Friday, August 28, 2009

திருக்குறள்: 81

அதிகாரம்

: 9

விருந்தோம்பல்

திருக்குறள்

: 81
Chapter : 9

Hospitality

Thirukkural

: 81


இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி,
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொழிப்புரை :
[இல்லறத்தில்] இருந்து குடும்பத்தைப் பேணி இல்[லத்தில்] வாழ்வது எல்லாம் விருந்தினரை உபசரித்து, உதவிகளைச் செய்வதற்காகவே.

விரிவுரை :
இல்லறத்தின்பால் இருந்து தம் குடும்பத்தைப் பேணி, வீட்டில் வாழ்க்கை வாழ்வது எல்லாம், வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்து உதவிகளைச் செய்வதற்காகத்தான்.

இல்லறம் மேற்கொண்டவர்கள் எல்லாம், தங்கள் குடும்பத்தைப் பேணி, வீட்டிலிருந்து வாழ்க்கை நடத்தவேண்டியதன் அவசியம் வரும் விருந்தினரை வரவேற்று, அவர்களை உபசரித்து, அவர்களுக்கு உதவி, உபச்சாரங்கள் செய்வதற்காகவே.

அன்றில் ஒருவர் இல்லறத்தை மேற்கொள்ளாமலே இருந்திருக்கலாம்; இல்லறத்தை ஒழுகியவர் குடும்பத்தை மேற்கொள்ளாதவராக, வீட்டில் வாழாமல் சத்திரத்திலோ, காட்டிலோ அன்றில் இன்றையக் காலத்தின்படி ஓட்டல்களில் வாழுபவராகவோ, குழந்தைகளைப் பேணாதவராகவோ இருந்தால் அவர்களை இல்லறத்தாராகக் கருதுவதும் இல்லை அவரை நாடி விருந்தினர் செல்வதுமில்லை.

பல சமயங்களில் நமது வாழ்க்கையின் பல செயல்பாடுகள் நாம் நமக்காகச் செய்வதைக் காட்டிலும் சமுதாய வாழ்க்கைக்காகத் தான் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் ஒன்று நல் வீடுகளில் வாழ்வது. இன்றைய வாழ்க்கை முறைகள் மாறி இருப்பினும் கூட இன்னும் நாம் வீட்டைப் பேணுவதன் அவசியம் ”யாராவது வந்தால்” நன்றாக இருக்க வேண்டும் எனும் உணர்வு, உந்தல் எல்லாம், வரு விருந்தினரை எதிர்பார்த்துத்தானே. அதில் தவறு ஏதும் இல்லை. உண்மையில் அவை நம்மை ஒழுங்கு படுத்தவும், உற்சாகப் படுத்தவும், மேம்படவுமே செய்யும்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. சமுதாயக் கடமைகளையும், அங்கீகாரங்களையும், வழக்கங்களையும் ஒன்றி வாழுதல் இல்லறத்தில் முக்கியமானது, தவிர்க்க இயலாதது. உதாரணத்திற்கு இப்படி யாரும் ஒருவர் வீட்டிற்கு வாராது போனால், அவர் எப்படி வேண்டுமானாலும் வாழும் வழக்கத்திற்கு அடிமையாகிப் போவார். நாமாகத் தானே இருக்கிறோம் என்று சோம்பர் பட்டு வீட்டைச் சுத்தம் செய்யாமல், சுத்தீகரித்துக் கொள்ளாமல் விளங்குவார். அதுவே பழக்கமாகி அவர் வீடு புலி கிடந்த தூராய் மாறவிவ வாய்ப்புண்டு.

விருந்தினரை வரவேற்று, அவரைத் தமது வீட்டில் தங்கச் செய்து, உண்டு, பேசி, விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மனம் மகிழ்ச்சி தரும் செயல். அன்பான பண்பான செயல். பெருமை தரும் செயல். அது உறவுகளைப் பலப்படுத்தும்.

நம் வாழ்க்கை முறை பற்றி விருந்தினர் மூலம் வெளி உலகம் தெரிந்து கொள்கிறது. எனவே நாமும் சமுதாயத்தில் உறவுகளோடு, நண்பர்களோடு வாழ்வதைக் காட்டும் அடையாளமாக அவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது உபசரித்து மகிழ்வதே பண்பாடு. அவர்களை மீண்டும் நம்மை நாடி வரும்படியும், அவர் மனம் கோணாது நடந்து கொள்வதும் குடும்பத்திற்குப் பெருமை தரும் விடயமாகும். விருந்தினரின் வருகையும், நிகழ்வுகளும் என்றும் நினைவுகளில் நின்று விருந்தினருக்கும், உபசரித்தவருக்கும் நன்மை பயக்கும். நல்லிணக்கமும், பற்றுதலும், ஒற்றுமையும், உறவும் மேலோங்கும். வாழ்க்கை வாழுவதற்கு அர்த்தத்தையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் நல்கும்.

குறிப்புரை :
இல்லங்களில் வாழ்வது வரும் விருந்தினரோடு கூடி மகிழவே.

அருஞ்சொற் பொருள் :
ஓம்புதல் - பாதுகாத்தல், பேணுதல், பரிகரித்தல், வளர்த்தல்
வேளாண்மை - ஈகை, உபகாரம், உழவுத்தொழில்

ஒப்புரை :

ஔவையார். ஆத்திச்சூடி:
சான்றோர் இனத்திரு. 43
பெரியாரைத் துணைக்கொள்.82
மேன்மக்கள் சொற்கேள்.94
ஊருடன் கூடி வாழ்.103

ஔவையார். மூதுரை: 9
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி யிருப்பதுவும் நன்று.

மாணிக்கவாசகர். திருவாசகம். 2. கீர்த்தித் திரு அகவல்:
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60

***

In English: (Thirukkural: 81)

irunthu Ombi il vAzhvathu ellAm virunthu Ombi,
vELANmai seythaR poruttu.

Meaning :
In the Domestic order, living the homely life and house keeping is all for the sake of tending and treating the guests.

Explanation :

In the domestic order, leading the homely life and up keeping the house and such all are for the sake of tending and treating the guests.

All those who are in the domestic order of Life, are housekeeping their house and leading a homely life more importantly to welcome, entertain, help and treat their guests.

Otherwise one should not have taken up the homely way of life; though taken up the domestic path not necessarily have taken care of the neither family nor kids, nor lived at home but only at public homes or forests or like in the modern times at loges. None considers such as domestic dweller and no any guests visit him ever.

Most of the times, instead of our own, we do many things for the sake of the society and the social life. One among such things is that living in the houses. Though many things have changed over period of time, yet the necessity for the house keep is more so for the sake "if some body comes" it should look good and such feeling and motivations are just the expectations of guests. There is nothing wrong about it. In fact, such feelings help us to discipline ourselves, encourage and motivate to excel.

Whichever way living should not be the Life. It is important to live in accordance to the societal responsibilities, recognitions and practices. It is also inevitable. For instance, if no body comes home, one will live without caring for anything and will become accustomed to that style. Being alone, he won't mind leaving the home and himself untidy and unclean. Over the period that becomes his habit and surely he goes to dust.

Welcoming the guests, making them to stay, feasting with them, talking with them, exchanging things with them, such as all are those which gives only joy and makes only happy. Such acts are Loveable and Laudable. That makes the relationships strong.

The world at large comes to know our styles and about us through guests. Therefore it becomes customary to welcome guests home, host parties to them as the symbol of societal and friends life. Tending guests with love and making them come again to us brings good will to the family. The Guests visits and the related events stay in memory all along and cherish the hosts and guests with the pleasures and happiness. Also amicability, attachment, cooperation and relationships develop more. It also gives meaning, motivation and encouragement to the Life.


Message :
Homely life is only to tend and treat the guests.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...