அதிகாரம் | : | 4 | அறன் வலியுறுத்தல் | திருக்குறள் | : | 35 |
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும்
இழுக்கா இயன்றது-அறம்.
பொழிப்புரை (Meaning) :
பொறாமை, அவா, சினம், தீய சொல் ஆகிய நான்கையும் பற்றாது அமைவதே அறம் ஆகும்.
விரிவுரை (Explanation) :
பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் தவிர்த்து ஒழுகுதலே அறமாகும். இவை இருப்பின் அது அறமல்ல. இவையே அறமாகிய நல் ஒழுக்கத்திற்கு அடிப்படையில் ஒழிக்கப் பட வேண்டியவை தீய குணங்கள் ஆகும்.
இந்த நான்கு தீக் குணங்களும் உண்மையில் ஒன்றோடு ஒன்று தொடர்பும் கொண்டவையும் ஆகும். எனவே இவற்றில் எது ஒன்றையும் பற்றாது விலக்கி ஒழுகுதலே அறம் என்பது வள்ளுவர் வாக்கு.
குறிப்புரை (Message) :
நல்ல அறத்திற்குப் பொறாமை, ஆசை, சினம், தீய சொல் ஆகிய நான்கும் ஒழிக்கப்பட வேண்டியவை.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
அழுக்காறு - பொறாமை
அவா - ஆசை
வெகுளி - சினம், கோபம்
இன்னாச் சொல் - கடுஞ் சொல், தீய சொல், கெட்ட வார்த்தை
ஒப்புரை (References) :
ஔவையார்: மூதுரை: 23
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பரும் போல்வாரே - விற் பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.
ஔவையார். நல்வழி: 6
உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு.
ஔவையார். நல்வழி: 33 (வன்சொல்லும் இன்சொல்லும்)
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
***
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...