Tuesday, July 21, 2009

திருக்குறள்: 47


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

47


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


பொழிப்புரை (Meaning) :
இல் வாழ்க்கையை நல் இயல்பான நன் நெறிகளோடு வாழ்பவன் என்போன், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர் எல்லாருள்ளும் தலைமையானவன் ஆவான்.


விரிவுரை (Explanation) :
இல்லற வாழ்க்கையை அதன் நல் இயல்போடு; நல் அறத்தோடு வாழ்கின்றவன், வீடு பேறு முக்தியினை முயல்கின்ற அனைவருள்ளும் தலைமை ஆனவன் ஆவான். அதாவது இல் வாழ்வை நல் இயல்போடு வாழும் முறைமையே முக்தியைப் பெறும் வழிகளில் தலை சிறந்தது என்பது பொருள்.

முக்தியினைப் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம். எனவே அதுவே அனைவரின் முயற்சியும் ஆகும். ஆயின் அதை அனைத்தையும் துறந்து முயற்சிப்பதைக் காட்டிலும் அன்றில் இல்லறமற்ற வேறு எத்தகைய முயற்சிகளைக் காட்டிலும், நல் இல்லற வாழ்வோடு முயற்சிப்பதே மிகவும் சிறப்பு மிக்கதாகும். பற்றறுத்தவர்கள், பிரம்மச்சாரிகள், தவசிகள் இவர்கள் எல்லாரையும் விட இல்லறத்தானின் முயற்சியே தலை சிறந்தது என்பது பொருள்.

காரணம் இல் வாழ்வானே இயற்கை நியதியாகிய மனிதத் தொடர்ச்சிக்கு வித்திடுபவன். அத்தோடு இல் வாழ்க்கையையே தவமாகச் செய்கின்றவன். சந்தடி வாழ்க்கையை ஒதுக்கி அமைதி தேடப் பற்றறுக்காமல், வாழ்வியல் பிரச்சினைகளின் ஊடே அமைதியைப் பேணி வாழ்வதே இயல்பான வாழ்க்கை முறை. அம்முறையிலும் ஒழுக்கத்துடன் திகழ்ந்து அனைவரையும் பேணி, தன்னை நம்பியோருக்கும் வாழ்வு அளித்து, மற்றையோரைக் காட்டிலும் அதிகச் சுமைகளைத் தாங்கி செயல்படுகின்றான். எனவே அவன் முக்திக்கு முயலுவானே ஆகில் அவனுக்கே முன்னுரிமை என்பது நியாயம் தானே.


குறிப்புரை (Message) :
ஒழுங்கான இல்லற வாழ்வே வீடு பேற்றினைத் தரும் சிறந்த வழி.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
இயல்பினான் - இயல்பை ஒழுகினான்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 326
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

திருமந்திரம்: 327
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

திருமந்திரம்: 328
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 329
மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

***

Monday, July 20, 2009

திருக்குறள்: 46

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

46


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?


பொழிப்புரை (Meaning) :
அற நெறியில் இல்லற வாழ்க்கையை நடத்த வல்லவனாயின், மற்றைய நெறியின் பால் சென்று பெறுவது யாதோ?


விரிவுரை (Explanation) :
ஒருவன் இல்லற வாழ்க்கையை அற நெறியில் செலுத்துவன் ஆயின், புற நெறியின் பால், அதாவது இல்லறத்துக்குப் புறமாகிய துறவறத்தின் பால் சென்று பெறுவது என்ன? என்றால் ஏதுமில்லை என்பது சொல்லாப் பொருள்.

இல்லறத்தின் கண் நல் ஒழுக்கத்தை மேற்க் கொண்டவற்கு அதைக் காட்டிலும் ஒரு மேன்மையைப் பிற நெறிகள் தர இயலாது என்பது ஈண்டு பெறத் தக்க பொருள்.

அதாவது நல்ல இல்லறத்தின் கண் இருப்போன் துறவறம் மேற்கொண்டு பெறும் சிறப்பான பயன் ஏதும் இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்பதும் பொருள். இரண்டு முறைகளின் முடிவும் முக்திப் பேறே.

எனவே நன்னெறியில் நின்று ஓம்பும் இல்லறத்தினின்று கிட்டாதது ஒன்றும் துறவறத்தின் மூலம் கிட்டப் போவதில்லை என்பதும் தெளிவு.

வாழ்வின் நிகழ்வுத் திகட்டலால், ஆயாசத்தால் சில சமயங்களில் நாம் பேணும் முறைகளில் இருந்து பேணாத முறை சிறப்பே போலும், தேவலை போலும் தோன்றும். உண்மையில் அவை பெரும்பாலும் பொய்தோற்றமாகவே இருக்கும். அதையே எப்போதும் ’இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பது. அங்கேச் சென்றால் மீண்டும் பழைய கரை பச்சையாகத் தோன்றும். அதைப் போலவே இல்லறத்தின் பால் துறவறமும், துறவறத்தின் பால் இல்லறமும் சிறப்பானவை போன்ற தோற்றங்களை ஏற்படுத்தும். அவையெல்லாம் சோர்வுற்ற, திடமற்ற மனதால் விளைபவை. அத்தகைய மனத்தே ஏற்படும் இல்லற வாழ்வின் ஆயாச நிலைக்குத் தெளிவே இக் குறள் மூலம் வள்ளுவர் தருவது.


குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையை நல் அற நெறியில் நடத்தினாலேயே போதும்; வேறு நெறிகளைப் பின்பற்றத் தேவையே இல்லை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆறு - ஒழுக்கம்
ஆற்றுதல் - நிகழ்த்துதல், நடத்துதல்
போஒய்ப் - போய்ப்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 251
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

திருமந்திரம்: 256
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.

திருமந்திரம்: 262
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

***




Sunday, July 19, 2009

திருக்குறள்: 45

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

45


அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பொழிப்புரை (Meaning) :
அன்பையும் அறத்தையும் உடையதாக இருக்குமாயின், இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே.


விரிவுரை (Explanation) :
ஒருவரின் இல்லற வாழ்க்கை, எல்லோரிடத்தும் அன்பையும், நல் அறத்தையும் செய்யும் தன்மை உடையாதாக இருக்குமானால், அந்த வாழ்க்கையின் உண்மையான குணமும், அதன் பயனாவதும் அவ்விரண்டையும் கொண்டதுவே ஆகும்.

வாழ்வின் இன்பம் என்பதே அனைவரிடத்தும் அன்போடும், நற் பண்போடும் விளங்குதல் தானே. எனவே அதன் பால் அவையே இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்பது பொருள்.


குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையில் பண்பும், பயனும் எனப்படுவது எல்லோரிடத்தும் அன்பும், நற் செயல்களையும் உடையவராக இருத்தலே.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பண்பு - பணிவான அன்பு. நாகரீகம். தன்மையான முறைமை.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 276
முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

திருமந்திரம்: 279
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

திருமந்திரம்: 280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

திருமந்திரம்: 281
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

திருமந்திரம்: 282
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

ஔவையார். நல்வழி: 32
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

***