் தந்திரமும்
அறிவுடை மேதையரும்
அண்டிவரும் விந்தையதும்
(4) கல்லும் கரைந்துவிடும்
காளையும் மடிதுயிலும்
நல்லவழிச் சாலைதேடி
அல்லவையும் ஓடிவரும்
முள்ளும் மலராகும்
முடிநாரும் மணமாகும்!




(2) இன்பமுற இன்னுயிர்கள்
ஈண்டுதமை நாடுவதும்
அன்புநெறி மாந்தர்பெரு
வாழ்வுநிலை கூடுவதும்
அன்புதரு இன்பநிலை!
இயற்கையது ஐயமிலை!
(5) மண்ணில் பிறக்கையில்
யாவரும் கேடில்லை;
அன்பைப் பெருக்கிவிடின்
யாவதும் கேடில்லை;
அன்பே இறையாகும்
அறிவோம் நலமாகும்!




(3) யாவரையும் அன்புநிறை
ஆதரவில் பேணிவரின்
கோபமும் அற்றுவிடும்
குறைகளும் இற்றுவிடும்
பைத்தியம் தெளிவாகும்
பார்வைகள் விரிவாகும்
(6) இன்பமும் துன்பமும்
அன்பின் விளைச்சலே;
உள்ளம் சுரக்கும்
உணர்வுக் கரைசலே;
அன்பேநம் அறிவும்;
அனைத்தும் அஃதே!

***


குறிப்புரை :
அன்பே நல்லவை, கெட்டவை அனைத்திற்கும் காரணம்.

அருஞ்சொற் பொருள் :
மறம் - அறமற்றது, கெட்டவை, வலியவை, வீரம்

ஒப்புரை :

திருமந்திரம்: 279
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.


திருமந்திரம்: 280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

***


In English: (Thirukkural: 76)

"aRaththiRkE anpu sArpu" enpa, aRiyAr;
maRaththiRkum aHthE thuNai.

Meaning :
Love only guides the virtue say the unwise; In fact it is for the wicked as well.

These explanations contain newer and exclusive messages.

Explanation :

The unwise say that Love guides only the virtue, but it also guides the vice indeed.

Love is the guide for the wicked too. How? The reasons for one’s evil doings are hatredness, unfaithfulness, no beliefs, ill treatments and no Love to others. Basic reason for all this could be that some ill treatment or heart paining incident or abuse or insult which lead to be not peaceful or any such occurrence or circumstance in which the Love is denied. Therefore the Love not shown becomes the cause for all the ill doings.

Therefore there is nobody born as vice. Those are either the Loveless in heart or whom others denied of Love. Hence if the Love is bestowed and provided, even the wicked can be rectified and made good. Love can cure even any incurable disease; Love can cure even the terrorists.

Love is a wonderful medicine that cures all. Love is a great incomparable treat that gives the support.


Let's Know the Love


The Strong bends to the Simple
The leaping Tiger bows in humble
The brainy too wants to mingle

The Livings approach for their joy
The Loving climb high and they enjoy
All for the Love, the natures rejoice!

Shower the Love to everyone
Sure will there be anger in none
Madness go and views will grow

Stones melt and Bulls quiet
Vice would seek the virtuous path
Thorns bloom and the fibers smell!

None ever born earth as evil
Grow more Love; that never kill
God is true Love; know that well

Happy and sorrow; The Love’s yield
Heartening pour; that’s the feel
Love is the wise and the winning deal.

***


Message :
Love is the cause for everything either good or bad.

***

Saturday, July 25, 2009

திருக்குறள்: 51


அதிகாரம்

:

6 வாழ்க்கைத் துணை நலம் திருக்குறள்

:

51


மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


பொழிப்புரை (Meaning) :
இல்லறத்திற்கு தக்க மாட்சிமைகள் உடையவள் ஆகி, தன்னை மணந்து கொண்டவனது பொருள் வளத்திற்குத் தக்கவளாய் வாழ்க்கை நடத்துபவளே இல் வாழ்க்கைக்குச் சிறந்த துணையாவாள்.


விரிவுரை (Explanation) :
இல்லறத்திற்குத் தக்க ஒழுக்கத்துடன், நற் குணங்களுடன், பெருமையுடன, தன்னை மணந்து கொண்டவரின் பொருள் வளத்திற்குத் தக்கவாறு, இல் வாழ்வை நடத்துபவளே, அவளின் கணவனின் வாழ்க்கைக்குத் துணை ஆவாள்.

குடியின் மேன்மை அறியாமலோ, ஒழுக்கங் கெட்டோ அன்றில் கணவனின் பொருள் நிலையை மீறிச் செயல்படுபவளோ கணவனிற்குத் துணையாக இருக்க முடியாது என்பது தெளிவு. இல்லத்தவள் மனை மாட்சிக்குக் கணவனிற்குத் துணை நிற்க வேண்டுமே தவிர ஊறு செய்வது அவர்களது இல்லற வாழ்விற்குக் கேடாகும். வருவாய்க்கு மீறிச் செலவு செய்பவர் நிச்சயம் துன்பமடைவர் என்பது சொல்லாப் பொருள்.

பெண்ணானவள் தான் செல்வச் சீமான் வீட்டில் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அன்றில் ஏழை வீட்டில் பிறந்தவளாக இருப்பினும் புகுந்த வீட்டின் பெருமைக்கும் வளத்திற்கும் தக்கபடி தன்னை மாற்றிக்கொண்டு வாழக் கடமைப்பட்டவள். கணவனின் வளமோ அன்றில் புகுந்த வீட்டின் வளமோ தனக்கு உகந்ததல்ல என்று எண்ணுபவள் அத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம். மாறாக பிறந்த வீட்டின் பெருமை பேசி, கணவனின் பொருள் வளத்தை மீறியோ, குறைத்தோ செயல் படும் பெண் கணவனிற்கு உகந்த துணை அல்ல. அந்த இல்லறம் இனிமையாக விளங்காது.

இல்லம் எனப்படுவது வெறும் கட்டிடத்தை அல்ல, அங்குள்ள தலைவனையும், இல்லத்தரசியையும், அவர் தம் மக்களையும், இதுகாறும் அவர்களின் குடும்பம் பெற்ற நற்பெயரையும் குறிக்கும் சொல். எனவே இதில் எதற்கும் ஊறு விளைவிக்காது, கண்ணியத்துடன், பெருமையைக் குன்றச் செய்யாது எல்லா நல் அறங்களையும் ஒழுகி, கணவனின் வருவாய்க்குள் குடும்பம் நடத்துபவளே இல்லத் தலைவனிற்குத் துணையாக இருக்க முடியும். அவ்வாறு இருப்பதும் அவளுக்குத்தானே பெருமை.


குறிப்புரை (Message) :
கணவனின் வருமானத்திற்குள், மாண்புடன் இல்லறத்தை நடத்தத் தெரிந்தவளே, அவனிற்குப் பொருத்தமான துணையாவாள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மாண்பு - மாட்சிமை, ஒழுக்கமுடைமை


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 448
அகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
.(1). கடலிடம்
.(2). சீவரும்

திருமந்திரம்: 449
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே
.(1). மாபோதகமே

திருமந்திரம்: 450
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
இணக்கமறிந்து இணங்கு. 19
அறனை மறவேள். 30
குணமது கைவிடேல். 36
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
நன்மை கடைப்பிடி. 65
நாடொப்பன செய். 66
பொருள்தனைப் போற்றி வாழ். 85

ஔவையார். கொன்றைவேந்தன்:
ஒருவனைப் பற்றி யோரகத் திரு. 10
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 13
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். 81


ஔவையார். நல்வழி : 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் இழந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

ஔவையார். நல்வழி : 34
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாரும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன் வாயிற் சொல்.

***

Thursday, July 16, 2009

திருக்குறள்: 42

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

42


துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்,
இல்வாழ்வான் என்பான் துணை.


பொழிப்புரை (Meaning) :
துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்த மூதாதையோருக்கும் இல்லற வாழ்வை ஒழுகுபவரே துணை ஆகும்.


விரிவுரை (Explanation) :
இல்லறம் மற்றும் பொருள் இன்பங்களைத் துறந்தவருக்கும், உண்பதற்கு வழியற்ற வறியவர்களுக்கும், இறந்த மூதாதையருக்கும் அதாவது முன்னோர் மற்றும் இறந்துபட்ட உறவினருக்கும் இல் வாழ்க்கை நடத்துபவனே துணை ஆவான்.

பற்றுக்களைத் துறந்த துறிவியருக்கும் வாழ்வாதாரத் தேவைகள் உண்டு. அதைப் போலவே திக்கற்ற வறியவருக்கும் இல் வாழ்க்கை நடத்துபவனே பரிவையும், ஆதாரத்தையும், ஆகாரத்தையும் நல்குபவன். மேலும் இறந்தாருக்கு நீர்க்கடன் செய்பவனும் அவனே.

துறவிகளுக்கும், வறியவருக்கும் கேடு ஏதும் விளைவிக்காது மாறாக அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புத் தந்து துணை தருவதும் இல் வாழ்க்கை ஒழுகுபவனே.

அதாவது துறவிகளும், வறியவர்களும் இல் வாழ்வானையே சார்ந்திருக்க இயலும் என்பதே இயற்கையான சார்பு நிலை என்பது தெளிவு.

மேலும் இவ்வாறாக ஏனையோரை ஆதரித்து தமது இல் அறத்தை ஒழுக வேண்டியது இல் வாழ்க்கை வாழ்பவனின் கடமை என்பது வள்ளுவர் கூறும் மறை பொருள்.


குறிப்புரை (Message) :
துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்தாருக்கும் இல்லற வாழ்வினனே துணை ஆக இருக்க வேண்டியவன்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
துவ்வாதார் - இல்லாதவர், தரித்திரர்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 297
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

திருமந்திரம்: 312
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

***

Wednesday, July 15, 2009

திருக்குறள்: 41


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

41


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொழிப்புரை (Meaning) :
இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்பவன் இயல்புடைய மூவர்க்கும் நல் வழியில் நிலையான துணையாவான்.

விரிவுரை (Explanation) :
இல்லறத்தில் வாழ்பவன் என்பான் இயல்புடைய மற்றைய மூவர்க்கும் நல் அறத்தின் கண் நிற்கின்ற துணையாவான். இயல்புடைய என்பதற்கு இயற்கையிலேயே தொடர்புடைய மற்றைய மூவர் என்பதாகும்.

இல்லற ஒழுக்க நெறியினின்று ஏனைய மூவர் என்றால் மற்றைய வாழ்வு நெறி முறை உடைய மூவர் எனப் பொருள்பட்டு இல்லறத்திற்கு முந்தைய நிலையான பிரம்மச்சரியத்திற்கும், பின்னர் நிலைகளான வானப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் எனும் நெறிகளை உடையவர்கள் என்பவர்களைக் குறிப்பதாகும். அதாவது இல்லறத்தானே தன் அறத்தால் மற்றைய நெறி ஒழுகுபவருக்கும் துணை ஆனவன் என்கின்றார். மற்றைய நெறிகளில் உள்ளோருக்கு அத்தகைய மற்றோருக்குத் துணையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகின்றது.

இல்லறத்திலேயே இயல்புடைய அதாவது இயற்கையில் தொடர்புடைய ஏனைய மூவர் என்றால் பெற்றோரும், துணைவியும், தாம் பெற்ற மக்கட் செல்வங்களும் ஆகும். இவர்களுக்கு இல்லறத்தில் ஈடுபட்டவனே துணை என்றாகின்றான்.

துணை என்பது ஆதரவும், பாதுகாப்பும் கொடுப்பவர் என்பதாம்.

எனவே இல்லறத்தானே ஏனைப் பிரிவோருக்கும், தன்னை நம்பி உள்ளோருக்கும் நல் வழியில் நின்று துணையாகின்றான் என்பதே சரியான பொருள்.


குறிப்புரை (Message) :
இல்லறத்தை மேற் கொண்டவரே மற்றையோர் அனைவருக்கும் நல்லறத்தின் கண் துணை ஆவார்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
இல் - வீடு
இல்லறம் - மனை அறம், குடும்ப வாழ்க்கை
நல் ஆற்று - நன் நெறி


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 294
துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

திருமந்திரம்: 299
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

ஔவையார். மூதுரை: 30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்.

***


Saturday, July 11, 2009

திருக்குறள்: 36

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

36


அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


பொழிப்புரை (Meaning) :
பிற்காலத்தே அறிந்து ஒழுகுவோம் எனாது இன்றே அறம் செய்து ஒழுகுதல் வேண்டும்; ஏனெனில் அந்த அறமே இறக்கும் காலத்தில் இறவாத் துணையாகும்.


விரிவுரை (Explanation) :
பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கடத்திவிடாது அறச் செயல்களை இப்போதே செய்தல் வேண்டும். அவை ஒருவர் இறந்த பின்னரும் இறாவாத் துணையாய் நிலைத்து நிற்கும். இறப்பு என்பது எப்போதும் நிகழலாம். எனவே நாளை, அல்லது அப்புறம் என்று நல் அறம் செய்தலை ஒத்தி வைத்தல் கூடாது. ஒருவருக்கு இறந்த பின்னரும் துணை வருவது அவர் ஆற்றிய நல் அறங்களே. எனவே அறச் செயல்களைச் செய்ய தாமதிக்காதீர் என்கிறார் வள்ளுவர்.

அறவினைகள், புண்ணியங்கள் ஒருவர் இறந்தாலும் அழிவதில்லை. அவை மறுமைக்கும் நன்மை பயக்கும் என்பது ஒரு புறமிருக்க, ஒருவர் இறந்த பின்னும் அழியாத துணையாய் வரத் தக்கது அவரது நல் அறங்களே என்பது தெளிவு.

மேலும் இவ்வையகத்தே ஒருவரின் அத்தகைய அற வினைச் செயல்கள், அவர் இறந்த பின்னரும் அழியாது நின்று நீண்ட புகழைத் தரும் எனவும் கொள்ளலாம்.

வயது முதிர்ந்த காலத்தில் அறம் செய்து கொள்ளலாம் என இளமைக் காலத்தில் நல் அறத்தை ஒழுகாது, கண்டபடி வாழ்ந்து பலர் வாழ்வைப் பாழ் செய்து கொள்ளுவர். அவர்களுக்கு இறப்பு என்பது எப்போது வரும் என்பது தெரியாதலால், நல் அறத்தை ஒழுகும் வாய்ப்பினை இழந்தவர்களாகி விடுவார்கள். எனவேதான் வள்ளுவர் நல் அறத்தைத் தள்ளி வையாது, இப்போதே மேற் கொள்ளும்படி கூறுகின்றார். அதற்கு முக்கியக் காரணம் இறந்த பின்னரும் அழியாது ஒருவருடன் கூட வரக்கூடியது அவர் தம் நல் அறம் மட்டுமே என்பதாலே.


குறிப்புரை (Message) :
இப்பொழுதே நல் அறத்தை ஒழுகுதல் நன்று; அவையே இறப்பிற்குப் பின்னும் மறையாது கூட வரும் துணையாகும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பொன்றுதல் - இறத்தல், உயிர் போகுதல்
பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த


ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை: 29
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளொடு போம்.

ஔவையார். நல்வழி: 4
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லாள்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.

பட்டினத்தார்: பொது: 18
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ வித்தகமாய்க்
காதிவிளை யாடி இரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!


***