Friday, July 3, 2009

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை - முடிவுரை


அத்தியாயத்தில் பெற்றவை:


21. பற்றற்ற ஒழுக்க நெறி நின்றவரே காலங்களை விஞ்சிய பெருமைக்கு உரியவர்.

22. பற்றற்ற வாழ்வின் மேன்மை அளவிடற்கரியது

23. தெளிந்த சிந்தனையில் மேற்கொண்ட துறவறமே பெருமைக்கு உரியது

24. ஐம்புலனை அடக்கும் துறவியரே வரம் தரும் வித்தாவர்

25. ஐம்புலனை அடக்கினால் இந்திர பதவியும் கிட்டும்

26. செயற்கரிய செயல்களைச் செய்வோர் பெரியோர், அவருக்குத் துறவறம் உதவும்.

27. ஐம்புலனை அடக்கியோருக்கு உலகமும் வசப்படும்

28. பற்றற்ற துறவியோரின் வாக்கு பொய்ப்பதில்லை

29. பற்றற்றவருக்கு சினம் கணப் பொழுதும் தங்காது

30. நல் ஒழுக்கமும், அனைத்து உயிரிடத்தும் அன்பும் சிறந்த துறவியோருக்கான தகுதிகள்.


குறிப்புரை (Message) :
பற்றற்று இரு, நல் ஒழுக்கத்தைப் பேண், புலன்களை அடக்கு, அரியன செய், உலகம் வசப்படும், அன்போடு இரு, மேன்மை அடைவாய்.

***

திருக்குறள்: 30


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 30



அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும்
செந் தண்மை பூண்டு ஒழுகலான்.


பொழிப்புரை (Meaning) :
அந்தணர் எனும் துறவியோர் ஒழுக்க நெறி பேணுவோர்; மற்றும் எல்லா உயிரடத்தும் செழுந் தண்மையை, செம்மையான குளிர்ந்த அன்பைப் (கருணையைப்) பூண்டு ஒழுகுவதால்.


விரிவுரை (Explanation) :

எந்த உயிர்க்கும் கருணை கொண்டு, நல் அன்பு கொண்டு, அருள் கொண்டு ஒழுகும் செழுமையான வழக்கத்தை பற்றற்ற ஒழுக்க நெறியோடு மேலும் பேணும் துறவியோரே அந்தணர் எனப்படுவர்.

ஆக பிறவியின் பால் ஒருவர் பெறுவதோ, அல்லது சாதியால் தங்களை சமூகத்தில் அடையாளப் படுத்திக் கொள்வதையோ, அல்லது பிறரின் மேல் வெறுப்பை உமிழுந்து தம்மை உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்பவரோ, அகத்தே தண்மையற்றவரோ அந்தணர் ஆகார்.

நல் அறங்களை ஒழுகும் துறவியரே, மேலும் எவ்வுயிரின் பாலும், ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர்வரைக்கும் பேதமில்லாதே இரக்கம் கொண்டு அதாவது அருளுடைமை கொண்டு, தன்னுயிரே போல் அன்பு செய்யும் குண நலம் கொண்டு, அகத்தே தண்மைத் தன்மை கொண்டு, அவர்தம் நெஞ்சில் ஈரம் கொண்டு, குளிர்ச்சியை, அமைதியை, அடக்கத்தைக் கொள்வதைத் தமது வாழ்வின் சீரிய நோன்பாக, செழுமையாக மேற்கொண்டு ஒழுகுபவரே அந்தணர் எனப்படுவர். மற்றவர் அல்லர்.


குறிப்புரை (Message) :

நல் ஒழுக்கமும், எல்லா உயிரிடத்து அன்பும் சிறந்த துறவியருக்கான, அந்தணருக்கான அடிப்படைத் தகுதிகள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
அந்தணன் - அகத்தே தண்மை கொண்டவன்


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 224
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

திருமந்திரம்: 228
சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

திருமந்திரம்: 1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

ஔவையார் - மூதுரை: 7
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


***

திருக்குறள்: 29


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 29



குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும், காத்தல் அரிது.



பொழிப்புரை (Meaning) :
குணம் என்னும் குன்றின் மேல் ஏறி நின்ற சான்றோருக்கு, கோபம் கணப் பொழுதே கோபம் வரக்கூடும், ஆனால் அதிலிருந்து வரும் தீமையிலிருந்து காத்தல் அரிது.


விரிவுரை (Explanation) :

குணம் என்னும் குன்றின் மேல் நல்ல பண்புகளால் ஏறி நிற்கும் பெரியோருக்கு கோபமே வாராது. அவர்களுக்கு ஒரு வேளை கோபம் ஏற்பட்டால் அது ஒரு கணப் பொழுதே வரக் கூடும். ஆனால் அந்த கணப் பொழுது வரும் சினத்தால் ஏற்படும் விளைவை, சினத்திற்குக் காரணம் ஆனவர்களால் தடுத்துக் காத்தல் இயலாது. முனிவர்களின் சினம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஆக, குணக் குன்றின் மேல் நிற்கும் சான்றோரைத் துறவிகளைப் பகைத்தல் கூடாது, பகைத்தால் அவரது சினத்திற்கு ஆளாகக் கூடும். அவ்வமயம் அச் சினத்திலிருந்து அவரைக் காப்பாற்ற யாராலும் இயலாது என்பது பொருள்.

மேலும் குணக் குன்றின் மேல் நிற்கும் பண்பாளர், கோபம் ஏற்படின் கணப் பொழுதும் அதைப் பேண மாட்டார் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே பண்பாளருக்குக் கோபம் என்பது தொடராமல், கணப்பொழுது கூட நிற்காமல் மறைந்துவிடும்.


குறிப்புரை (Message) :

சான்றோர்கள் கோபத்தைப் பேண மாட்டார். இருப்பினும் சான்றோர்களின் சினத்திற்கு ஆளாதல் கூடாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கணம் - நொடிப் பொழுது


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

திருமந்திரம்: 1627
இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.

திருமந்திரம்: 1630
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

திருமந்திரம்: 1631
சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

திருமந்திரம்: 1703
சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே.

திருமந்திரம்: 1976
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.

ஔவையார்: மூதுரை: 4
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

ஔவையார்: மூதுரை: 23
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பரும் போல்வாரே - விற் பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.


***