Showing posts with label poRai. Show all posts
Showing posts with label poRai. Show all posts

Friday, January 15, 2010

திருக்குறள்:189 (புறங்கூறுபவரையும் பொறுக்கிறதே பூமி...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 189

புறங்கூறுபவரையும் பொறுக்கிறதே பூமி...

In English

அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் - புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

பொழிப்புரை :
[தம்] அறம் கருதிப் பொறுக்கும் போலும் வையம்; புறம் பார்த்துப் பழிச்சொல்லை உரைப்பவனின் பாரத்தை.

விரிவுரை :
ஒருவரின் புறம் பார்த்துப் பழிச்சொல்லை உரைப்பவனின் பாரத்தை, தம் அறம் கருதிப் பொறுக்கிறது போலும் வையம்.

அறம் காப்பது தன் கடனே என்றுதான் பூமி புறம் சொல்லுபவரையும் தாங்கி நிற்கிறது போலும். வேறென்ன? அன்றில் கண்டிப்பாக அவரைத் தண்டித்திருக்க மாட்டாதோ? என்பது இங்கே ஆதங்கம் மற்றும் கூறாப் பொருள்.

தன்னை அகழ்வாரைத் தாங்கும் நிலம், பிறரைப் பழிபேசும் இழிவானவரையும் தனது அறம் தவறாக் கொள்கையினால்தான் தாங்கி நிற்கிறது. இல்லை என்றால் புறங்கூறும் வஞ்சக மனத்தினர் இந்தப் பூமியில் வாழ்ந்து விடத்தான் முடியுமா?

ஆதலின் புறங்கூறும் பழக்கம் உடையவர்களே, அப்பழக்கத்தை விடுத்து, பூமிக்குத் தாய்க்குத் தேவையற்ற பாரமாக இல்லாது நல்லறத்தின் பக்கம் சார்ந்து நில்லுங்கள் என்பது உட்பொருள்.

குறிப்புரை :
பழிச்சொல்லைப் புறங்கூறுபவனையும் பொறுத்துச் சுமக்கின்றதே பூமி, தன் அறத்தைக் காப்பதற்காகவோ?

அருஞ்சொற் பொருள் :
புன்சொல் - பழிச்சொல், அவதூறு, பொல்லாங்கு
பொறை - பொறுமை, சகிப்பு, அமைதி, அடக்கம், வலிமை, கனம், பாரம், பூமி, மலை, குன்று, கருப்பம்

ஒப்புரை :

திருமந்திரம்: 1532
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

திருமந்திரம்: 1541
வழியரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவழி வார்நெறி நாடநில் லாரே.

திருமந்திரம்: 2523
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே. 12

திருமந்திரம்: 2524
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13

மாணிக்க வாசகர். திருவாசகம்.
9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்:
(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)

பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196

ஔவையார். ஆத்திசூடி:
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

பட்டினத்தார். பொது:
அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37

செல்வரைப் பின்சென் றுபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டி பரிதவி யாமல் பரமா னந்தத்தின்
எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்றுஎன்றிருப் பேன் ஆலநீழல் அரும் பொருளே! 38

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 189

The earth sustains yet the slanderer...




In Tamil

aRan nOkki ARRumkol vaiyam - puRan nOkkip
punsol uraippAn poRai.

Meaning :
Hope the earth is sustaining the load of slanderer who disgraces one in behind only to save its own good virtue.

Explanation :

Hope this earth is bearing on the load of the slanderer who disgraces one in behind, just to keep up its own good virtue.

The earth is sustaining the slanderer only because the bearing seems to be its duty. What else? Otherwise, won't it have certainly punished the slanderer? is the implied feeling and meaning here.

The same earth which bears those who dig on her, through its principles of good virtues also bears and sustains those mean minded slanderers. Otherwise, is it possible for the slanderers to live and continue on this earth?

Therefore those who have the habits of slandering, by leaving that habit turn as no unnecessary load to the mother earth and stand on the side of good virtues, is the implied meaning here.


Message :
The earth is bearing on the slanderer's disgrace and load, is it to save its own good virtue?

***

Monday, November 30, 2009

திருக்குறள்:153 (வலிமையுள்ளும் வலிமை பொறுமை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 153

வலிமையுள்ளும் வலிமை பொறுமை...

In English

இன்மையுள் இன்மை விருந்து ஒரால், வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

பொழிப்புரை :
வறுமையுள்ளும் வறுமை விருந்தினரை வரவேற்க மறுத்தல்; வலிமையுள்ளும் வலிமை அறிவிலாரைப் பொறுத்தல்.

விரிவுரை :
வறுமையுள்ளும் வறுமை என்பது விருந்தினரைப் பேண இயலாமை. அதைப் போன்று வலிமையுள்ளும் வலிமை என்பது அறிவில்லாதவரின் செயல்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை.

வறுமை என்னும் தமக்கு இல்லாமை கூட வருந்தத்தக்கதல்ல. அதினிலும் கொடுமையான வறுமையானது அவ்வமயம் வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்துப் பேண இயலாமையே. இதன் மூலம் ஒப்புமையின் முக்கியத்துவத்தைக் காட்டிலும் விருந்தினரை உபசரிக்க இயலாமையின் அவலத்தையே பெரிய வறுமை என்றாயிற்று.

அதே போலும் பொறுமை என்பதே பொறுத்துக் கொள்ளும் வலிமைதான் என்பது தெளிவு. அதிலும் அறிவிலாரின் பிதற்றலை, அர்த்தமற்ற பேச்சை, முட்டாள்தனமான செயலை ஏளனமின்றி, விருப்பு, வெறுப்பின்றி, வேதனையின்றி, கேவலமாகக் கருதாது கருணையுடன் பொறுத்தல் என்பது மிகப் பெரிய பொறுமை. எனவே அதுவே வலிமையுள்ளும் மிக்க வலிமையாகும் என்கின்றார்.

வறுமையையும், பொறுமையையும், வலிமையையும் ஒரே குறளில் ஒப்பு உவமேயத்திற்காக மட்டும் வள்ளுவர் இங்கே குறிப்பிடவில்லை. அறிவிலியான ஒரு விருந்தினர், நாம் வறுமையில் உள்ள போது வந்தால்... நம் வறுமையையும் பொருட்படுத்தாது அவரை உபசரித்து, நம் இன்மையைப் பொருட்படுத்தாது அவரை உபசரிப்பது போன்றே அவரது அறிவின்மையையும் பொருட்படுத்தாது பொறுமை காட்டுதல் அவசியம் என்பதே மறை பொருள். அத்தகைய பொறுமையும் விருந்தோம்பலும் வலிமையுள் எல்லாம் வலிமை மிக்கது என்பதும் தெளிவு.

விருந்தோம்பலைத் தவிர்க்க நேரும் கொடிய வறுமையை ஒழித்து, வரும் விருந்தினரை உபசரித்து, அவர் அறிவிலியேனும் அவரது செய்கைகளைப் பொறுத்துப் பேணுவதே வறுமைக் காலத்து வலிமையுள்ளும் சிறப்பான வலிமையாகும்.

அறிவிலிகளின் செயல்களைப் பொறுத்துக் கொள்ள, அவரை நாம் வறுமையில் உள்ளபோது நம்மிடம் வந்த விருந்தினராக எண்ணிக் கொண்டால், தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை தானாகவே வந்து விடும் என்பதும் மறை பொருள்.

வளரும் குழந்தைகளின் அறிவற்ற செயல்களைக் கண்டு சகித்துப் பொறுமையுடன் அவருக்கு விளக்கி விளங்க வைத்தலே அறிவுடையோரின் செயலாக இருத்தல் வேண்டும் அல்லவா? அதுவே பொறுமையுள் எல்லாம் தலை.

குறிப்புரை :
அறிவிலார் செயலைப் பொறுத்தல் வலிமையுள்ளும் வலிமையாகும்.

அருஞ்சொற் பொருள் :
இன்மை - வறுமை
ஒரால் - பின்வாங்குதல், பின்னடைதல், (receding, withdrawing)
வன்மை - வலிமை, கடுமை, செயலழுத்தம், முனைப்பு, மும்முரம், ஆவேசம், தீவிரம், சினம். உறுதி, திண்மை
மடவார் - பெண்கள், அறிவற்றவர்
பொறை - பொறுமை, சகிப்பு, வலிமை, அமைதி, அடக்கம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 541..
ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.

திருமந்திரம்: 1165.
தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

திருமந்திரம்: 1183.
உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

திருமந்திரம்: 1184.
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே.

திருமந்திரம்: 1186.
அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம்

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம்

பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன்
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித்
தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149

ஔவையார். ஆத்திசூடி:
38. கெடுப்ப தொழி.
46. சீர்மை மறவேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

ஔவையார். மூதுரை:
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

கண்ணதாசன். திரைப்பாடல்:
1. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
...
பணம்படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்...
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்...
...

2. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...
...
தென்னைய பெத்தா இளநீரு...
பிள்ளைய பெத்தா கண்ணீரு...
பெத்தவன் மனமே பித்தம்மா...
பிள்ளை மனமே கல்லம்மா...
...
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா...
சோதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லே பந்தமில்லே...
...
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்...
தேடிவரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடிவரும்... (யாரை)


***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 153

Mightiest strength is Patience...




In Tamil

inmaiyuL inmai virunthu orAl, vanmaiyuL
vanmai madavArp poRai.

Meaning :
The poverty amongst poverty is inability to treat the guest; The mightiest might is to bear with ignorant.

Explanation :
The poverty among poorness is receding to treat the guest. The might among the might is bearing the ignorant.

The poorness of having little or nothing is not that much regrettable. But the sever poverty is that the inability in such a situation to welcome and treat the guests. Through this not truly the comparison but the pathos of inability in treating the guest is considered as the gross of poverty.

Similarly the patience is nothing but the bearing capacity or the strength is very obvious. In that too, considering the ignorant blabbers, meaningless speeches and foolish works without ridicule, like or dislike and humiliation but with compassionately bearing is the greater patience. Therefore Valluvar says that as the mightiest among all the might.

Valluvar has mentioned about the poverty, patience and strength in the same Kural just not for comparison. If an ignorant guest visits us in our destitution... we should treat him ignoring our destitution. It is necessary that as we treat him ignoring our destitution, we should also ignore his ignorance and show our forbearance is the implied meaning here. Such patience and hospitality is the mightiest among all the might is very obvious.

By destroying the poverty of avoiding the hospitality, welcoming the guest, though they are ignorant bearing with their deeds and treating them is what the greatest might among all the might though in impoverishment.

To bear with the deeds of ignorant, if we think them that as if they have visited us during our poverty, we will get the required patience automatically is also the implied meaning here.

Bearing with the growing kids' ignorant activities but teach and explain them to enlighten should be the deed of the wise. Is it not? That is what the height of all patience.

Message :
Mightiest among the might is to bear with the ignorant acts.

***