Friday, December 25, 2009

திருக்குறள். அதிகாரம்:18. வெஃகாமை - முகவுரை

அதிகாரம்

: 18

வெஃகாமை

முகவுரை

Chapter : 18

Non-Covetousness

Preface

பிறர் பொருட்களின் பால் வேட்கை கொள்ளாமை. பேராசையால் பிறர் பொருளை அபகரித்துக் கொள்ள எண்ணாமை.

நேசமுடன் உறவாடி வஞ்சித்து மோசத்தால் அவர் பொருளைக் கவர்ந்து கொள்ள எண்ணாமை. பிறர் பொருட்களின் பால் ஏற்படும் தீராக் காதலால், மோகத்தால் இறைஞ்சியோ, ஏமாற்றியோ, வஞ்சித்தோ, திருடியோ, மறித்தோ, பறித்தோ, ஒதுக்கியோ, பதுக்கியோ, சுருட்டியோ, புரட்டியோ, உருட்டியோ, மிரட்டியோ, பகர்ந்தோ, கவர்ந்தோ, கள்ளமிட்டோ, கொள்ளையிட்டோ, ஆட்டுவித்தோ, ஆக்கிரமித்தோ, வழக்கிட்டோ, வாதிட்டோ, குறுக்கிட்டோ, வளைத்தோ செய்யும் அநீதி, கயமைத் தனம், அயோக்கியத்தனம் இல்லாது இருத்தல்.

இடைத்தரகராய் கட்டப் பஞ்சாயத்துச் செய்து ஏச்சுப் பிழைப்பதும், பிறரின் வேட்கைக்குத் துணை போவதும், அராஜக முறைகளில் ஊழல் செய்விப்பதும், செய்வதும், கையூட்டுக் கொடுப்பதும், வாங்குவதும், நய வஞ்சகத்தால் வரலாற்றைத் திரித்துப் புகழ் தேடுவதும், இலவசமென்று ஏமாற்றி இடையில் சுருட்டுவதும், பிறர் பொருளாகிய பொது மக்களின் உடைமைகளைக் கொள்ளை அடிப்பதும், திட்டம் தீட்டி, சட்டம் இயற்றி, நாட்டைச் சுரண்டுவதும், நாட்டின் திட்டப் பணிகளில், ஏலங்களில், கொள்முதல்களில், சேவைகளில் கொள்ளை அடிப்பதும், சுங்கம் பிடித்து வெளி நாட்டு இரகசிய வங்கிகளில் வரவு வைப்பதும், தமது வரும்படி பெருக்கத்திற்கு ஊழல் செய்வதை ஊக்குவிப்பதும் அனைத்தும் பிறரைக் காட்டிலும் தான் அதிகம் கொண்டிருக்க வேண்டும் எனும் பேராவலும் அதால் விளைகின்ற சிற்றின்பமும், பிறர் பொருளைச் சமயோசிதமாக யாரும் அறியாது அல்லது சட்டத்தின் ஓட்டைகளால், அல்லது ஓட்டைகளை ஏற்படுத்தி அபகரிப்பதே கெட்டிக்காரத்தனம் எனும் சிற்றறிவும், அதிகாரத்தைச் சுய நலத்திற்காகக் கெட்ட வழியில் பயன்படுத்தும் அயோக்கியத்தனமுமே காரணம் ஆகும்.

அடிப்படைக் காரணம் ஆசை, பேராசை, பிறர் பொருள் மேல், பணம், சொத்தின் இவற்றின் மேல் விளையும் அதி வேட்கை.

பிறரின் பொருளை விலை கொடுக்காது அன்றில் விருப்பத்திற்கு எதிராக அன்றில் ஏமாற்றி அநீதியாக அபகரிக்கும் கொள்ளை என்பது நல் அறத்திற்கு முழுவதும் எதிரானது. முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய தீய ஒழுக்கமாகும்.

ஒருவன் பிறர் மேல் கொள்ளும் பொறாமை எனும் அழுக்கைப் போலவே பிறரின் உடைமைகளில் கொள்ளும் விருப்பமும், பற்றும் தீதானது மேலும் குற்றத்தை நல்குவது. எனவே அழுக்காறாமை அதிகாரத்தைத் தொடர்ந்து வள்ளுவர் இங்கே வெஃகாமை பற்றிப் பேச விழைகிறார்.


அருஞ்சொற் பொருள் :
வெஃகல் - மிகுதியாக விரும்புதல், அதி ஆசை, ஆசைப் பெருக்கம், விரும்பல், இச்சை, பிறர் பொருளை விரும்புதல், greed, covetousness, avarice, avaritia, rapacity, cupidity, graspingness
வெஃகாமை - விரும்பாமை, வேண்டாமை, வெறுப்பு

ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 2615
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.

திருமந்திரம்: 2115
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.

திருமந்திரம்: 2745
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
1. சிவபுராணம் :

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

ஔவையார். ஆத்திசூடி:
42. கோதாட் டொழி. (பாவத்தை)
43. கௌவை அகற்று. (பழிச்சொல்லை)

ஔவையார். கொன்றை வேந்தன்:
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு (பொறாமை)
16. கிட்டாதாயின் வெட்டென மற
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

ஔவையார். நல்வழி:
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

அபிராமி அந்தாதி. அபிராமி பட்டர்: 32
ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்படஇருந் தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என்சொல்லுவேன்; ஈசர்பாகத்து நேரிழையே!

கண்ணதாசன்:
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்;
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்.
...
ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு.


***


In English:

Not having eagerness to possess others properties. Not to cheat others due to extreme greed to acquisitiveness.

Not to think of deceiving someone by acting friendly to steal his things. Due to the extreme and insatiable desire and wish for others properties not to do any of the injustice, meanness or dishonesty through any of the following such as begging, cheating, deceiving, stealing, blocking, obstructing, extorting, adjusting, concealing, detaining, twisting, collecting, plucking, intimidating, threatening, pronouncing, seizing, robbing, plundering, capturing, scaring, harassing, encroaching, suing, arguing, interfering and acquiring.

Deceiving by acting as arbitrary middlemen, supporting for others desires, making and practicing unjustifiable corruptions, accepting and giving briberies, intellectual cheating by altering the histories and trying to gain eminence, declaring freebies and stealing, plundering and looting the others or the public properties, planning and executing laws and robbing the country, overcharging in the countries’ planning and execution, tenders, purchases and services as commissions and investing in the foreign banks secret accounts, for the sake of own benefit encouraging the corruptions, all such are due to extreme greed to own the assets greater than others in wrong ways and enjoying such mean happiness, narrow mindedness to think that earning through smart altercations of laws and legal loopholes as great and miss using dishonestly the power for the self interests.

Basic reason is desire, cupidity and the extreme greed in others properties, wealth and assets.

Acquiring others properties without paying for it by force or against the owner’s acceptance or by deceit are completely against the good virtues. It is totally abolishable bad virtue.

It is similar to the enviousness on others by one, covetousness, desire and greed on others property are evil and offensive. Therefore Valluvar continues this 'Non-Covetousness' rightly after 'Un-enviousness' here.

***

1 comments:

UthamaPuthra said...

அனைவருக்கும் எனது இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

திறந்த மனத்தோடு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். எல்லா விழாக்களும் கொண்டாடப் பட வேண்டியவை. எல்லாரும் இன்புற்று இருப்போமாக. நன்றி.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...