Showing posts with label aRam. Show all posts
Showing posts with label aRam. Show all posts

Monday, January 11, 2010

திருக்குறள்:185 (புறஞ்சொல்பவன் நேர்மையன் அல்லன்...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 185

புறஞ்சொல்பவன் நேர்மையன் அல்லன்...

In English

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும்.

பொழிப்புரை :
[ஒருவன்] அறம் சொல்லுகின்ற [நேர்மை] நெஞ்சத்தான் அல்லன் என்பது [அவன் பிறரைப்] புறம் சொல்லும் சிறுமையால் தெரியவரும்.

விரிவுரை :
ஒருவன் அறம் சொல்லும் நல் நெஞ்சத்தல்லது வஞ்சக நெஞ்சினன் என்பது அவன் பிறரைப் பற்றிப் புறஞ்சொல்லும் குற்றத்தினால் வெளித்தோன்றும்.

நேர்மையான நெஞ்சமா அல்லவா என்பதைக் காட்டிவிடும் இயற்கை வெளிப்பாடு ஒருவன் அவன் வாயாலேயே புறம் கூறும் தன்மையால் உலகிற்குத் தெரிந்து விடுமாம். அதாவது நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் தீயோன் என்பது அவன் மற்றோரைப் பற்றிப் புறம் பேசும் கீழ்மைச் செயலால் சுலபமாகத் தெரிந்து விடும்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் பேசும் பேச்சு சூது வாதின்றி, குதர்க்கமின்றி, தந்திரமின்றி, வஞ்சகமின்றி, வெளிப்படையாய், வெள்ளந்தியாய், புனிதமாக இருக்கும். நல்லறம் ஒழுகும் தெளிந்த சிந்தனையோரின் வாக்குக் குற்றமற்று ஒலிக்கும். அவற்றில் குதர்க்கமோ, வஞ்சகமோ, புறஞ் சொல்லும் இழுக்கோ, பழியோ, வம்போ, பொய்யோ, புரட்டோ, பூசலோ, தூற்றலோ, வழுவலோ இருக்காது.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வோரே வாக்கில் சுத்தமற்று புறம்பேசிப் புழுத்துப் போவர். தமது கெட்டிக்காரத்தனம் என்று நினைத்துக் கொண்டு கதை கட்டி, உண்மையைத் திரித்து, மற்றோர் மேல் வஞ்சப் புகழ்ச்சிப் பாடுவர். புறம்பாடி; நாணமிலாதே கோணல் கவிபாடி, திறமற்றுக் கட்டுரை நாடகமாடி; தீயதையே மன்றத்தில் உரையாற்றி; திரையாக்கி, ஓவியமாக்கி, நல்லறம் காக்கும் புனிதர்கள் போல்; உத்தம சீலத் தியாகிகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டு தமது இழுக்கான, கேவலமான உண்மை வரலாற்றையும் வசதியாக மாற்றிவிடலாம் என்று மனப் பால் குடித்து மயக்கு மொழி பேசி, மானம் மரியாதை அற்றுப் பொய்யையே பழங்கதையாய்ப் புராணமாய் உதிர்த்துத் திரிவர். ஆனால் உலகம் அவர்களின் உரையை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல அந்தப் பொய்யுரைகளிலுள்ள கயமைத் தனத்தையும், வஞ்சகத்தையும் கவனத்தில் கொண்டு அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் அல்லது அல்லாதவர்கள் என்று சத்தமின்றிக் கடமை தவறாது மதிப்பிட்டுக் கொண்டுதான் இருக்கும்.

எவ்வளவுதான் உத்தமர்களாக நடித்தாலும் புறம்பேசும் சிறுமைக் குணத்தால் உள்ளத்தில் உள்ளது வாக்கினில் தானாகவே வந்து அவரின் உண்மை முகம் அதுவாகவே வெளிப்பட்டு விடும். பிறர்பால் காட்டும் பரிவு, அன்பு, மரியாதை, கருணை, பெருமை இவற்றில் கூட நடிக்கத் தெரிந்த பெருந் தகைகள் பிறரைப் புறம் பேசும் ஆத்திரத்தில், சூழ்ச்சியில், சிறுமையில் தம்மை அறியாமல் தாமே தம் சுய ரூபத்தைக் காட்டி நிற்பர்.

உண்மை என்பது பல சமயங்களில் மறைவது போல் தோன்றினாலும் இறுதியில் ஓர் ஏழையின் சொல்லாலாவது வெளிப்பட்டு, நிலை நிறுத்தப் பட்டு வென்றுவிடும். நிஜங்களைத் தேடும் இதயங்கள் நிச்சயமாக ஒரு நாளில் புதைந்து போயிருக்கும் உண்மைகளைக் கூட வெளிக் கொணர்ந்து விடுவார்கள். ஆதலின் சத்தியமே புடம் போட்ட தங்கமாய், அழுத்தம் தாங்கிய வைரமாய் இறுதியாகவும் உறுதியாகவும் வெளிவரும்.

புழுதி வாரித் தூற்றிப் புறங்கூறிய சொற்கள், கூறியவனின் அக அழுக்கை மாத்திரமல்ல, தூற்றப் பட்டவரின் புனிதத்தையும் வலுப்படுத்தும். சொல்லடி பட்டவை கன்னிப் போகாது தனது தூய்மையின் மேன்மையால் கனிந்து நிற்கும்; வீண் வம்பிற்குச் சொல்லடி தொடுத்தவனே இறுதியில் நன் மக்கள் அனைவரின் நம்பிக்கையையும் இழந்து களங்கப் படுவான்; துக்கமும், துயரமும் புடை சூழ நகைப்பிற்கு இடமாகி ஏன் கல்லடி கூடப் படுவான்.

அகமும் புறமும் உண்மையில் தூய்மையுடைய நல்லறத்தோர் மட்டுமே புறம் பேசும் குற்றத்தைச் செய்யார்.

குறிப்புரை :
உள்ளத்தில் நேர்மை அற்றவன் என்பது ஒருவன் பிறரைப் பற்றிப் புறங் கூறும் சிறுமையால் தெரிந்து விடும்.

அருஞ்சொற் பொருள் :
அன்மை - அல்லாமை, தீமை
புன்மை - அற்பம், இழிவு, கீழ்த்தரம், தூய்மைக்கேடு, சிறுமை, துன்பம், வறுமை, குற்றம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 300
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

திருமந்திரம்: 366
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

திருமந்திரம்: 2519
விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்
எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8

மாணிக்க வாசகர். திருவாசகம்.
6. நீத்தல் விண்ணப்பம்:

(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)
பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு
விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139

பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140

ஔவையார். ஆத்திசூடி:
52. சொற்சோர்வு படேல்.
57. தீவினை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை:
பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சார் ஐம்புலன் களற்றுப்
பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன் அற்றுக்
காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே! 31

கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரை
கொடும்பவ மேசெய்யும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள்
நெடும்பனை போல வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா
இடும்பரை ஏன்வகுத் தாய்? இறைவா! கச்சி ஏகம்பனே! 39

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 185

Slanderer is untrustworthy...




In Tamil

aRam sollum nenjcaththAn anmai puRam sollum
punmaiyAl kANappadum.

Meaning :
One is not of good virtues in heart will become apparent through his meanness of slandering on others.

Explanation :

One is with no virtuousness but only the cunning heart will become apparent to all through his mean utterance of slander on others.

World will come to know whether one is righteous or not in the heart through the natural outcome through his own mouth by its uttered ill slander. It is just like the frog getting betrayed by its own noise, the unrighteousness of one becomes easily evident through his mean slander on others.

When the good heart speaks it would be with no cunningness, sophistry, tricks and cheatings but only be plain, open, innocent and divine. Voice of those who follow good virtues will sound no offensive. In that there will not be any sophistry, cunningness, slenderness, meanness, smear, scandal, gossip, evil word, falsity, twist, quarrel, throw up or any impropriety.

Only those with no honesty and ethics in heart but deceptive will utter ugly slander and thus get rotten. Thinking that as their intelligence they will cook up tales against truth and will sing slander on others. They will shamelessly speak untruth, slander and precariously enact drama of no doctrine in the public stage, screen and paint the scene. They act as if they are the preacher or the divine characters of good virtues and will allure and try to speak unashamedly all lies, untruth and impropriety as their traditional antiquity of truth to overturn the history for their own sake of negating their own ugly facts. However, the world will not only listen to their blabber with patience but will also keep tab and silently and diligently weighing them continuously for the meanness and deceits to judge those characters as righteous or not.

Whatever the pretentions they do to simulate the righteous wise, through their meanness the inner characteristics will automatically come out to show their true face always. Though they could pretend very well with kindness, love, respect, regard and gratitude on others but the miserably fail when it comes to slander on others by the haste, vengeance and meanness and thus without to their own knowledge they show their original true colors.

Though the truth seems to be disappearing often, at the end it shall come out through a word from the poor, and get established and will win. The fact seeking hearts will certainly find and discover the buried truths one day. Therefore only the truths will emerge at last as strong as the purified gold and as the diamond enduring any pressure.

The stained and spread slanders will reflect not only reveal the filthiness of the slanderer but makes the divinity purer and stronger for the affected ones. Those who suffered the hurt by the slander will not go ruined but will only stand ripe by the greatness of their pureness and dignity. Ultimately that who created useless slander gets blemish by losing the confidence from the public; gets encircled by grief, sorrow and affliction and becomes the lofting stock of the public and why even may get stoned.

Only those with clean and pure through good virtues in both inner and outer will not commit the offense of slandering.


Message :
One's unrighteousness in heart will become evident through his mean mentality of slandering on others.

***

Friday, January 8, 2010

திருக்குறள்:181 (புறம் கூறாமை இனிய அறம்...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 181

புறம் கூறாமை இனிய அறம்...

In English

அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.

பொழிப்புரை :
[நல்] அறத்தைக் கூறாது, [நல்லறம்] அல்லாததைச் செய்பவன் ஆயினும், ஒருவன், புறம் கூறாதவன் என்றால் [அஃது] இனியதாகும்.

விரிவுரை :
நல் அறத்தைப் பேசாது; நல்லறம் அற்றதைச் செய்பவனே ஆயினும் ஒருவன் புறம் கூறாதவன் என்றால் அஃது இனிமையை நல்கும்.

அதாவது புறம் கூறாமை என்பது நல்லறத்தைப் பேசாது இருத்தலைக் காட்டிலும் நல்லறத்தை ஒழுகாததைக் காட்டிலும் நல்லறம் அற்றதை செய்வதைக் காட்டிலும் உயர்வானது; சிறப்பானது என்பது பொருள். ஆக புறம் கூறுதல் என்பது தீயவற்றிலெல்லாம் தலையாயது என்பது உட்பொருள்.

அத்தகைய தீயதான புறங் கூறுதலால், புறங் கூறப்பட்டவரைக் காட்டிலும், அதைக் கேட்டு நம்புபவருக்கும், புறம் சொல்பவருக்குமே தீமை பெருகும். இட்டுக் கட்டிச் சொல்லப்படும் வஞ்சனைச் சொற்கள் சொல்பவருக்கே கெடுதலை விளைவிக்கும். கெடுவான் கேடு நினைப்பான். பொய் சொல்லுபவனே ஏமாறுவான். பழியை அநியாயமாகத் தோற்றுவிப்பவனே பிறகு இகழ்ச்சிக்கும் ஏளனத்திற்கும் ஆளாவான். குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்து அமைதியை இழக்கும். வெற்றிக்கு மாறாகத் தோல்வியில் தள்ளப் படுவான். பிறன் பால் சொல்லப் படுகின்ற அவதூறுகளால் கேட்பவரை நம்பச் செய்தால் அவரால் பொதுத் தீங்கோ, அல்லது கேட்பவருக்கே தீங்கோ ஏற்படலாம் அல்லவா? அந்தப் பாவமும் புறம் சொல்லியவனையே சாரும்.

புளுகு மூட்டைகளை உற்பத்தி செய்து கொண்டு, புரட்டல்களையே செய்து கொண்டு, புறம் சொல்லித் திரிபவர், தீய அறங்களுள் எல்லாம் பெரிதான தீமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து திருந்தி இனிமேலும் அவ்வண்ணம் செய்யாதிருக்க முயற்சித்துத் திருந்தட்டும், தங்களின் பாவத்தைக் குறைத்துக் கொள்ளும் காரணத்திற்காகவாவது.

குறிப்புரை :
நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும்.

அருஞ்சொற் பொருள் :
இனிது - இனியது, இனிமை அல்லது மகிழ்ச்சி தருவது

ஒப்புரை :

திருமந்திரம்: 40
குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

திருமந்திரம்: 55
ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

திருமந்திரம்: 2513
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. 2

திருமந்திரம்: 2514
கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3

மாணிக்க வாசகர். திருவாசகம்.
1. சிவபுராணம்:

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஔவையார். ஆத்திசூடி:
7. எண்ணெழுத் திகழேல்.
12. ஒளவியம் பேசேல். (பொறாமை, அழுக்காறு)

ஔவையார். கொன்றை வேந்தன்:
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு (பொறாமை)
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை

ஔவையார். நல்வழி:
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

பட்டினத்தார். கோயில்திருஅகவல்: 3
ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென ந்நெளிந்திடு சிந்தையும்;
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின ...15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிர் எனும் குருகுவிட்டு ஓடும் குரம்பையை ...20

குதம்பைச் சித்தர்: கண்ணிகள்:
வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி? 4

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி? குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி? 10

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 181

Non-Slandering is sweet virtue...




In Tamil

aRam kURAn, alla seyinum, oruvan
puRam kURAn enRal inithu.

Meaning :
Though one not uttering the good virtue and doing only the non-virtuous deeds, but if keeps up non-slandering, that will yield him happiness.

Explanation :

Though one never utters the good virtues and ever does only ill things, but when maintains the non-slandering as the virtue, that shall still provide him the happiness.

It means that Non-slandering is esteemed high and special compare to non-speaking of good virtues or not following the good virtues or than doing ill deeds. Therefore the implicit meaning is that the slander is supposed to be the worst among all the evil deeds.

Such slandering only affects the slanderer and the listener than the spoken person instead. All the cooked up tales and deceived words only affect the teller. That who thinks evil only goes bad. Only the liar gets deceived at the end. That who creates dishonor and deception to others suffers ultimately the defaming and denigration to the self. That who spoke off slander and untruth will lose the peace for ever. By slandering one makes the listener to believe the lies and thus make him or the public to do ill or evil deed. Is it not? That such deeds' sin also befall only on the slanderer him-self as the root cause of the chaos erupted.

That who keep creating the bundles of lies, doing only the cheating works and only slandering should realize that they are actually doing the deadliest sin among all the evils and hence should try to stop it immediately and try to correct themselves by non-slandering hence forth at least to reduce their sins in future.


Message :
Though not so virtuous on his deeds when one just maintains the non-slandering as the virtue that will yield him the happiness.

***

Friday, September 11, 2009

திருக்குறள்: 93 (இன்சொல்லே அறம்...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 93
Chapter : 10

Amiability

Thirukkural

: 93


முகத்தான் அமர்ந்து, இனிது நோக்கி, அகத்தான் ஆம்
இன் சொலினதே-அறம்.

பொழிப்புரை :
முகத்தால் மலர்ந்து, இனிது நோக்கி, மனத்தாலும் இன்சொல் பேசுவதேயாம் [உரையாடலின் நல்]அறம்.

விரிவுரை :
உரையாடலுக்கான அறமானது, முகத்தால் மலர்ந்து, இனிது நோக்கி, மனத்தாலும் இனிய சொல்லைப் பேசுவதே ஆகும்.

நல் உரையாடலுக்கான நல் ஒழுக்கம் இஃது. ஒருவரிடம் பேசும்போது முகம் மலர, மகிழ்ச்சியோடு அவரை நோக்கி, உளம் நிறைய இனிய சொற்களைப் பேசுதல் ஆகும். இதில் ஒன்றைத் தவற விட்டாலும் அஃது நல் ஒழுக்கம் அல்ல என்று தெளியவும்.

அதாவது கண்களைப் பார்த்துப் பேசாது, இன்முகம் காட்டாது, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதெல்லாம் இனிய சொல்லாக இருந்தாலும் கூட நல்லறத்தின் பால் சேராது.

அகமும், முகமும் மலர, நேர் பார்வையோடு மகிழ்வுடன் உண்மையை இனிமையுடன் பேசுவது ஒழுக்கமாக அனைவரும் பின்பற்றினால், சமுதாயமே சிறந்து விளங்காதா? எண்ணிப் பாருங்கள் வெறுப்புக்கள் மறைந்துவிடும். இணக்கங்கள் மலரும். உலகின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இவ்வுலக வாழ்வு இனிதே சிறக்கும்.

குறிப்புரை :
அகமும், முகமும் மலர, இனிய பார்வையுடன், இன் சொல் பேசுவதே நல் ஒழுக்கம்.

அருஞ்சொற் பொருள் :
அமர்ந்து - மலர்ந்து, நிறைந்து

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
.(1). நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே. 821
.(1). நலண்-கிடுண்- காமத்து நாடியி னுள்ளே

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே. 822

தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே. 823

மாணிக்கவாசகர். திருவாசகம். 5. திருச்சதகம்.
8. ஆனந்தத்து அழுத்தல் :

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84

ஔவையார். ஆத்திச்சூடி:
ஔவியம் பேசேல்.12
சொற்சோர்வு படேல். 52
மிகைபடச் சொல்லேல்.89

***

In English: (Thirukkural: 93)

mukaththAn amarnthu, inithu nOkki, akaththAn Am
in solinathE-aRam.

Meaning :
Pleased face, happy look and heartfelt sweet words are the virtue of conversation.

Explanation :

The virtue or the code of conduct to a conversation is by pleasant face, happy look and sweet words also by cheerful heart.

This is the good virtue for a good conversation. It is while talking with one to have a pleasant face, beaming look at him and heartfelt sweet words. Be clear that anything missing in this would make it not a good virtue.

Therefore a talk without looking into eyes, without showing a pleasant face, hiding something inside and externally talking something else are though may be of sweet words but cannot be considered as good virtue.

When the truth is spoken with the pleasant heart and face, looking into the eyes with gladness as a virtue by all, won't the society itself be great? Think about this. All hatred emotions will disappear. Togetherness and positivity will flourish. Many existing problems of the World will get resolved. Life on this earth will be happier.


Message :
Gracious heart and face, happy look and sweet words are the good virtue of conversation.

***

Saturday, August 22, 2009

திருக்குறள்: 77

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 77
Chapter : 8

Love

Thirukkural

: 77


என்பு இலதனை வெயில் போலக் காயுமே-
அன்பு இலதனை அறம்.

பொழிப்புரை :
எலும்பு இலாத புழுக்களை வெயில் காய்த்து வருத்துமே அதைப்போல அன்பு இலாதவரை வருத்தும் அறம்.

விரிவுரை :
எலும்பற்ற உயிரிகளான புழுக்களை வெயில் காய்ந்து வருத்திவிடுமே, அதைப் போன்றே அன்பற்றவர்களைக் காய்ந்து வருத்திவிடும் அறம்.

அன்பிலாதவர் எலும்பற்ற புழுக்களைப் போல அறம் எனும் வெயிலில் காய்ந்துவிடுவர் என்பது பொருள்.

ஆக அன்புடையோர், முதுகெலும்பு உடையோராய் காய்த்தல்களிலிருந்து தப்பிவிடலாம். எனவே மக்காள் அன்பு கொள்ளுவீர்.

அன்பு என்பது கருணை பொழியும் ஓர் உணர்வு; அன்புடையோர் என்போர் ஈர இதயம் உடையோர். அற வழியில் அவர்பால் எந்தக் காய்ச்சலும், வறட்சியும் துன்பத்தை ஏற்படுத்த முடியாது என்பது துணிபு. மாறாக அன்பிலாதோர் கருணை அற்றோர், நெஞ்சத்தில் ஈரமற்றோர். எந்தக் காய்ச்சலிலும் அவருக்குத் துன்பமே அதிகம்; எனவே அவர், புளுக்கள் போல், எளிதாகச் சுருண்டு விடுவர் என்பது ஈண்டு நோக்கத் தக்கது.

பிறர் துன்பங் கண்டு வருந்தும் தாய் உள்ளமும், ஏழைகளுக்காய் இரங்கும் கருணை இதயமும், அழுவோரைத் தேற்றும் அன்பு நெஞ்சங்களும், ஆதரவற்றோரை அணைக்கும் கரங்களும் என்றும் அன்பைப் பொழியும் மானுடச் சுரப்பிகள்; வற்றா ஊற்றுக்கள். அவரைக் காய்க்கும் துன்பம் அறத்தின்பால் வருமா? வந்தால் அது அறமா?

எனவே அன்பில்லாதவரே காய்ப்பர், காய்க்கப் படுவர், கருகுவர்.

குறிப்புரை :
அன்பற்றவர் வாழ்வில் காய்ந்து சுருங்கித் துன்புறுவர்.

அருஞ்சொற் பொருள் :
என்பு - எலும்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 277
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

ஔவையார். ஆத்திச்சூடி: 92
மூர்க்கரோடு இணங்கேல்

ஔவையார். கொன்றைவேந்தன். 40
தீராக் கோபம் போராய் முடியும்.

மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம்.
9. ஆனந்தப் பரவசம்.:

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90

தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு
ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91

அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92

பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94


***

In English: (Thirukkural: 77)

enpu ilathanai veyil pOlak kAyumE-
anpu ilathanai aRam.

Meaning :
The Boneless wither in the sun, likewise, the loveless suffer in the virtues

Explanation :

The hot sunlight withers the boneless worms; similarly, the virtue suffers the Loveless.

Loveless are similar to the boneless to suffer in the light of virtue, is the meaning.

Also it means that the Loving can sustain and escape in case of withering as they have the bones. Therefore guys, bear the Love in you.

Love is the emotion of kindness. Loving have the kind and wet heart. Therefore in their virtuous path, there can’t be any withering or dryness to create sufferings to them. On the other hand, Loveless do not have kindness or wetness in their heart. Therefore they suffer any withering the most. Hence they are compared to the boneless in their sufferings for the withering out.

The motherly hearts which shed tears for other’s sufferings; the kind hearts which grieves the poor, the graceful hearts which consoles the weeping, the noble hearts which embraces the orphans, all of them are the Love pouring human glands, non stopping human Love fountains. Will there be chance of withering them out in the path of virtue? If so will it be the virtue?

Therefore only Loveless go dry, wither, burnt and suffer.


Message :
The loveless in life will wither, shrink and fade.

***



Thursday, July 9, 2009

திருக்குறள்: 35



அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

35


அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும்
இழுக்கா இயன்றது-அறம்.


பொழிப்புரை (Meaning) :
பொறாமை, அவா, சினம், தீய சொல் ஆகிய நான்கையும் பற்றாது அமைவதே அறம் ஆகும்.


விரிவுரை (Explanation) :
பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் தவிர்த்து ஒழுகுதலே அறமாகும். இவை இருப்பின் அது அறமல்ல. இவையே அறமாகிய நல் ஒழுக்கத்திற்கு அடிப்படையில் ஒழிக்கப் பட வேண்டியவை தீய குணங்கள் ஆகும்.

இந்த நான்கு தீக் குணங்களும் உண்மையில் ஒன்றோடு ஒன்று தொடர்பும் கொண்டவையும் ஆகும். எனவே இவற்றில் எது ஒன்றையும் பற்றாது விலக்கி ஒழுகுதலே அறம் என்பது வள்ளுவர் வாக்கு.


குறிப்புரை (Message) :
நல்ல அறத்திற்குப் பொறாமை, ஆசை, சினம், தீய சொல் ஆகிய நான்கும் ஒழிக்கப்பட வேண்டியவை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
அழுக்காறு - பொறாமை
அவா - ஆசை
வெகுளி - சினம், கோபம்
இன்னாச் சொல் - கடுஞ் சொல், தீய சொல், கெட்ட வார்த்தை


ஒப்புரை (References) :

ஔவையார்: மூதுரை: 23
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பரும் போல்வாரே - விற் பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.

ஔவையார். நல்வழி: 6
உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு.

ஔவையார். நல்வழி: 33 (வன்சொல்லும் இன்சொல்லும்)
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

***