Sunday, June 21, 2009

திருக்குறள்: 20


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 20


நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.


பொழிப்புரை (Meaning) :
நீர் இன்றி அமையாது உலகு என்றால், யாவர்க்கும் மழையின்றி அமையாது ஒழுக்கம்.


விரிவுரை (Explanation) :

நீர் இன்றி அமையாது உலகம் ஆகி விட்டால் உலகம் கெட்டுவிடும். அது போலவே மழையின்றி அவ்வுலகத்தில் யாருக்கும் ஒழுக்கம் நிலைபெறாது கெட்டுவிடுவர். அதாவது மழையற்ற உலகத்தில் எத்தகையவரும் நல் ஒழுக்கத்தைப் பேணார். அதனின்று அறம். பொருள், இன்பம் ஆகிய வாழ்க்கை அறங்கள் ஒழுகப்படாது இவ் உலகம் சீர் கெடும் என்பது துணிபு.

மழை பொய்த்தால் உலகில் உயிர்களும் மக்களின் ஒழுக்கமும் குன்றிவிடும். எனவே இவ் உலக உயிர்களுக்கு உயிர்த்திருக்க மட்டுமல்ல, அவர்களின் முறையான வாழ்விற்கும் மழை அத்தியாவசியமானது என்கிறார் வள்ளுவர்.


குறிப்புரை (Message) :

நிலையான உலகிற்கும், முறையான வாழ்விற்கும் மழை மிக அவசியம்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

யார்யார்க்கும்: யாருக்கும், எவருக்கும், எத்திறத்தார்க்கும், எப்படிப்பட்டவர்க்கும்


ஒப்புரை (References) :


சிவவாக்கியம்:283
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே.


ஔவையார்:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

Saturday, June 20, 2009

திருக்குறள்: 19


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 19



தானம் தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம்
வானம் வழங்காது எனின்.


பொழிப்புரை (Meaning) :
தானமும் தவமும் ஆகிய இரண்டும் தங்காது, விரிந்த உலகத்தில் வானம் வழங்காது என்றால்.


விரிவுரை (Explanation) :

வானம் பொய்த்தே வழங்காது போய்விடின், விரிந்த உலகத்தின் பால் தானமும், தவமும் ஆகிய இரண்டு அறங்களும் தங்காது அற்றுப் போய்விடும்.

தானம் எனப்படும் அறம் பிறர் பொருட்டு கருணை கொண்டு செய்வது. தவம் எனும் அறம் தன் பொருட்டு செய்யப் படும் நோன்பு அதாவது எதையேனும் வேண்டிப் பெறுதல். அவை இரண்டும் மனிதனை, உலகத்தை உய்விக்கும் அறங்கள். ஆனால் அவை இரண்டும், உலகம் எவ்வளவுதான் விசாலமானதாக இருப்பினும், மழையின்றிப் போனால் வழக்கொழிந்து, ஒழுகாது போய்விடும்.

தானமு, தவமும் அடிப்படையில் மழையினாலேயே அமைகின்றன என்று அவற்றின் மூலக் காரணத்தைச் சொல்கிறார் வள்ளுவர்.

தானமும், தவமும் உலகின் நல் அறங்கள். அவை நடை பெற வேண்டுமாயின் பொய்க்காத மழை வேண்டும் என்பது கருத்து.


குறிப்புரை (Message) :

மழை இன்றிப் போனால் தானமும், தவமும் கெடும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

வியன் - விரிந்த, படர்ந்த, பரந்த, அகன்ற, வியத்தகு அளவிலான


ஒப்புரை (References) :


தானமும், தவமும் பற்றிய கருத்துக்கள்:

திருமந்திரம்: 250
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.


திருமந்திரம்: 251
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.


திருமந்திரம்: 252
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.


திருமந்திரம்:254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.


சிவவாக்கியம்:282
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ?

ஔவையார்:
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

Friday, June 19, 2009

திருக்குறள்: 18


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 18



சிறப்பொடு பூசனை செல்லாது-வானம்
வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு.


பொழிப்புரை (Meaning) :
சிறப்பு செய்யப்படும் பூசனை நடவாது, வானம் வறட்சியுற்றால், தேவர்களுக்கும் ஈங்கு.


விரிவுரை (Explanation) :

வானம் மழை பொழியாது வறட்சி ஏற்பட்டால், இவ் உலகத்தில் வானவர்களாகிய தேவர் பொருட்டு செய்யப்படும் சிறப்புக்களும், விழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.

தெய்வங்களுக்கும், வானவர்களுக்கும், இயற்கைக்கும் செய்யப்படுகின்ற நன்றி தெரிவிக்கும் விழாக்களும், பூசைகளும், நித்திய வழிபாடும், பூசித்தலும் மழை இல்லையென்றால் நடக்காது. ஊர்களில் நடவு இல்லை என்றால் அவ்வருடம் திருவிழா நடக்காது போவதைக் காணலாம்.

ஆக வானம் பொய்த்தால், வானோரும் போற்றுவாரின்றி வழிபடப் படாது போவார்கள். எனவே உட்பொருளாக உணரத் தக்கது மழையில்லை என்றால் தெய்வமும் இல்லை. ஆக மழையே தெய்வத்திற்கும் மேல் முக்கியமானது.

வள்ளுவர் வானோர் என்பதால் பல கடவுளர் வழிபாட்டை ஆதரிக்கிறார் என்பது தவறு. வானோர் என்பதற்கு நீத்தார் என்றும், முன்னோர் என்றும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறார். எனவே இங்கே பூசனை என்பது வானோர்க்கு அளிக்கும் படையல்களையும் அதற்கான இயம, நியமங்களையும் ஆகும். இறையை அவர் எப்போதும் ஒன்றே தேவன் எனும் பொருளிலேயே பயன் படுத்துகின்றார்.


குறிப்புரை (Message) :

தேவர்களை வணங்குவதற்கும் மழை பொழிய வேண்டும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பூசனை - பூ கொண்டு சாத்திச் செய்யும் பூசை வழிபாடுகள்


ஒப்புரை (References) :

சேக்கிழார், பெரியபுராணம்: 74
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே.


ஆண்டாள், திருப்பாவை:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.