Friday, September 11, 2009

திருக்குறள்: 93 (இன்சொல்லே அறம்...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 93
Chapter : 10

Amiability

Thirukkural

: 93


முகத்தான் அமர்ந்து, இனிது நோக்கி, அகத்தான் ஆம்
இன் சொலினதே-அறம்.

பொழிப்புரை :
முகத்தால் மலர்ந்து, இனிது நோக்கி, மனத்தாலும் இன்சொல் பேசுவதேயாம் [உரையாடலின் நல்]அறம்.

விரிவுரை :
உரையாடலுக்கான அறமானது, முகத்தால் மலர்ந்து, இனிது நோக்கி, மனத்தாலும் இனிய சொல்லைப் பேசுவதே ஆகும்.

நல் உரையாடலுக்கான நல் ஒழுக்கம் இஃது. ஒருவரிடம் பேசும்போது முகம் மலர, மகிழ்ச்சியோடு அவரை நோக்கி, உளம் நிறைய இனிய சொற்களைப் பேசுதல் ஆகும். இதில் ஒன்றைத் தவற விட்டாலும் அஃது நல் ஒழுக்கம் அல்ல என்று தெளியவும்.

அதாவது கண்களைப் பார்த்துப் பேசாது, இன்முகம் காட்டாது, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதெல்லாம் இனிய சொல்லாக இருந்தாலும் கூட நல்லறத்தின் பால் சேராது.

அகமும், முகமும் மலர, நேர் பார்வையோடு மகிழ்வுடன் உண்மையை இனிமையுடன் பேசுவது ஒழுக்கமாக அனைவரும் பின்பற்றினால், சமுதாயமே சிறந்து விளங்காதா? எண்ணிப் பாருங்கள் வெறுப்புக்கள் மறைந்துவிடும். இணக்கங்கள் மலரும். உலகின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இவ்வுலக வாழ்வு இனிதே சிறக்கும்.

குறிப்புரை :
அகமும், முகமும் மலர, இனிய பார்வையுடன், இன் சொல் பேசுவதே நல் ஒழுக்கம்.

அருஞ்சொற் பொருள் :
அமர்ந்து - மலர்ந்து, நிறைந்து

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
.(1). நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே. 821
.(1). நலண்-கிடுண்- காமத்து நாடியி னுள்ளே

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே. 822

தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே. 823

மாணிக்கவாசகர். திருவாசகம். 5. திருச்சதகம்.
8. ஆனந்தத்து அழுத்தல் :

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84

ஔவையார். ஆத்திச்சூடி:
ஔவியம் பேசேல்.12
சொற்சோர்வு படேல். 52
மிகைபடச் சொல்லேல்.89

***

In English: (Thirukkural: 93)

mukaththAn amarnthu, inithu nOkki, akaththAn Am
in solinathE-aRam.

Meaning :
Pleased face, happy look and heartfelt sweet words are the virtue of conversation.

Explanation :

The virtue or the code of conduct to a conversation is by pleasant face, happy look and sweet words also by cheerful heart.

This is the good virtue for a good conversation. It is while talking with one to have a pleasant face, beaming look at him and heartfelt sweet words. Be clear that anything missing in this would make it not a good virtue.

Therefore a talk without looking into eyes, without showing a pleasant face, hiding something inside and externally talking something else are though may be of sweet words but cannot be considered as good virtue.

When the truth is spoken with the pleasant heart and face, looking into the eyes with gladness as a virtue by all, won't the society itself be great? Think about this. All hatred emotions will disappear. Togetherness and positivity will flourish. Many existing problems of the World will get resolved. Life on this earth will be happier.


Message :
Gracious heart and face, happy look and sweet words are the good virtue of conversation.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...