Tuesday, August 4, 2009

திருக்குறள்: 61



அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 61
Chapter : 7

Children

Thirukkural

: 61

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட் பேறு அல்ல பிற.

பொழிப்புரை :
இல்லறத்தோர் பெறும் பேறுகளில் அறிவு அறிந்த மக்கட் பேற்றைப் போன்றது அல்லாத வேறு ஏதும் யாம் அறிந்தது இல்லை,

Among the blessings family men can get, we know not any greater one than that of the learned and wise children.

விரிவுரை :
அறிய வேண்டியவற்றை அறியும் அறிவுள்ள அல்லது அறிந்த மக்களைப் பெறுவதைப் போன்று உலகில் இல்லறத்தோர் பெறக் கூடிய சிறந்த பேறென்று வேறெதையும் யாம் அறியவில்லை.

அறிவு அறிந்த மக்கள் என்றால் கல்வி கேள்விகளில் சிறந்த வாரிசுகள் என்பது பொருள்.

பெற்றோருக்குத் தாம் பெற்ற மக்கள் சிறந்த கல்வி அறிவாளர்களாகத் திகழ்ந்தால் அதைக் காட்டிலும் சிறந்த பேறு வேறு ஏது இருக்க முடியும்? மக்கட் செல்வத்தைப் பெறுவதே பெறும் பேறு அதிலும் அறிவார்ந்தவை என்றால் மிகப் பெறும் பேறுதானே.

இல்லறத்தானின் கடமைகளில் மக்கட் செல்வம் பெறுதல் முக்கியமானது. அவரையும் அறிவில் சிறந்தோராய் ஆக்குதல் பெற்றோரின் அடுத்த கடமை. தாம் பெற்ற செல்வங்களை அறிவிற் சிறந்தோராய், நன் மக்களாய், சான்றோராய் இவ் உலகில் ஆக்க வேண்டிய பொறுப்புப் பெற்றோருக்கு உண்டு. அம்முயற்சிகளைச் செய்து தர வேண்டியது பெற்றோராயினும், அறிவிற் சிறந்து விளங்க வேண்டியது மக்களின் பொறுப்பாகின்றது. எனவே அது பெற்றோரைப் பொறுத்தவரையில் அடுத்துப் பெறும் பேறாகின்றது.

எனவே அறிவார்ந்த மக்களைத் தமதாகக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற பெற்றோருக்கு அவர் பெற்ற பேறுகளுள் அதைக் காட்டிலும் சிறப்பானது வேறு ஏதும் இருக்க முடியாது.

அதாவது நாம் முன்னுரையில் சொன்னது போல் மக்கட் செல்வத்தை பெறுவதே பேறு. அதிலும் அறிய வேண்டியவற்றை அறியும் மக்களைப் பெறுதல் பெரும் பேறு. ஏனென்றால் மூளை வளர்ச்சி அடையாத மக்களைப் பெறுவதால் துன்பமே அன்றி அதானால் பயன் ஏது?

குறிப்புரை :
அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் காட்டிலும் சிறந்த பேறு இல்லறத்தானுக்கு வேறு ஏதும் இல்லை.

Wise children are the greatest blessings family men can get.

அருஞ்சொற் பொருள் :
மக்கள் - குழந்தைச் செல்வங்கள், வாரிசுகள்.

ஒப்புரை :

திருமந்திரம்: 119
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.

திருமந்திரம்: 136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

ஔவையார். நல்வழி: 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும் பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும் பானை பொங்குமோ மேல்.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்:
ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு நீதரும் மகிழ்ச்சி.

***

திருக்குறள். அதிகாரம்: 7. மக்கட் பேறு.



அதிகாரம்

: 7

மக்கட் பேறு

முகவுரை

Chapter : 7

Children

Preface

இல்லறத்தின் பால், வாழ்க்கைத் துணையைப் பெற்று, இல்லறத்தின் அடுத்த கட்டமாகிய மக்கட்பேற்றைப் பெறுதலை இங்கே விளக்குகின்றார். பெறுவது பேறு. இல்லறப் பேறுகளுல் தலை சிறந்தது மக்கட்பேறு.

இல்லற வாழ்வின் நோக்கங்களில் தலையானது மனித குலத் தொடர்சிக்கான மக்களைப் பெறுதல். அவை அவரவர் தம் குலம் தழைக்கப் பெறும் பெரும் பேறு. அதிலும் அம்மக்கள் நன் மக்களாய், நல் குடிமக்களாய், எல்லோரும் போற்றும் சான்றோராய்ச் சிறப்புற்றால் அதை விட வேறு பேறு ஏதும் இருக்க முடியாது.

பெற்றவர்கள் வாழ்வின் உச்ச எச்சமாய் இவ் வுலகில் விட்டுச் செல்வது பெற்ற செல்வங்களையே. அதனால்தான் இல்லறம் சிறந்தது என்றாகின்றது. புகழ் காலங்களை விஞ்சி நிற்கும் எச்சமாகினும், உயிர்கள் தங்கள் வழித் தோன்றல்களை உருவாக்குவதே இயற்கையின் இயற்கை விதி மற்றும் அவசியத் தேவை. எனவே பெற்றவர்களின் மக்கட்பேறானது துறவிகள் பெறும் ஞானப்பேற்றைப் போன்றே, ஏன் அதைக்காட்டிலும் சிறப்பானது.

பெற்றோர் என்பதற்குத் தமிழில் வாங்கிக் கொண்டவர்கள் என்பது பொருள். யாரை? அதாவது அவர்களது குழந்தையை, மக்கட் செல்வத்தை முயன்று பெற்றவர்கள். அவர்களைப் படைத்தவர்கள் என்றோ, உருவாக்கியவர்கள் என்றோ சொல்லவில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இயற்கையிடமிருந்தோ, தெய்வத்திடமிருந்தோ பரிசிலாகப் பெற்றவர்கள் பெற்றோர். இவ்வாறான இவ்வார்த்தையை மிகவும் சிந்தித்தே தமிழில் உருவாக்கி இருக்கின்றார்கள். வேறு மொழிகளில் இவ்விதமாக பெற்றோரைக் குறிக்கும் சொல் காரணப் பெயராகவோ அன்றில் அர்த்தம் கொடுக்கும் சொல்லாகவே காண்பது அரிது.

பெற்றோர்கள் பெற்றார்கள் மழலைச் செல்வத்தை. அவர்களை ஆக்கியவர்கள் என்றால் சில சமயங்களில் ஆணவத்தில் அழிப்பதற்கும் உரிமை கோருவார்கள். எனவேதான் அவர்களை மக்கட் செல்வத்தைப் பெற்றவர்கள் என்றாக்கினார்கள்.

பெற்றார்கள் என்றால் திரும்பிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. எவ்வாறாக? தாங்கள் பெற்ற செல்வங்களை வளர்த்து, ஆளாக்கி, பொறுப்புள்ள குடிமக்களாய், நன் மக்களாய், அறிவுடையோராய் இந்தச் சமூகத்திற்கு வழங்கக் கடன் பட்டவர்கள், கடமைப் பட்டவர்கள், பெற்றவர்கள்.

அன்பையும், அறிவையும், வாழ்வையும் தாம் பெற்றவர்களுக்கு எந்த எதிர் பார்ப்பும் இன்றிச் செய்யும் பெற்றோர்கள் தெய்வங்களே. அவர்களை அந்த நிலைக்கு உயர்த்துவது அவர் பெறும் மக்கட் செல்வங்களே.

எனவேதான் வள்ளுவப் பெருந்தகை மக்கட்பேற்றைப் போன்றதொரு சிறந்த பேறில்லை என்கிறார்.

ஒப்புரை (Reference)
திருமந்திரம்: 132
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

கண்ணதாசன்:
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம் - அது
பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம், மௌனம்;
ரத்தத்துடன் கலந்தந்த பாசம், பாசம் - அது
நாள் கடந்து பிள்ளையுடன் பேசும், பேசும்! ...

அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணை நலம் - முடிவுரை



அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

முடிவுரை

Chapter : 6

Wife, Life's Partner

Summary

அத்தியாயத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

51 கணவனின் வருமானத்திற்குள், மாண்புடன் இல்லறத்தை நடத்தத் தெரிந்தவளே, அவனிற்குப் பொருத்தமான துணையாவாள்.
52 ஒழுக்கமற்ற மனையாள் உள்ளவனிற்கு இல்லற வாழ்வில் பெருமை என்பதே கிடையது.
53 இல்லத்தவளின் மாண்பே வாழ்வில் மிக முக்கியமானது. இல்லாவிடில் எதுவுமே தேறாது.
54 இல் வாழ்வில் இல்லத்தாள் கற்போடு இருத்தல் பெண்மைக்கே பெருமை அன்றில் அஃது அனைவருக்கும் சிறுமை, கேடு.
55 கொண்ட கணவனையே தெய்வம் என்று தொழுது ஒழுகும் இல்லத்தரசியின் சொல் பலிக்கும்.
56 தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், குடும்ப நற்பெயரையும் காப்பதுடன் சோர்வற்று இனிமையுடன் இல்லறத்தை நடத்தவேண்டியது இல்லாளின் கடமையாகும்.
57 மகளிர் தம்மைக் தாமே காத்துக் கொள்ள மனத் திடத்துடன் நிறைந்திருப்பதே கற்பிற்குச் சிறந்த காவல், சிறையில் அடைத்துக் கொள்ளும் காப்பு பயனற்றது.
58 பெண் தாய்மைப் பேற்றிற்காகக் கருவுற்றாலேயே, தனக்குள் உயிர்கள் தரிக்கும் உலகம் பெற்று, இல்லறத்தில் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர்.
59 புகழைப் புரிந்து திகழ்கின்ற இல்லமே, இல்லாளே இல்லறத்தில் பெருமிதம் தரத் தக்கது.
60 இனிது நடத்தும் இல்லறமே சுபம். அதை மேலும் நல் வழிச் செலுத்தத் தேவை மக்கட் பேறு.

குறிப்புரை (Message)

இல்லறத்தில் ஈடுபட்டு, கணவனின் பொருள் வளத்திற்குள் மாண்புடன் இல்லறம் நடத்தி, ஒழுக்கத்துடனும், குலத்தின் பெருமை நிலைநாட்டி, நற் பண்புகளுடனும் கற்புடனும் திகழ்ந்து, கொண்டவனையே தெய்வம் எனத் தொழுது போற்றிப் பேணி, தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், குடும்ப நற்பெயரையும் காப்பாற்றி, சோர்விலாது கடமை ஆற்றி, இனிமையுடன் இல்லறம் நடத்தி, கற்பெனும் மனத் திடத்துடன் தன்னைக் காத்துக் கொண்டு, சிறைக்கைதி ஆகாதே இயல்புடன் அனைவருடனும் பழகி, இனிய இல்லறம் பேணி அதன் பயனாய் கருவுற்று, குடும்பம் தழைக்க வழிகோலி, பெருஞ் சிறப்புற்று, புதிய உயிர் கொள்ளும் உலகம் சமைத்து, இல்லத்திற்குப் புகழ் புரிந்து, கணவனிற்குப் பெருமிதம் கிட்டும்படி செய்து, இனிது நடத்தும் இல்லறத்தால் இல் வாழ்வைச் சுபம் நிறைந்த வாழ்வாக்கி, நல்வழிச் செலுத்தும் மக்கட் பேறைப் பெறுதலே நல் வாழ்க்கைத் துணையாகும்.