Wednesday, August 19, 2009

திருக்குறள்: 74


அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 74
Chapter : 8

Love

Thirukkural

: 74

அன்பு ஈனும், ஆர்வம் உடைமை; அது ஈனும்
”நண்பு” என்னும் நாடாச் சிறப்பு.

பொழிப்புரை :
அன்பு ஈன்று தரும் ஆர்வம் உடைமையை; அது ஈன்று தரும் ”நட்பு” எனும் தேடாச் சிறப்பை.

விரிவுரை :
அன்பு பெற்றுத் தரும் ஆர்வம் உடைமையை; அந்த ஆர்வம் உடைமை பெற்றுத் தரும் “நட்பு” என்கின்ற முயற்சித்துத் தேடாத சிறப்பை, ஆச்சர்யங்களை.

அன்பு எதிலும் ஆர்வத்தை; விருப்பத்தை உண்டாக்கும். அதன்பால் தேடாமலேயே சிறப்பான நட்புக்களும் உண்டாகும்.

அன்பு என்பது என்பையும் பிறருக்கு ஈயும் தன்மை கொண்டது என்று முன்னர் சொல்லியமையால், அது பொருட் பற்றற்ற தன்மை கொண்டு விளைவதால், ஒருவேளை அவருக்கு வாழ்வில் ஆர்வம் இன்மையோ என்று ஐயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இங்கே வாழ்வில் ஆர்வம் கொள்ளுதலையும் தரும் சிறப்பு அன்பிற்கு உண்டு என்கின்றார்.

ஆர்வம் என்பத்திற்கும் ஆசைக்கும் வேறுபாடு உண்டு. எதையும் அறிய விரும்புவது; விளைவது ஆர்வம். எதையும் தனக்கென வேண்டுவது ஆசை.

ஒருவரின் பால் அன்பு கூர்ந்தால், அவரைப் பற்றி அறிய ஆர்வம் கிளைத்தெழும். அந்த ஆர்வத்தின் மேலீட்டினால் அவரைச் சென்று அறியவும், அதனால் அவர் மட்டுமல்ல, பல நட்புக்களும் கிளைத்தெழும். சமயங்களில், முயற்சித்துத் தேடி விளையாத நட்பே மிகச் சிறந்ததாக, ஆழமானதாக அமைந்துவிடுவதும் உண்டுதானே.

எனவே அன்பு பிறரின்பால் வழங்குதலைக் கொண்டிருந்தாலும் அது ஆர்வத்தையும், ஆழ்ந்த நட்பையும் பெற்றுத் தர வல்லது.

நட்பு என்பதே பிற அன்பை நாடித் தேடி ஓடும் ஓர் ஆர்வம் தானே. அன்பைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் ஒரு வேட்கைதானே. அன்புடைமை, ஆர்வமுடைமை செய்து நட்புடைமையைப் பெற்றுத் தரும்.

பள்ளிக்குச் சென்று திரும்பும் குழந்தைகளைப் பெற்றோர் சென்று எதிர்கொண்டு அழைக்கும்போழ்து பாருங்கள் மக்களின் ஆர்வத்தையும், அதன்பால் ஏற்படும் துள்ளலையும், தாவலையும், பள்ளிச் செயலை விளக்கும் துடிப்பையும், தோழர்களை, நண்பர்களை அறிமுகம் செய்யும் பெருமையையும். பல சமயங்களின் அத்தகைய பள்ளித் தோழர்களின் மூலம் குடும்பங்கள் நட்புக் கொள்வதும், ஆச்சரியமான புது நட்புக்கள் மலருவதும் நாம் காண்பதுதானே.

குறிப்புரை :
அன்பு ஆர்வத்தையும் தொடர்ந்து ஆழ்ந்த நட்பையும் பெற்றுத் தரும்.

அருஞ்சொற் பொருள் :
நண்பு - நட்பு, நல்லன்பு, நல்லன்பும் பண்பும் கொண்ட உறவு, சினேகம்.
ஈனுதல் - பெறுதல்

ஒப்புரை :

திருமந்திரம்: 282
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.


திருமந்திரம்: 416
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே


திருமந்திரம்: 442
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே

ஔவையார். மூதுரை: 20
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு.


பட்டினத்தார்: 20
வான்றேடு மறையேயோ மறைதேடும் பொருளையோ
ஊன்றேடும் உயிரேயோ உயிர்தேடும் உணர்வேயோ
தான்தேட நான்தேடச் சகலமெலாம் தனைத்தேட
நான்தேடி நான்காண நானாரோ நானாரோ.


***

In English: (Thirukkural: 74)

anpu Inum, Arvam udaimai; athu Inum
"naNpu" ennum nAdAch chiRappu.

Meaning :
Love yields aspiration; that yields surprising Friendships.

Explanation :

Love yields the desires; that desires begets the unexpected Friendships, the pleasant surprises.

Love creates interest and desires on any thing. Pursuing that interests results in Greatness such as unexpected special friendships.

As mentioned earlier that Love offers even bones to the others, not having any materialistic interests or attachments, it should not give a wrong notion that Love do not have desire in Life. That’s why Valluvar is talking about Love’s creation of interest and desires which brings laurels in Life.

There is a difference between interest and desire. Trying to understand any thing is the Interest. Trying to possess any thing is the desire.

When Love starts on somebody, the interest starts to know more about him/her. That interest leads to him/her to get to know and acquaint. In the process not only the intended person but many new friendships may emerge. At times that emerged unknown friendship becomes the stronger, deeper, long lasting and greater too.

Therefore the Love though it dedicates oneself to others, it also has the power to generate interest, desire, friendship and laurels in Life.

Friendship by itself is nothing but the run of desires to seek, search for the Love of others. It is nothing but the longing and inducing desire to share the Love. Love generates the desire and that begets the friendship.

Just watch the kids returning from schools for their interest, enthusiasms, jumping, leaping, excitement in sharing their experience at school for the day, pride introducing their friends and classmates. We see that many a times
such loving introductions of classmates and their parents have generated ever-lasting friendship between families.


Message :
Love springs aspirations and that blossom surprising Friendships.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...