Showing posts with label ஒழுக்கு. Show all posts
Showing posts with label ஒழுக்கு. Show all posts

Saturday, December 12, 2009

திருக்குறள்:161 (பொறாமை இலாத இயல்பு...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 161

பொறாமை இலாத இயல்பு...

In English

ஒழுக்கு ஆறாக் கொள்க - ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

பொழிப்புரை :
ஒழுக்க நெறியாகக் கொள்க; ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இலாத இயல்பினை.

விரிவுரை :
ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை இலாத இயல்பினை, ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

மனதில் பொறாமை எனும் அழுக்கு அற்ற தன்மையினை, பரிசுத்த, மாசற்ற, குற்றமற்ற நிலையினை தனது வழக்கமான இயல்பாகக் கொள்ளுவதையே தனது ஒழுக்க நெறியாகக் கொண்டு பேணி வருதல் வேண்டும்.

பிறரின் வளர்சி, வெற்றி, உடைமை கண்டு பொறுக்காத தன்மையாகிய ‘பொறாமை’ எனும் குணம் மனதில் உருவாகும் அழுக்காகும். அத்தகைய மாசு, வயிற்றெரிச்சல், பேராசை தன்னை முன்னேறவிடாத எண்ணத்தை ஏற்படுத்தி தீ வழி செல்லத் தூண்டி விடும். அனைத்து தீய உப எண்ணங்களான கோபம், பச்சாதாபம், பொய், களவு, சூது, வஞ்சகம், சூட்சி, விதண்டா வாதம், குறுக்கு புத்தி, குறுகிய மனப்பான்மை, ஆத்திரம், ஆணவம், மயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாகக் கிளைத்தெழுந்து, ஆறாகச் சுரந்து முன்னேற்ற எண்ணங்களை முடக்கி ஒருவரைத் தீயவராய் ஆக்கி விடும்.

மாறாக பொறாமை அற்ற தன்மையில் பிறரின் வளர்ச்சியில், வெற்றியில் பெருமிதமும், அவரது உடைமையில் சலனமும் கொள்ளாது மேன்மேலும் அவரை வாழ்த்தத் தலைப்படும் மனது நல்லெண்ணங்களால் நிறைந்து வெற்றிப் பாதையிலேயே செல்லும். அவரது நெஞ்சில் தீயவை சுரப்பதில்லை. எனவே பொறாமையற்ற மனதில் முன்னேற்றமும், வளர்ச்சிகளும் ஆழ்மனத்தே கிளர்ந்து ஆக்கங்களாகி சிறப்புக்களை நல்கும். எனவே மனத்தில் பொறாமை அற்ற தன்மையோடு, பிறர் நலன் பெற வாழ்த்தி ஒழுகுவதே நல் ஒழுக்கமாகும்.

இவ்வாறு பொறாமை அற்று மனத்தைப் பேணுவதே ஒருவரின் பரந்த மனப்பான்மை, தூய்மையான உள்ளம் என்பனவாகும். எதையும் தாங்கும் இதயம் என்பது பொறுமைக்கு மாத்திரம் அல்ல, பொறாமை அற்ற தன்மைக்கும் பொருந்தும்.

வாழ்த்துகின்ற இதயங்களே நல் வாழ்க்கையினைப் பெறும். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே பன் மடங்கில் பெறுகின்றோம். இது சத்தியம். எனவே இதயத்தில் பொறாமை இல்லாமை என்பதோடு பிறரை மனப்பூர்வமாக வாழ்த்துவதையும், இயன்றால் பரிசில்கள் வழங்குவதையும், சபை அறியத் தயக்கமின்றித் தாராளாமாகப் பாராட்டுவதையும் ஒருவர் ஒழுக்கமாகவும், பழக்கமாகவும் கொள்ளுதல் வேண்டும்.

எல்லோரும் நலம் வாழ நாம் வாழ்த்துவோம் ...
நலம் யாவும் நமக்காக நமை வாழ்த்துமே.

குறிப்புரை :
நெஞ்சில் பொறாமை அற்ற இயல்பே பேணிக்காக்க வேண்டிய நல் ஒழுங்கு.

அருஞ்சொற் பொருள் :
ஆறு - வழி, சமயம், நெறி, அறம், இயல்பு, விதம், தணி, குறை, குணமாகு, அமைதிஅடை, அடங்கு, நதி

ஒப்புரை :

திருமந்திரம்: 211.
கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

திருமந்திரம்: 254.
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
சிவபுராணம்:

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

ஔவையார். ஆத்திசூடி:
27. வஞ்சகம் பேசேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
16. கிட்டாதாயின் வெட்டென மற

ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

ஔவையார். நல்வழி:
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 161

State of no enviousness...




In Tamil

ozhukku ARAk koLka - oruvan than nenjsaththu
azhukkARu ilAtha iyalbu.

Meaning :
One should preserve the non jealous nature in his heart as the good virtue.

Explanation :
One should maintain the state of un-enviousness in his heart as the virtuous discipline.

Tidy and serene state with no envy in the heart but with pure, dirty less and sinless qualities one should preserve it as the default nature and fundamental discipline.

The envy is the filthy thought occurring in the mind when no bearing for others growth, victory and possession. Such filthiness, larger desire and grief create stagnant thoughts and leads to bad paths. All subsidiary thoughts such as anger, pity, arrogance, bewilderment, lie, deceit, arguments, narrow-mindedness and shortsightedness emerge, secrete and flow to spoil the positive thoughts and makes one as wicked person.

On contrary the un-enviousness does not worry about others growths or possession. In fact it appreciates others victories and successes. Mind gets filled with good thoughts and hence travels only in the winning path. In such mind no bad ideas get secreted. Therefore in the un-envious mind developments, prosperity gets created subconsciously and leads to successful deeds and thus to glory. Therefore, the good virtue is nothing but the discipline of the mind to be without enviousness and wishing others to get goodness.

Preserving such un-enviousness mind is what known as one's broad mind and pure heart. Forbearance is not only to the heart and mind but also applicable to the state of un-enviousness.

Wishing hearts only get good life. Whatever we have offered to others only get backs to us in multitudes by the nature. It is the promise of nature. Therefore one should maintain the following traits as the basic disciplines of life: no envy in the heart, heartfelt wishing to others, possibly offering gifts and no hindrance in appreciating others in the gatherings.

Let us wish for all to get goodness in life...
All Goodness will wish us for our success.

Message :
Non jealous nature in the heart is the good virtue to be preserved.

***

Sunday, November 22, 2009

திருக்குறள்:148 (பேராண்மை எனும் ஒழுக்கம்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 148

பேராண்மை எனும் ஒழுக்கம்...

In English

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.

பொழிப்புரை :
பிறன் மனையாளை [தவறாக] நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு சிறப்பு மட்டுமோ? [அதுவே அவரது] ஆழ்ந்த ஒழுக்கம்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
பிறன் மனையாளைத் தவறிய கண்ணோடு நோக்காத பெரிய ஆண்மை, சான்றோருக்கு சிறப்பு மட்டுமா? அதுவே அவரது ஆழ்ந்த ஒழுக்கம்.

ஆண்மை என்பது வலிமையாகக் கருதப்படும் ஆணின் தன்மை. அஃது உடல் வலிமையை, வீரத்தைக் குறிப்பது. ஆயின் பிறன் மனையாளை விரும்பாத மன வலிமை என்பது பேராண்மையாம். எளியவரிடத்துக் காட்டும் வலிமையைக் காட்டிலும், வலியவரிடத்துக் காட்டும் வீரமே பெருமை போலும், எளிதாக மயங்கித் தவறி விடக் கூடிய பெண் மோகத்தினின்றும் அதை மன அடக்கத்தால் வெல்லுவதே சிறப்பு அல்லவா? எனவே அஃது பேராண்மை எனப்பட்டது.

அதிலும் பிறன் மனையாளைத் தவறி நோக்காத அத்தகைய பேராண்மை மிகச் சிறப்பானது அன்றோ? ஆம். அஃது சான்றோருக்கு சிறப்பென்பதைக் காட்டிலும் அதுவே அவரது ஆழ்ந்த ஒழுக்கமாகும். அதாவது சான்றோருக்குப் பிறன் மனையாளைத் தவறியும் எண்ணாதது சிறப்பென்பதைக் காட்டிலும் அதுவே அவரது அத்தியாவசியமான, ஆழ்ந்த ஒழுக்கம் என்பதே மறை பொருள்.

ஆழ்ந்த ஒழுக்கத்தில் நிற்போருக்குச் சிறப்பு என்பது தானாகவே நிகழும். ஒன்றை வெறும் புகழ்ச்சிக்காக ஒழுகுவதைக் காட்டிலும் உண்மையிலேயே ஆழ்ந்து ஒழுகுவது என்பதே சிறப்பு. அஃது உயர்ச்சியிலும், தாழ்ச்சியிலும் மாறாதது என்பது ஈண்டு பெறத் தக்கது.

எனவே சான்றோர் என்பவருக்கு ஆழ்ந்த ஒழுக்கம் என்பது பிறன் மனையாளை எண்ணாத பேராண்மைத் தனமே.

குறிப்புரை :
சான்றோரின் பிறன் மனையாளை எண்ணாது திகழும் ஆழ்ந்த ஒழுக்கமே அவரது பேராண்மை எனும் சிறப்பு.

அருஞ்சொற் பொருள் :
அறம் - ஒழுக்க நெறிமுறைகள், சிறப்பானது, பொருத்தமானது.
ஆன்ற - சிறந்த, மாட்சிமைப்பட்ட, ஆழ்ந்த

ஒப்புரை :

திருமந்திரம்: 2616
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.

திருமந்திரம்: 2618
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

ஔவையார். மூதுரை:
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 29
முட்டற்ற மஞ்சளை எண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை ஓலை விளக்கியிட்டுப்
பட்ட பகலில் வெளிமயக் கேசெய்யும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப் பாய்! இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 288
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்,
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்கை எங்கள் நோக்குமே.

சிவவாக்கியர்: 336
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கினோடும் வீதியை
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 148

The propriety called manly excellence...




In Tamil

piRan manai nOkkAtha pEr ANmai, sAnROrkku
aRan onRO? AnRa ozhukku.

Meaning :
The manly excellence of not looking adulterously at other's wife is not only the honor for the wise but it is the eminent propriety to them.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
Is it just the honor for the wise to have manly excellence of not looking adulterously at other's mate? Not only that but it is also their eminent propriety.

The manliness is the strength and masculine property of men. That indicates the bodily strength, valor and courage. But the mental-strength of not looking at other's wife is what the nobility of manliness. It is like the greatness of the strength shown not against the weak but against the strong, than falling easily pray to the desires of sexual pleasures, controlling and winning it is great, is it not? Therefore it is considered as the manly excellence.

In that too not looking at other's mate with adulterous intentions is still great, is it not? Yes. Though it is the honor for the wise, it is actually their deep virtuousness and eminent propriety. The implicit meaning is that the characteristic of not looking at other's wife of the wise is not just an honor but it is their essential, deep rooted virtuousness.

For those who live with strong virtuousness all the honors will come automatically. Instead of practicing just for the acclaims, truly following in deep senses is really great and worth. That won't change due to highness or lowness is comprehensible.

Therefore the eminent virtuousness for the wise is the honor of not looking adulterously at other's wife.

Message :
The propriety of not adulterous look on other's wife by the wise is their significance of noble manliness.

***

Sunday, June 21, 2009

திருக்குறள்: 20


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 20


நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.


பொழிப்புரை (Meaning) :
நீர் இன்றி அமையாது உலகு என்றால், யாவர்க்கும் மழையின்றி அமையாது ஒழுக்கம்.


விரிவுரை (Explanation) :

நீர் இன்றி அமையாது உலகம் ஆகி விட்டால் உலகம் கெட்டுவிடும். அது போலவே மழையின்றி அவ்வுலகத்தில் யாருக்கும் ஒழுக்கம் நிலைபெறாது கெட்டுவிடுவர். அதாவது மழையற்ற உலகத்தில் எத்தகையவரும் நல் ஒழுக்கத்தைப் பேணார். அதனின்று அறம். பொருள், இன்பம் ஆகிய வாழ்க்கை அறங்கள் ஒழுகப்படாது இவ் உலகம் சீர் கெடும் என்பது துணிபு.

மழை பொய்த்தால் உலகில் உயிர்களும் மக்களின் ஒழுக்கமும் குன்றிவிடும். எனவே இவ் உலக உயிர்களுக்கு உயிர்த்திருக்க மட்டுமல்ல, அவர்களின் முறையான வாழ்விற்கும் மழை அத்தியாவசியமானது என்கிறார் வள்ளுவர்.


குறிப்புரை (Message) :

நிலையான உலகிற்கும், முறையான வாழ்விற்கும் மழை மிக அவசியம்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

யார்யார்க்கும்: யாருக்கும், எவருக்கும், எத்திறத்தார்க்கும், எப்படிப்பட்டவர்க்கும்


ஒப்புரை (References) :


சிவவாக்கியம்:283
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே.


ஔவையார்:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.