Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, July 29, 2009

திருக்குறள்: 55


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 55
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 55


தெய்வம் தொழா அள், கொழுநன் - தொழுது எழுவாள்
’பெய்’ என, பெய்யும் மழை.


பொழிப்புரை (Meaning) :
தெய்வத்தைத் தொழாது, கொண்ட கணவனையே தெய்வமெனத் தொழுது துயில் எழுவாள், பெய்யென்றுச் சொன்னால் மழை பெய்யும்.


விரிவுரை (Explanation) :
பிற தெய்வத்தைத் தொழாது, தான் கொண்ட கணவனையே தொழுது துயில் எழுபவள், பெய் என்றால் மழை பெய்யும்.

தூய உள்ளத்தோடு நம்பிக்கைகளின் உச்சத்தில் ஒருவர் சொல்லும் அறம் பலிக்கும். பத்தினியின் சொல் பலிக்கும் என்பதும் நம்பிக்கை. முனிவர்கள் வார்த்தைகள் எப்படிப் பலிக்குமோ, சாபங்கள் எப்படிப் பலிக்குமோ அதைப் போன்றே கணவனையே தெய்வமாகத் தொழும் மாதரசிகளின் வார்த்தைகளும் பலிக்கும். அவை அவர் மழையை விரும்பி வருமாறு பணித்தாலும் நிகழும் என்று நன்மை பயக்கும் அறத்தைச் சொல்கின்றார் வள்ளுவர். உண்மையில் பத்தினிப் பெண்டிர் விடும் சாபமும் பலிக்கும். உதாரணம் கண்ணகி மதுரையை எறித்த காதை பிறகு நிகழ்ந்ததே. ஐம்பெரும் காப்பியத்தில் தலையானதாய், சிலப்பதிகாரமாகத் திகழ்கிறது தமிழில். இது நடந்த கதையென்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

இக்குறள் பெண்ணடிமைக்குச் சொல்லப்பட்டதல்ல மாறாக கற்பின் மேன்மைக்கும், அதன் திறத்திற்கும் நம்பிக்கை தரும் சொல்லே. எனவேதான் கணவன் துயில்கின்ற போழ்து, தான் முன் துயில் நீங்கித் தொழுது எழுவாள் என்றார். இதனால் கணவன் விழித்திருக்கும்போது தொழுதால் அவனிடத்தில் எதிர் பார்ப்புக்களை கொண்டிருக்கலாம் என்று பொருள் படும். எனவே இதயத்துள் கணவனைக் கண்கண்ட தெய்வமெனக் கொண்டு, காலை அவன் பாதங்களைத் தொழுது, அவனைத் தொடருதல் எவ்விதத்திலும் தவறான செய்கையாக இருக்க முடியாது. நாம் முன்னமேயே பாதத்தைத் தொழுதல் என்பதற்கு அவர் வழி நிற்றல் என்ற பொருளில் கடவுள் வாழ்த்தில் விளக்கியிருப்பதை ஒப்பு நோக்கவும்.

இசையால் மழையை வரவழைக்க முடியும்போது, இசைந்தொழுகி வாழும் பத்தினிச் சொல்லுக்கு ஏன் மழை வாராது? நம்பிக்கையில் எதுவும் சாத்தியமே.

தெய்வம் தொழாதே கொண்டவனைத் தொழுது எழுபவள் என்பாள் கணவன் ’பெய் எனப் பெய்யும் மழை’ போல்வாள் என்று கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவ்விதம் சொல்வதால் வள்ளுவர் பெண்ணிற்கு அதில் சொல்லவரும் கருத்து யாதும் இருப்பதாய் தெரியவில்லை.


குறிப்புரை (Message) :
கொண்ட கணவனையே தெய்வம் என்று தொழுது ஒழுகும் இல்லத்தரசியின் சொல் பலிக்கும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தொழா அள் - தொழாதவள்
கொழுநன் - கொண்ட கணவன், (கை) பற்றியோன், சார்ந்தோன்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 431
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை
.(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
.(1).நீங்கா தொருவனை
.(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்

திருமந்திரம்: 432
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
.(1).அடைந்தனன்

திருமந்திரம்: 433
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த .(1).பரிசறி யாதே
.(1).பரிசறி யாரே

திருமந்திரம்: 434
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே

ஔவையார். ஆத்திச்சூடி:
காப்பது விரதம். 33
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
தெய்வம் இகழேல். 60.
தொன்மை மறவேல். 63.
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
மேன்மக்கள் சொல்கேள். 94.

***

Tuesday, June 16, 2009

திருக்குறள்: 15


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 15



கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.


பொழிப்புரை (Meaning) :
கெடுப்பதுவும், கெட்டவர்களுக்குச் சார்பாய் பிறகு அங்கே நிலை எடுப்பதுவும் எல்லாம் மழையே.


விரிவுரை (Explanation) :

பெய்யாது வளத்தைக் கெடுப்பதுவும், அதால் வருந்தியோருக்குப் பிறகு பொழிந்து அங்கே வளத்தை எடுத்துக் கொடுப்பதுவும் எல்லாம் அந்த மழையே.

பொழியாது அல்லது அதிகம் பொழிந்து கெடுதலைக் கொடுப்பதும், பிறகு வளத்தை எடுத்துக் கொடுப்பதும் மழையே.

பெய்யும் மழையின் அளவு அதிகமாயினும் கெடுதலே, ஆயினும் அதால் வருந்துவோருக்குப் பிறகு மருந்தாகி வாழ்வு தருவதும் மழையே.

அதாவது இந்த உலகத்தின் வறுமைக்கும், வளமைக்கும் காரணம் மழையே என்பது பொருள்.

குடி கெடுப்பதும் பிறகு வாழவைப்பதும் மழையே. துன்பத்தையும், துன்புற்றோருகுப் பிறகு இன்பத்தையும் வழங்கும் சிறப்பு மழைக்கே உரியது.

மழை இறைவனின் மொழிகளில் ஒன்று என்பது சிந்தித்தால் விளங்கும்.


குறிப்புரை (Message) :

ஆக்கவும், அழிக்கவும் வல்லது மழை.


அருஞ்சொற் பொருள் (
Synonyms) :
சார்வாய் - சார்பாய், சார்பு நிலையாய்


ஒப்புரை (References):

விண், வான், முகில் எல்லாம் அந்த இறைவனே.

திருமந்திரம்:11
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.


திருமந்திரம்:31
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

Saturday, June 13, 2009

திருக்குறள்: 12


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12



துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.


விரிவுரை (Explanation):

உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.

மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.

ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.


குறிப்புரை (Message):

உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.


அருஞ்சொற் பொருள்:

துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.


ஒப்புரை (References) :


திருமந்திரம்:10
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.


திருமந்திரம்:85
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.