Showing posts with label il. Show all posts
Showing posts with label il. Show all posts

Monday, November 16, 2009

திருக்குறள்:142 (தீயவருள் பெரிய அறிவிலி...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 142

தீயவருள் பெரிய அறிவிலி...

In English

அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின், பேதையார் இல்.

பொழிப்புரை :
அறனற்ற காமத் தீநெறி நின்றாருள் எல்லாம், பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்து வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

விரிவுரை :
அறனற்று காமத் தீயொழுக்கத்தில் நின்றாருள் எல்லாம், பிறன் மனைவியை மோகித்து அவன் இல்லத்துப் புழக்கடை வாயில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

அறமற்ற செயலாகிய தீய ஒழுக்கத்தில், காமத்தின் பால் இழிவுற்று விலைமகளிர்பால் நின்ற தீயவர்கள் கூட அறிவற்று நின்றாலும் அவர்கள் பிறன் மனையாளை மோகித்து அவன் வாயிலில் சென்று நின்றவனைப் போன்ற அறிவிலிகள் அல்ல. எனவே காமத்தின் பால் முறை தவறும் முட்டாள்களுள்ளும், பிறன் மனை விழையப் புறப்பட்டவனே பெரிய அல்லது சிறந்த முட்டாள் என்பது மறை பொருள்.

காமத்தீயால் அறிவிழந்து, கணிகையரை நாடியவவர்களின் அறிவீனம் ஓரளவு பரவாயில்லை. ஏனென்றால் ஏற்படும் துயரில் ஈடுபடும் தனி மனித ஒழுங்கீடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கொள்ளலாம். அன்றில் ஈடுபட்டவன் குடும்பம் மட்டுமே அவமானப்படலாம் என்று கருத இடமுண்டு. ஆனால் பிறன் மனை விழையும் முட்டாளால், இரு குடும்பங்கள் நாசமாகப் போகின்றன என்பது மறை பொருள்.

தீயவற்றுள்ளும் மோசமான அறிவிலிகளே பிறன் மனைவியரை மோகித்து நிற்பவர்கள்.

குறிப்புரை :
அறமற்ற அறிவீனத்தில் பிறன் மனவியை மோகிப்பதே பெரிய அறிவீனம்.

அருஞ்சொற் பொருள் :
அறங்கடை - அறத்தின் புறமாகிய தீயறம்.
பிறன்கடை - பிறத்தியவனின் வீட்டுப் புழக்கடை வாயில்.

ஒப்புரை :

திருமந்திரம்: 203
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

மாணிக்க வாசகர். திருவாசகம்:
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411

ஔவையார். ஆத்திச்சூடி:
88. மாற்றானுக் கிடங்கொடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 12
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமல் சுகமென்று நாடும் இத் துற்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 233
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே.

சிவவாக்கியர்: 61
மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐஇறந்து கொண்டுநீங்கள் அல்லல்உற்று இருப்பிர்காள்
மெய்அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 142

The greatest fool among the wicked...




In Tamil

aRankadai ninRAruL ellAm, piRankadai
ninRArin, pEthaiyAr il.

Meaning :
Amongst all those non virtuous standers, there is no greater fool than that who stands other's door for adultery.

Explanation :
Among all those standers outside to the virtues, there is no greater stupid like that who stands at the door of others for adultery.

Even though the standers of non virtuousness stand with bad conduct and disgrace and approach prostitutes due to excessive desire for sex, they are no way stupid like those who stand for adultery at others door. Therefore even among the lustful fools of crazy acts, those who desired for the adultery are the best fools are the implicit meaning.

The stupidity of those who lost senses due to lascivious and approached the prostitutes is somewhat bearable. Because it may be considered that in the sorrow that follows only the individuals are affected. Or there is room to think that only the family of that who engaged suffers disgrace. But because of the fool who attempts adultery, two families are going to get damaged is the implicit meaning here.

Among all the evil doers only the stupid most desire adultery with other's wife.

Message :
Among the stupidity of non virtuousness, having lust for others wife is the greatest one.

***

Sunday, November 15, 2009

திருக்குறள்:141 (பிறன்மனை நாடும் அறிவீனம்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 141

பிறன்மனை நாடும் அறிவீனம்...

In English

பிறன்பொருளாள்-பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம், பொருள், கண்டார்கண் இல்.

பொழிப்புரை :
பிறன் பொருளாகியவளை ஏமாற்றி மயக்கிப் பெண்டாள எண்ணும் மடமை, உலகின் நல் அறத்தையும், பொருளையும் கண்டு அறிந்தவரிடத்தே இல்லை.

விரிவுரை :
பிறனுடைய உடைமையாகிய அவனது மனைவியை மயக்கிப் பெண்டாள எண்ணும் அறிவீனம், உலகத்தின் அறமும், பொருளும் கண்டு தெளிந்தவரிடத்தே இல்லை.

பிறனுடைய உடைமையை எண்ணும் தீது உலக நீதி நெறி அறியாதவர் பால் மட்டுமே இருக்கும். அதிலும் உயிருள்ள பிறன் துணைவியை ஏமாற்றிப் பெண்டாள நினைப்பது சண்டாளக் குணம். அதனால் உண்டாகும் தீவினையை, பாவத்தை உணர்ந்தவர் அத்தகு தகாத செயலை மனத்தாலும் எண்ணார் என்பது மறை பொருள்.

பிறத்தியானின் மனைவியின் பால் மயங்கி மோகிக்கும் தன்மை அறிவற்ற, நீதி நேர்மையற்ற அரக்கர் குணமாகும். நன் நெறியும், அறமும், பொருளும் கற்று உணர்ந்தவரிடத்தே அத்தகைய தீக் குணம் இருக்காது. அறம், பொருள் எனும் நல்லறத்தைக் கற்றொழுகி நல் இன்பம் நுகர்வதே , முப்பால் வகுத்த வள்ளுவர் காட்டும் வழிமுறை என்பது ஈண்டு பெறத்தக்கது.

எனவே பிறத்தியாரின் உடைமையை விரும்பாத நல்லறம் பேணி நன் மக்களாய் இருப்போம்.

குறிப்புரை :
நன்னெறி அறிந்தோர் பிறத்தியானின் மனைவியை தீதாய் மனத்தாலும் எண்ணார்.

அருஞ்சொற் பொருள் :
பெட்டு - பொய், ஏமாற்றுச் சொல், மயக்குமொழி
பேதைமை - மடமை, அறியாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 202
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

மாணிக்க வாசகர். திருவாசகம்:
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி
அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31

ஔவையார். ஆத்திச்சூடி:
87. மனந்தடு மாறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

ஔவையார். நல்வழி:
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 11
வரிக்கோல வேல்விழி யார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கோது வேன் எழுத்து அஞ்சுஞ் சொலேன்! தமியேனுடலம்
நரிக்கோ? கழுகு பருந்தினுக்கோ? வெய்ய நாய்தனுக்கோ?
எரிக்கோ? இரையெதுக்கோ? இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 76
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 141

Stupidity of adultery




In Tamil

piRanporuLAL-pettu ozhukum pEthaimai njAlaththu
aRam, poruL, kaNdArkaN il.

Meaning :
Those who have learned the world's virtuousness and values do not have the stupid and bad intentions of adulterine cheating and indulging the wife of others.

Explanation :
The stupidity of cheating by adulterine intentions with other's wife is not present with those who have learned the world's virtuousness.

Such bad intentions will only be with those who do not know the virtuousness of the world. It is heinous characteristic of one to cheat that too the living partner of the other. That who knows the ill and sin of that will never attempt to think such act is the implied meaning.

The infidelity nature to have sexual desire towards other's wife is the characteristic of no just and creatures like demons. It won't be with the wise and disciplined that have learnt the good virtues and its substance. The proper Love is only after learning the good virtues and the substances is the order Valluvar has prescribed is understandable even here.

Therefore let us be wise by following the good virtues and not having any desires for other's properties.

Message :
Those who know the virtues will never even think of others wife in bad intentions.

***

Monday, August 31, 2009

திருக்குறள்: 84

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 84
Chapter : 9

Hospitality

Thirukkural

: 84

அகன் அமர்ந்து செய்யாள் உறையும்-முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல்.

பொழிப்புரை :
[திருமகள்] அகத்தே அமர்ந்து உறை வாசம் செய்வாள், முகம் மலர்ந்து நல் விருந்து பேணுவான் இல்லத்தில்.

விரிவுரை :
முகம் மலர்ந்து நல் விருந்து பேணுவான் இல்லத்தில், திருமகள் அகம் மலர்ந்து உறை வாசம் செய்வாள். திருமகள் வசிக்கும் இல்லத்தில் “திரு” கொழிக்கும். செல்வம் செழிக்கும்.

எனவே இன்முகத்துடன் விருந்தினரை உபசரித்து, அவர்களைப் பேணி நல்விருந்து படைக்கும் நல்லோருக்கு அவர்கள் வீட்டில் திருமகள் மனம் மலர்ந்து வாசம் செய்து நன்மைகள் செய்வாள் என்பது தெளிவு.

தினம் விருந்தினருக்குப் படைத்தாலும் செல்வம் குறையாது என்று முன்னர் குறளிலே சொன்னாரே அதுவும் இதன் பால்தான் என்பது மட்டுமல்ல, மேலும் வளம் கொழிக்கும்; செல்வம் பெருகும் என்பதும் இப்போது தெளிவாகுதல் நன்று.

இங்கும் திருவள்ளுவர் அகன் அமர்ந்து செய்யாள் என செல்வத்திற்கு அதிபதியாக பெண் தெய்வத்தை எந்த நாமமும் இடாமல் சொல்வது, மதச் சார்பு இல்லா நிலையில் சொல்லவே என்பது ஈண்டு நோக்கத்தக்கது. பாலைக் குறிப்பிடாத இறை, தெய்வம், கடவுள் என்பதையே இதுவரையில் பயன் படுத்திய வள்ளுவர் முதலில் பெண்ணாக உருவகப் படுத்துவதும், அதுவும் மனத்தே அமர்ந்து இருப்பவள் என்று சொல்வதும் திருமகளையே, இலக்குமியையே மறைமுகமாகக் குறிப்பிடுவதாக எண்ணத் தோன்றுகின்றது. ஆயின் திருமகளை சைவமும், வைணவமும், சமணமும் போற்றிவருவதும், நாமம் குறிப்பிடாதே பொதுவாகவே சீதேவியாகவும் போற்றப்படுவதும் அன்றையக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.

அன்பும், பண்பும், இனிமையும் சேரும், நிறையும் இடத்தைத்தானே திருமகளும் சேர்வாள்; மனம் நாடுவாள். உறைந்து வசிப்பாள்.

எனவே விருந்தினரைத் திருமகளின் தூதுவராய் எண்ணி அவரைப் பேணினும் கூடத் தவறில்லைதான். ஏனென்றால் பின்னாலேயே திருமகள் வந்து விடுகின்றாளே.

ஆக விருந்தினரை இன்முகத்துடன் பேணுதல் மிக மிக அவசியம்.


குறிப்புரை :
இன்முகத்துடன் விருந்தினரைப் பேணின் திருமகளும் உளம் மகிழ்ந்து வந்து நிறைவாள்.

அருஞ்சொற் பொருள் :
செய்யாள் - செய்ய மாட்டாளா? செய்வாள் என்பதன் மரூவு.
உறைதல் - நிறைதல், வசித்தல்

ஒப்புரை :

ஔவையார். கொன்றைவேந்தன்: 3
இல்லறமல்லது நல்லறமன்று.

ஔவையார். நல்வழி: 21
நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்த்
தருஞ்சிவந்த தாமரையாள் தான்.


ஔவையார். நல்வழி: 32
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.


ஔவையார். மூதுரை: 18
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னா
மண்ணின் குடமுடைந்தக் கால்.

***

In English: (Thirukkural: 84)

akan amarnthu ceyyAL uRaiyum-mukan amarnthu
nal virunthu OmbuvAn il.

Meaning :
The Goddess of Wealth will gladly dwell their home where the smiles welcome and treat the guests.

Explanation :

In the house where one welcomes their guests with smiles and tend them, The Goddess of Wealth will gladly fill in and stay. Luck and prosperity grows where the Goddess of Wealth resides.

Therefore it is clear that for those who welcome the guests with hospitality, tend and treat them with Love, prosperity comes to them through the Goddess of wealth dwelling with themselves.

Treating and tending the Guests day-by-day will not impoverish nor go ruin was the previous kural, thus gets explained here by Valluvar for its secret of their means and revenues. It is more clear that not only just the revenues but also the growth and continuous prosperity are there on it.

Here too Thiruvalluvar mentions the Goddess of wealth without any name and as that who resides in the heart, only to reflect his stand on secularism. So far he had used 'Irai', 'Deyvam' and 'Kadavul' to the God, but now he mention here as Goddess, that too as who resides in the heart. That seems to be pointing the 'Thirumagal' or the Lakshmi for many. But the Goddess Thirumagal is mentioned in Saivam, Vaishanavam, Jainism and also generally without giving any name as 'Seethevi' . Therefore we can take it as reflection of the culture of Valluvar's period.

The Goddess of Wealth too joins, enjoys and stays only where Love, culture and happiness are getting together.

Therefore it is nothing wrong to treat the Guests as if they are the ambassadors of the Goddess of Luck, because the Goddess follows them instantly to the deserving Hosts.

Therefore it is very important to tend and treat the Guests with smiles at always.


Message :
Pleasing hospitalities extended to Guests brings the Goddess of Luck to smile and dwell in their home happily.

***


Saturday, July 18, 2009

திருக்குறள்: 44

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

44


பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.


பொழிப்புரை (Meaning) :
பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்டு வாழும் வாழ்க்கை உடையவராயின், அவர் தம் வாழ்க்கை வழியில் குறைவு என்பது எக்காலத்திலும் இருக்காது.


விரிவுரை (Explanation) :
பழிக்கு அஞ்சித் தான் சேர்த்த பொருளைப் பிறரோடு பகுத்து உண்ணும் வாழ்க்கை உடையப் பெற்றோருக்கு அவர் தம் வழியில் குறைவு என்பது எப்போதும் இல்லை. அதாவது எப்போதும் நிறைவே அவர் தம் வாழ்க்கை வழியில் என்பது பொருள்.

அதாவது பொருள் சேர்ப்பதல்ல நிறைவு; பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணுதலே உண்மையில் ஒருவருக்கு என்றைக்கும் நிறைவைத் தரும் என்பது பொருள். இதுவே பகுத்துண்ணுவதே பண்பிற்கு அழகு என்றானது.

பகிர்ந்து உண்ணுவதால் குறைவு ஏற்படும் என்பது வெளிப் பார்வைக்கு, வெளி எண்ணிக்கை மட்டுமே தோன்றும். உண்மையில் பகிர்தல், ஈதல் என்பதே இருப்பதைக் காட்டிலும் நிறைவைக் கொண்டு தரும் உத்தியாகும்.

ஆக, பழிக்காகவாவது அஞ்சி ஒருவர் முன்னர் சொன்ன மூவர் மற்றும் ஐந்து இடத்தாரோடாயினும் பகிர்ந்து உண்ணுதலை உடையவராயின் அவர்தம் வாழ்வில் குறைவென்பது எப்போதும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.


குறிப்புரை (Message) :
பகுத்து உண்ணுதல் எப்போதும் நிறைவான வாழ்வைத் தரும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
எஞ்சல் - குறைதல், மிஞ்சுதல்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 250
ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

திருமந்திரம்: 252
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

திருமந்திரம்: 255
தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம்: 267
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

திருமந்திரம்: 268
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

ஔவையார். கொன்றைவேந்தன்: 4
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஔவையார். கொன்றைவேந்தன்: 70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

ஔவையார். நல்வழி: 9
ஆற்றுப் பெருக்கற் றடிகடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.

***