|
| |
| |
பொழிப்புரை : | |
[ஒருவன்] அறம் சொல்லுகின்ற [நேர்மை] நெஞ்சத்தான் அல்லன் என்பது [அவன் பிறரைப்] புறம் சொல்லும் சிறுமையால் தெரியவரும். | |
| |
விரிவுரை : | |
ஒருவன் அறம் சொல்லும் நல் நெஞ்சத்தல்லது வஞ்சக நெஞ்சினன் என்பது அவன் பிறரைப் பற்றிப் புறஞ்சொல்லும் குற்றத்தினால் வெளித்தோன்றும். நேர்மையான நெஞ்சமா அல்லவா என்பதைக் காட்டிவிடும் இயற்கை வெளிப்பாடு ஒருவன் அவன் வாயாலேயே புறம் கூறும் தன்மையால் உலகிற்குத் தெரிந்து விடுமாம். அதாவது நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் தீயோன் என்பது அவன் மற்றோரைப் பற்றிப் புறம் பேசும் கீழ்மைச் செயலால் சுலபமாகத் தெரிந்து விடும். உள்ளத்தில் நல்ல உள்ளம் பேசும் பேச்சு சூது வாதின்றி, குதர்க்கமின்றி, தந்திரமின்றி, வஞ்சகமின்றி, வெளிப்படையாய், வெள்ளந்தியாய், புனிதமாக இருக்கும். நல்லறம் ஒழுகும் தெளிந்த சிந்தனையோரின் வாக்குக் குற்றமற்று ஒலிக்கும். அவற்றில் குதர்க்கமோ, வஞ்சகமோ, புறஞ் சொல்லும் இழுக்கோ, பழியோ, வம்போ, பொய்யோ, புரட்டோ, பூசலோ, தூற்றலோ, வழுவலோ இருக்காது. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வோரே வாக்கில் சுத்தமற்று புறம்பேசிப் புழுத்துப் போவர். தமது கெட்டிக்காரத்தனம் என்று நினைத்துக் கொண்டு கதை கட்டி, உண்மையைத் திரித்து, மற்றோர் மேல் வஞ்சப் புகழ்ச்சிப் பாடுவர். புறம்பாடி; நாணமிலாதே கோணல் கவிபாடி, திறமற்றுக் கட்டுரை நாடகமாடி; தீயதையே மன்றத்தில் உரையாற்றி; திரையாக்கி, ஓவியமாக்கி, நல்லறம் காக்கும் புனிதர்கள் போல்; உத்தம சீலத் தியாகிகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டு தமது இழுக்கான, கேவலமான உண்மை வரலாற்றையும் வசதியாக மாற்றிவிடலாம் என்று மனப் பால் குடித்து மயக்கு மொழி பேசி, மானம் மரியாதை அற்றுப் பொய்யையே பழங்கதையாய்ப் புராணமாய் உதிர்த்துத் திரிவர். ஆனால் உலகம் அவர்களின் உரையை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல அந்தப் பொய்யுரைகளிலுள்ள கயமைத் தனத்தையும், வஞ்சகத்தையும் கவனத்தில் கொண்டு அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் அல்லது அல்லாதவர்கள் என்று சத்தமின்றிக் கடமை தவறாது மதிப்பிட்டுக் கொண்டுதான் இருக்கும். எவ்வளவுதான் உத்தமர்களாக நடித்தாலும் புறம்பேசும் சிறுமைக் குணத்தால் உள்ளத்தில் உள்ளது வாக்கினில் தானாகவே வந்து அவரின் உண்மை முகம் அதுவாகவே வெளிப்பட்டு விடும். பிறர்பால் காட்டும் பரிவு, அன்பு, மரியாதை, கருணை, பெருமை இவற்றில் கூட நடிக்கத் தெரிந்த பெருந் தகைகள் பிறரைப் புறம் பேசும் ஆத்திரத்தில், சூழ்ச்சியில், சிறுமையில் தம்மை அறியாமல் தாமே தம் சுய ரூபத்தைக் காட்டி நிற்பர். உண்மை என்பது பல சமயங்களில் மறைவது போல் தோன்றினாலும் இறுதியில் ஓர் ஏழையின் சொல்லாலாவது வெளிப்பட்டு, நிலை நிறுத்தப் பட்டு வென்றுவிடும். நிஜங்களைத் தேடும் இதயங்கள் நிச்சயமாக ஒரு நாளில் புதைந்து போயிருக்கும் உண்மைகளைக் கூட வெளிக் கொணர்ந்து விடுவார்கள். ஆதலின் சத்தியமே புடம் போட்ட தங்கமாய், அழுத்தம் தாங்கிய வைரமாய் இறுதியாகவும் உறுதியாகவும் வெளிவரும். புழுதி வாரித் தூற்றிப் புறங்கூறிய சொற்கள், கூறியவனின் அக அழுக்கை மாத்திரமல்ல, தூற்றப் பட்டவரின் புனிதத்தையும் வலுப்படுத்தும். சொல்லடி பட்டவை கன்னிப் போகாது தனது தூய்மையின் மேன்மையால் கனிந்து நிற்கும்; வீண் வம்பிற்குச் சொல்லடி தொடுத்தவனே இறுதியில் நன் மக்கள் அனைவரின் நம்பிக்கையையும் இழந்து களங்கப் படுவான்; துக்கமும், துயரமும் புடை சூழ நகைப்பிற்கு இடமாகி ஏன் கல்லடி கூடப் படுவான். அகமும் புறமும் உண்மையில் தூய்மையுடைய நல்லறத்தோர் மட்டுமே புறம் பேசும் குற்றத்தைச் செய்யார். | |
| |
குறிப்புரை : | |
உள்ளத்தில் நேர்மை அற்றவன் என்பது ஒருவன் பிறரைப் பற்றிப் புறங் கூறும் சிறுமையால் தெரிந்து விடும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அன்மை - அல்லாமை, தீமை புன்மை - அற்பம், இழிவு, கீழ்த்தரம், தூய்மைக்கேடு, சிறுமை, துன்பம், வறுமை, குற்றம். | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 300 அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே. திருமந்திரம்: 366 பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங் கண்பழி யாத கமலத் திருக்கின்ற நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம் விண்பழி யாத விருத்திகொண் டானே. திருமந்திரம்: 2519 விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக் கண்ணற வுள்ளே கருதிடின் காலையில் எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8 மாணிக்க வாசகர். திருவாசகம். 6. நீத்தல் விண்ணப்பம்: (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம் பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139 பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம் ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140 ஔவையார். ஆத்திசூடி: 52. சொற்சோர்வு படேல். 57. தீவினை யகற்று. ஔவையார். கொன்றை வேந்தன்: 47. தோழனோடும் ஏழைமை பேசேல் 50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சார் ஐம்புலன் களற்றுப் பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன் அற்றுக் காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே ஏதங் களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே! 31 கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரை கொடும்பவ மேசெய்யும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள் நெடும்பனை போல வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா இடும்பரை ஏன்வகுத் தாய்? இறைவா! கச்சி ஏகம்பனே! 39 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
One is not of good virtues in heart will become apparent through his meanness of slandering on others. | |
| |
Explanation : | |
One is with no virtuousness but only the cunning heart will become apparent to all through his mean utterance of slander on others. | |
| |
Message : | |
One's unrighteousness in heart will become evident through his mean mentality of slandering on others. | |
| |
*** |
3 comments:
hi
what software u r using for tamil writing..so beautiful...if it is free version, can u share...thanks
sri
Hi Sriganeshh
I use NHM Writer to input Tamil. It is very nice editor and can be used on any application either online or offline. It is a free software. Cut and paste the following address in your browser to see its download page.
http://software.nhm.in/products/writer
If the font is that you are interested then it is 'Arial Unicode MS'. It comes with MS Office. The deault unicode Tamil font 'Latha' will look more bigger.
All the best.
hi
thanks so much for your quick reply.
will try this...
best
sri
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...