|
| |
| |
பொழிப்புரை : | |
நுண்ணியதையும் பரந்ததையும் அறியும் அறிவு பெற்றும் அதனால் பயன் என்ன? எவர் பொருட்டும் உரித்த பொருளை வேட்கை கொண்டு வெறிச் செயல்களைச் செய்தால். | |
| |
விரிவுரை : | |
யாரிடத்தும் கண்டதையெல்லாம் ஆசைப்பட்டு வெறி கொண்டு காரியம் செய்தால், ஆழ்ந்து பெற்ற நுண்ணறிவும், பரந்த அறிவும் இருந்து தான் என்ன பயன்? நுணுக்கி நோக்கும் அறிவும், ஆழ, அகலமாக ஆய்ந்து பார்க்கும் பரந்த அறிவும் பிறர் பொருளைப் பற்றி வெறி கொண்டு திரிவதற்காகவா? நல்லவற்றிற்குப் பயன்படாது தீயவற்றிற்கா அவை பயன் பட வேண்டும்? கற்கின்ற அறிவெல்லாம் தீதை அகற்றவா அன்றில் கண்டதன் மேலெல்லாம் ஆசை வளர்த்துப் பைத்தியம் பிடித்துத் திரியவா? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதே போல் காண்பவரையும், அவரின் உடைமையையும் வெறிக்கும் தன்மைக்கா ஒருவர் அறிவு நுணுக்கமும், விரிவும் பெறுகின்றார்? அனைத்திற்கும் காரணம், கற்ற அறிவின்பால் பெற வேண்டிய நல்ல நோக்கத்தில், பயனில் தெளிவின்மையே. கல்வியின் நோக்கம் தெரியாது கற்றுத் தரும் ஆசிரியரின் பால், அவர் தம் உடைமியின் பால் வேட்கை கொள்ளுதல் அறிவின்மையே. நுணுக்கிய அறிவிற்கும், பரந்த அறிவிற்கும் வெற்றிப் பாதை என்பது கண்டதன் மேல் எல்லாம் கவனம் கொள்ளுவதல்ல. கண்டவற்றையெல்லாம் காணும் மனதில் ஒருக்கம் ஏற்படாது எண்ணங்கள் சிதறி ஒன்றையுமே அடைய இயலாது. நல்லது ஒன்றைப் பற்றி அதையே நுணுக்கி, நுட்பமாக ஆராய்ந்தால் பாதைத் தெளிவும், வெற்றியும் கை கூடும் என்பதும் இக்குறளில் பொதிந்துள்ள உட் கருத்து. இதையே பிறகு துறவு அத்தியாயத்தில் குறள்:350ல், பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப் பற்றுக, பற்று விடற்கு’ என்றும் கூறுவதற்கு அடிப்படையாகும். அதாவது கண்டவர் மேலும், பொருளிலும் ஆசை வையாது, பற்றற்ற பரம் பொருள் மேல் பற்றை வைக்கும் படி கூறும் குறள். நோக்கரிய நோக்கும், நுணுக்கரிய நுண்ணுணர்வும் நல்லவை நோக்கிப் பயன் படுத்தப் பட்டால் வாழ்வின் உயர்ச்சிகளும், வெற்றிகளும், பரிசுகளும் தானாகவே தம்மைத் தொடருமே. மனித குல மேம்பாட்டிற்கும், சமுதாய நலத்திற்கும் தனது அறிவு நுட்பத்தைப் பயன் படுத்தினால் நோபல் பரிசும் கிட்டலாமே; மேன்மையும் அழியாப் புகழும் கிட்டக் கூடுமே. குறைந்த பட்சமாக வாழ்வின் நோக்கத்தை அறிந்து பயணித்தால் கூட பிறருக்குத் துன்பம் விளைவிக்காது, தனக்கே தீமை விளைவித்துக் கொள்ளாதே நல்லறம் தழைக்குமே. தமது அறிவின் திறத்தைப் பயன் படுத்தாதைக் காட்டிலும், நல்லதற்குப் பயன் படாத அறிவாற்றலைக் காட்டிலும், அதைப் பிறர் பொருள் மீது ஆசை கொண்டு தீராக் காதலையும், ஆறாத மோகத்தையும் வளர்த்து வெறித் தனம் செய்விப்பது தீதிலும் பெரிய தீதாகும். ஆதலின் ஒருவரின் நுணுக்கறிவும், பரந்த அறிவும் கண்டவற்றின் மேல் கொள்ளும் வேட்கை வெறியால் பயனற்றுத் தீதாய் முடிகின்றது என்பதே இக்குறளின் முடிவு. | |
| |
குறிப்புரை : | |
நல்லதற்குப் பயன்படாதே பிறர் பொருள்பால் ஆவலையும், காதலையும், வெறியையும் செய்விக்கும் நுண்ணறிவும், பரந்த அறிவும் தீதானவை. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அஃகு - சுருங்கு, குறை, குவி, கழி, வற்று, நுண்ணியதாகு நுண்ணறிவு - நுண்ணுர்வு, கூர்மையான அறிவு, நுட்பமானவற்றை உணர்ந்தறியும் ஆற்றல் வெறிய - வெறுமையுடன் உற்று நோக்கு, மிரளு, வெருவு, சீற்றம் கொள், மதம் கொள், விறைத்து நில், பைத்தியம், வரம்பு மீறிய பற்றி, இச்சை அல்லது ஈடுபாடு, ஆவேசம், ஆத்திரம், மூர்க்கத் தன்மை, குடி மயக்கம். | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 968. உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே. திருமந்திரம்: 1067. ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. திருமந்திரம்: 2976 கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில் அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. மாணிக்கவாசகர். திருவாசகம்: 10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்: உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231 ஔவையார். ஆத்திசூடி: 79. பீடு பெறநில். ஔவையார். மூதுரை: நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம். 7 ஔவையார். நல்வழி: தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. 30 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
What is the use of sharp and wise intelligence when it covets and savages on whoever comes across? | |
| |
Explanation : | |
If one does savaging with rage driven by the covetousness on everyone and everything which comes across, what is the use of his acquired wisdom of sharp and wiseness? | |
| |
Message : | |
The sharp and wise intelligence that which does nothing good but only covets and develops savage and fury thus is only ill. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...