Showing posts with label pazhi. Show all posts
Showing posts with label pazhi. Show all posts

Thursday, November 19, 2009

திருக்குறள்:145 (அழியாது நிற்கும் பழி...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 145

அழியாது நிற்கும் பழி...

In English

"எளிது" என இல் இறப்பான் எய்தும் - எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

பொழிப்புரை :
எளிது என்று பிறன் மனையில் [நெறிதவறிக்] கிடப்பான் எய்துவது, எக் காலத்திலும் அழியாது நிற்கும் பழி.

விரிவுரை :
அடைவது எளிது என்று பிறன் மனையாளின் கண் மோகித்து நெறி தவறிக் கிடப்பவன் எய்துவது எக்காலத்திலும் அழியாது நிற்கும் பழியே.

தமது பதவியால், சந்தர்ப்ப சூழ்நிலையால், கொண்டிருக்கும் வசதிகளால் பிறன் மனையாளை அடைவது எளிது என்று பிறன் இல்லத்தே தன்னை இழந்து கிடப்பவன், கடைசியில் எய்துவது எக்காலத்திலும் அழியாது நிற்கக்கூடிய பழியையே.

பிறன் மனையாளைச் சேரும் இழுக்குடைச் செயலைச் செய்வது மிகவும் எளிதாக இருக்கலாம்; ஆனால் அதன் பயன் என்றைக்கும் அழியாத பழியை உண்டாக்கும் என்பது மறை பொருள்.

எனவே கிடைத்த சந்தர்பத்தைச் சுய நலத்திற்காக, போகத்திற்காகத் தவறாகப் பயன் படுத்தும் ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும், உயர் அதிகாரிகளும், பீடாதிபதிகளும், ஜனாதிபதிகளும், அமைச்சர்களும், சாமியார்களும், பாதிரியார்களும் அன்றில் எந்த நிலையிலிருப்பவரும் அறிய வேண்டியது ஒன்றே. பெண் மோகத்தால் எல்லை மீறிப் பிறன் மனையாளை, மகளிரைப் பணியவைத்து அனுபவிப்பவை எல்லாம் அழியாப் பழியாக என்றைக்கும் நின்று அவமானத்தையே நல்கும் என்பதே.

அதிகாரமும், பலமும், வசதியும், சூழ்நிலையையும் சாதகமாக உள்ள வலியோர், எளியோரைப் பணியவைத்து இன்பம் துய்ப்பது அன்றில் பிறரை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் சுலபமாக பிறன் பொருளைச் சுகித்தல் என்பவையெல்லாம் தானாகவே வெளி வந்து, அழியாப் பழியை நிச்சயம் கொடுக்கும். தெய்வம் நின்று கொல்லும்.

நன்னெறியில் நின்று பழி பாவத்திற்கு அஞ்சுபவர் தமக்கு எளிதாகினும், சூழ்நிலை சாதகமாக இருப்பினும் ஒரு போதும் தவறினைச் செய்யார்.

குறிப்புரை :
எளிதெனத் துய்க்கும் பிறன் மனை இன்பம் அழியாப் பழியைத் தவறாது கொடுக்கும்.

அருஞ்சொற் பொருள் :
இறப்பான் - நெறி தவறுவான்
விளியாது - இறவாது, மறையாது, அழியாது

ஒப்புரை :

பொதுப் பழமொழிகள்:
பல நாள் திருடன் ஒருநாள் சிறையில்.

பட்டினத்தார். தனிப்பாடல்கள்: 6
எருவாய்க்கு இருவிரல்மேல் ஏறுண்டிருக்கும்
கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்! - திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ!

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 14
சீறும் வினையது பெண் உரு வாகித் திரண்டுருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகிக் கொடுமையினால்
பீறும் மலமும் உதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன்: இறைவா! கச்சி ஏகம்பனே!

திருமந்திரம்: 206
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

திருமந்திரம்: 208
கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

ஔவையார். கொன்றை வேந்தன்:
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

சிவவாக்கியர்: 305
மனவிவாகரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 145

Imperishable disgrace...




In Tamil

"eLithu" ena il iRappAn eythum - enj njAnRum
viLiyAthu niRkum pazhi.

Meaning :
That who thinks as the easy act and do the adultery with others wife, will attain only the long lasting disgrace.

Explanation :
That who thinks it as easy act to do the adultery and desires other's wife, will attain the never dying disgrace which will stay with him forever.

One who is thinking and lying in hope that through his social status and official position, by the opportunity and facilities, it is very easy and simple to get the other's wife, at the end will achieve only the undying disgrace which will never fade away.

It may be easy to do adultery and get the other's wife; but the result would be never dying disgrace and blemish is the implicit meaning here.

Therefore those such as the government servants, administrators, higher officials, head priests, presidents, ministers, saints and fathers of religion houses and anyone with whatever status, utilizing the available opportunity wrongly for the selfish motto and for sexual desires should know only one thing: with the desires for the sex who crosses the limits in adultery with other's wife and women by force or pursuit and who enjoys will all only turn into blemish and disgrace which will never die.

The strong people who have the advantage of the power, force, facilities and opportunity when force the weaker section and enjoys or cheating others and enjoying without anyone's knowledge easily encroaching the other's properties all will automatically come out one day, and will certainly embrace the never dying disgraces. God will certainly punish such heinous acts.

That who stand in the good virtues, that who are afraid of the disgrace will never do the mistakes though it may be easy and may even the opportunity be in their favor.

Message :
The adultery considered easy with other's wife shall certainly result in imperishable disgrace.

***

Monday, November 9, 2009

திருக்குறள்:137 (மேன்மை தருவது ஒழுக்கமே...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 137

மேன்மை தருவது ஒழுக்கமே...

In English

ஒழுக்கத்தின் எய்துவர், மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர், எய்தாப் பழி.

பொழிப்புரை :
ஒழுக்கத்தினால் எய்துவர் மேன்மை; [ஒழுக்கமற்ற] இழுக்கத்தினால் எய்துவர், எய்த ஒண்ணாப் பழியை.

விரிவுரை :
ஒழுக்கம் உடையவர் அனைவரும் மேன்மையை அடைவர். ஆனால் ஒழுக்கமற்ற இழுக்கத்தினை உடையோர் தாம் செய்த தவறுகளுக்கான பழியை மட்டுமன்று, தாங்க ஒண்ணாப் பழியையும் ஏற்க வேண்டி வரும்.

திருட்டு நகை வாங்கிய வியாபாரியும் திருடனின் கூட்டாளி என்பதால் திருடனென்றே பழி ஏற்க வேண்டும். தண்டனையையும், துன்பத்தையும், அவமானத்தையும், அவப் பெயரையும் அனுபவிக்க வேண்டி வரும். அதன் பயனால் வரும் பழிக்கும், ஏச்சுக்கும் ஆளாக வேண்டி வரும். ஒருமுறை குற்றம் செய்த பாவத்திற்காக எப்போதெல்லாம் குற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் சந்தேகத்திற்கும், சோதனைக்கும் ஆளாக வேண்டியும் வரும்.

ஒழுக்கமற்றவனின் வார்த்தைகள் அம்பலம் ஏறாது. மதிப்பு இருக்காது. மனச்சாட்சி விழித்துக் கொண்டால் செய்யும் தவறுகளால் நிம்மதியும் இருக்காது.

மாறாக ஒழுக்கம் உடையோர் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகாது, தாங்கள் செய்யும் பணியில் சிறப்புறவும், மேன்மை அடையவும், நல்லெண்ணத்தால் பிறருக்குப் பயன் தரும் நற்காரியங்களில் ஈடுபட்டுப் புகழையும், நன்மையையும் பெறுவர். குறைந்த பட்சமாக மன நிறைவு என்னும் மேன்மையையாவது அடைவர் அல்லவா?

எனவே நல் ஒழுக்கத்தை ஒழுகுவதே மேன்மை.

குறிப்புரை :
ஒழுக்கம் மேன்மை தரும்; ஒழுக்கமின்மை பொருந்தாப் பழியும் தரும்.

அருஞ்சொற் பொருள் :
எய்தா - ஏற்க ஒண்ணாத

ஒப்புரை :

திருமந்திரம்: 2103
செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே.

திருமந்திரம்: 2014
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.

திருமந்திரம்: 2105
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே.

திருமந்திரம்: 2106
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

திருமந்திரம்: 2107
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

ஔவையார். ஆத்திச்சூடி:
10. ஒப்புரவு ஒழுகு.
20. தந்தை தாய்ப் பேண்.
36. குணமது கைவிடேல்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 137

Discipline yields excellence...




In Tamil

ozhukkaththin eythuvar, mEnmai; izhukkaththin
eythuvar, eythAp pazhi.

Meaning :
Through discipline one attains excellence; Through indiscipline one attains, unbearable incrimination.

Explanation :
All the disciplined will attain excellence. But the undisciplined will get blamed not only for their lapses but also for others with the unbearable and irrelevant incriminations.

That who buys the stolen jewelry from a thief is also considered as the partner of the thief and hence he should take the blame of stealing. Also he should suffer the punishment, afflictions and disgrace. Because of that he should continue the insult, indignity and reproach from the society. Since has served once for the offense, whenever crime or offense occurs should undergo interrogations and doubts.

The words of undisciplined will not be accepted; will not have any value. Also when the consciousness awakes will not have even peace for the offenses made.

On the other hand, disciplined will not undergo unnecessary problems but will excel in their accomplishments and extol through their deeds of positive thinking and useful good works to all. At the least they would get the self satisfaction and contentment, is it not?

Therefore adopting the good discipline alone is good.

Message :
Discipline yields excellence; Indiscipline yields irrelevant blames too.

***

Saturday, July 18, 2009

திருக்குறள்: 44

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

44


பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.


பொழிப்புரை (Meaning) :
பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்டு வாழும் வாழ்க்கை உடையவராயின், அவர் தம் வாழ்க்கை வழியில் குறைவு என்பது எக்காலத்திலும் இருக்காது.


விரிவுரை (Explanation) :
பழிக்கு அஞ்சித் தான் சேர்த்த பொருளைப் பிறரோடு பகுத்து உண்ணும் வாழ்க்கை உடையப் பெற்றோருக்கு அவர் தம் வழியில் குறைவு என்பது எப்போதும் இல்லை. அதாவது எப்போதும் நிறைவே அவர் தம் வாழ்க்கை வழியில் என்பது பொருள்.

அதாவது பொருள் சேர்ப்பதல்ல நிறைவு; பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணுதலே உண்மையில் ஒருவருக்கு என்றைக்கும் நிறைவைத் தரும் என்பது பொருள். இதுவே பகுத்துண்ணுவதே பண்பிற்கு அழகு என்றானது.

பகிர்ந்து உண்ணுவதால் குறைவு ஏற்படும் என்பது வெளிப் பார்வைக்கு, வெளி எண்ணிக்கை மட்டுமே தோன்றும். உண்மையில் பகிர்தல், ஈதல் என்பதே இருப்பதைக் காட்டிலும் நிறைவைக் கொண்டு தரும் உத்தியாகும்.

ஆக, பழிக்காகவாவது அஞ்சி ஒருவர் முன்னர் சொன்ன மூவர் மற்றும் ஐந்து இடத்தாரோடாயினும் பகிர்ந்து உண்ணுதலை உடையவராயின் அவர்தம் வாழ்வில் குறைவென்பது எப்போதும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.


குறிப்புரை (Message) :
பகுத்து உண்ணுதல் எப்போதும் நிறைவான வாழ்வைத் தரும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
எஞ்சல் - குறைதல், மிஞ்சுதல்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 250
ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

திருமந்திரம்: 252
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

திருமந்திரம்: 255
தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம்: 267
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

திருமந்திரம்: 268
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

ஔவையார். கொன்றைவேந்தன்: 4
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஔவையார். கொன்றைவேந்தன்: 70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

ஔவையார். நல்வழி: 9
ஆற்றுப் பெருக்கற் றடிகடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.

***



Tuesday, July 14, 2009

திருக்குறள்: 40

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

40


செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.


பொழிப்புரை (Meaning) :
ஒருவற்கு உயர்வு தரும் செயலானது ஆய்ந்து பழிச் செயல்களை விடுத்தலும்; ஆய்ந்து செயத் தக்கது நல் அறச் செயல்களைச் செய்வதுமே.


விரிவுரை (Explanation) :
ஒருவனிற்கு மேன்மை தரும் செயலானது என்றும் ஆராய்ந்து பழி எனும் தீ வினைகளை ஒதுக்கி, செயத் தக்க நல் அற வினைகளைச் செய்வதே.

ஒருவன் ஆராய்ந்து பழிச் செயல்களிலிருந்து அதைச் செய்யாது காத்துக் கொண்டு, அறச் செயல்களை ஆய்ந்து செயல்படுத்த வேண்டும்.

பழி பாவத்திற்கு அஞ்சி, நல் வினைகளேயே எப்போதும் ஆராய்ந்து செய்தால் ஒருவனிற்கு அது உயர்வைத் தரும்.


குறிப்புரை (Message) :
ஒருவன் எப்போதும் ஆராய்ந்து தீ வினைகளை விடுத்து, நல்வினைகளையே செய்ய வேண்டும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஓரும் - ஆராய்ந்து, ஆய்ந்து, சிந்தித்து. தெளி
உயற்பாலது - உயர்வு தருவதும், மேன்மை தருவது


ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை : 8
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.

ஔவையார். மூதுரை : 9
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது.

ஔவையார். நல்வழி : 31
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாதலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.


***