|
| |
| |
பொழிப்புரை : | |
பொறாமையுடைய நெஞ்சத்தானின் ஆக்கமும், நேர்மை உடையோனின் கேடும் ஆராயத் தக்கவை. | |
| |
விரிவுரை : | |
பொறாமை உடைய நெஞ்சத்தானின் வளமும், பொறாமையற்ற நேர்மை உடையோனின் கேடும் ஆராயத் தக்கவை. அவ்வாறான நல் அறத்திற்கு எதிர்மறை வினை விளைப் பலன்களுக்குக் காரணம் முன் வினைப் பயனென்பது ஆராயத் தலைப்படின் வெளிப்படும். இக வாழ்வின் விளைவுகளுக்கு, இன்றைய வினைகள் மாத்திரமன்றி முன் வினைப் பயனும் காரணமாகின்றது. இதையே விதியென்றும் கூறுவதும் உண்டு. நல்லோர் துன்புறுவதும் அல்லோர் இன்புறுவதும் காலத்தின் கோலமல்ல, அவரவர் முன்வினையின் பலன்களுக்கு ஏற்பவே. இடைப்பட்ட இக வாழ்வில் வினைப் பயன்கள் பல சமயங்களில் தாமதாகவே செயல் படுவதும் கண் கூடு. எனவே இடைப் பட்ட பலாபலன்கள் என்பவை இறுதியானதாகவும், நிலையானதுவாகவும் எப்போதும் இருப்பதுமில்லை. காலச் சுழற்சியில் இவை மாறிவிடும் மாயங்கள் என்றே நிரூபணமாகி இருக்கின்றன. எனவே சோதனைகளும், வேதனைகளும் நல்லோர்பால் அதிகம் உண்டாவது அவரை இன்னும் பண் படுத்தவே என்பதும், அவற்றிலும் அவர் வெற்றி பெற்றால் இறுதியில் மறுபிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடு பேறு எனும் முக்தியை அடைவார் என்பது திண்ணம். அதே சமயத்தில் பொறாமை எனும் தீய குணம் கொண்டோர் பெற்றிருக்கும் ஆக்கங்கள் அவர் செய்த முன் வினைப் பயனே என்றாலும், பல சமயங்களில் இறுதிப் பலன் வேறுபடுவதும் உண்டுதானே. கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலும், கோவிலை இடிப்போர் சாமியைப் போலும், காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலும், கூட்டிக் கொடுப்போர் தொண்டர் போலும், தமிழே அல்லாதோர் தமிழர் போலும், தன்னலமிக்கோர் தலைவர்கள் போலும், பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலும், பேதலியெல்லாம் மேதைகள் போலும், அறிவிலி மண்டுகள் அறிஞர்கள் போலும், ஆற்றல் அற்றவர் கவிஞர்கள் போலும், கொலைகளைச் செய்வோர் கலைஞர்கள் போலும், குடும்பம் நடத்துவோர் துறவிகள் போலும், காமத் தேடிகள் அர்ச்சகர் போலும், கயமை உடையோர் நேர்மையர் போலும், குற்றம் இழைப்பவர் நீதியர் போலும், குறைகள் அற்றவர் கைதிகள் போலும், பிழைக்க வந்தோர் மன்னர்கள் போலும், பெருமைச் சந்ததி அகதிகள் போலும், சுயநலப் பேதைகள் அரசியல் ஆளவும், சொந்த பந்தம் மந்திரி ஆவதும், லஞ்சம் பெறுவோர் சஞ்சலம் அறுப்பதும், வஞ்சனை செய்வோர் கொஞ்சி மகிழ்வதும்,... (சந்தம் நன்றாக வருவதால் இதைக் கீழ்க் கண்டவாறு கவிதை வடிவில் முயற்சிக்கிறேனே...) எதிர்வினைப் பலன்கள் ஏன்? (மகாகவி பாரதிக்குச் சமர்ப்பணம்) கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலவும் கோவிலை இடிப்போர் சாமியைப் போலவும் காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலவும் கூட்டிக் கொடுப்போர் தொண்டர்கள் போலவும் தமிழே அல்லாதோர் தமிழர்கள் போலவும் தன்னலம் மிக்கோர் தலைவர்கள் போலவும் பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலவும் பேதலி யெல்லாம் மேதைகள் போலவும் அறிவிலி மண்டுகள் அறிஞர்கள் போலவும் ஆற்றல் அற்றவர் கவிஞர்கள் போலவும் கொலைதனைச் செய்வோர் கலைஞர்கள் போலவும் குடும்பம் நடத்துவோர் துறவிகள் போலவும் காமத் தேடிகள் அர்ச்சகர் போலவும் கயமை உடையோர் நேர்மையர் போலவும் குற்றம் இழைப்பவர் நீதியர் போலவும் குறைகள் அற்றவர் கைதிகள் போலவும் பிழைக்க வந்தோர் மன்னர்கள் போலவும் பெருமைச் சந்ததி அகதிகள் போலவும் சுயநலப் பேதைகள் அரசினை ஆள்வதும் சொந்தமும் பந்தமும் மந்திரி ஆவதும் பதவியில் இருப்போர் போதையில் ஆழ்வதும் கோழையர் கூட தேர்தலில் ’வெல்வதும்’ லஞ்சம் பெறுவோர் சஞ்சலம் அறுப்பதும் வஞ்சனை செய்வோர் கொஞ்சி மகிழ்வதும் பாதணி ஆண்ட பாரதம் என்பதும் பாதச் செருப்பாய் உழைப்பேன் என்பதும் வாக்கை ’வாங்கி’ வெற்றி என்பதும் ’வாரிசே’ ’மக்கள் ஆட்சி’ என்பதும் தம்மைப் போற்றின் பேரரசு என்பதும் தமக்கும் வேண்டும் பரிசில்கள் என்பதும் ’நோ-பல்’லைக் கோரிப் பல்லை இளிப்பதும் ’சா’கித்தியம் நாடிச் சாடை உரைப்பதும் கிட்டிய வரையில் இலாபம் பார்ப்பதும் திட்டம் தீட்டியே திருடிச் சேர்பதும் சங்கதி எதுவும் இல்லை எனினும் சாதித்தோம் என்றே சத்தியம் செய்வதும் சந்தியில் நிற்போர் சாவினை ஏகினும் சாகச நாடகம் நடத்தி முடிப்பதும் சந்திலே புகுந்து சிந்து படிப்பதும் சமயம் பார்த்து நொந்து நடிப்பதும் முதலைக் கண்ணீர் அழுகை விடுப்பதும் முத்தமிழ்ச் சொத்தை முழுவதும் அடிப்பதும் உதவா திட்டத்தை அமல் படுத்துவதும் உலக வங்கிக்கே அடகு வைப்பதும் ஊழலே வாழ்வாய் பிழைத்துக் கிடப்பதும் ஊரை அடித்து உலையில் வைப்பதும் ஆட்சியில் அமர்ந்தால் ’ஆண்டவன்’ என்பதும் ஆணவம் கொண்டு ஆடித் திளைப்பதும் துன்புறு மாந்தரைப் பங்கு வைப்பதும் தொட்டவர் எல்லாம் சுயநலம் பார்ப்பதும் தூங்குவோர் விழித்தால் திசை திருப்புவதும் துணிந்தோர் மனதில் மடமை வளர்ப்பதும் தொடரும் நாடகம் நியாயம் என்பதும் நிகழ்ந்தவை எல்லாம் நல்லன என்பதும் பத்தினியர் எல்லாம் பரத்தையர் ஆவதும் உத்தமர் எல்லாம் உரிமை இழப்பதும் தீங்கிற்குத் தீங்கே தீர்வு என்பதும் தீவிர வாதத்திற்கு மருந்ததே என்பதும் தேசப் பிதாவை கேலி செய்வதும் தேசத்தை ’நடிகர்’ வசமே விடுப்பதும் வேலையும் அற்றுச் சாலையில் இருப்பதும் விதியெனெ நொந்து வீழ்ந்து கிடப்பதும் மதுவினில் மயங்கி மானம் இழப்பதும் ’மதத்தினை’ வளர்த்து மானுடம் கெடுப்பதும் பழமை வினையின் பழியே என்பதா? பாமர மனிதரின் பேதமை என்பதா? வானமும் பூமியும் நிச்சயம் என்றால் வளர்பிறை கதிரும் சத்தியம் என்றால் அரசியல் பிழையை அறந்தான் விடுமா? அடுக்கிய பாவம் அதுவாய்க் கெடுமா? முன்வினை பின்வினை என்பது மெய்யா? முதுமொழிக் கூற்று அனைத்தும் பொய்யா? பொய்யும் புரட்டும் உயர்நிலை பெறுமா? பொருளினைச் சுருட்டின் புகழ்தான் வருமா? அழுதே நின்றால் கருணை வருமா? அனுதாபம் ஒன்றே வாழ்வைத் தருமா? வஞ்சித்து வாழ்ந்தால் வாழ்க்கை ஆகுமா? வாடித் துடித்தால் துன்பம் போகுமா? நெஞ்சின் அயர்ச்சி நிலையைத் தீர்க்குமா? நினைவுத் தளர்ச்சி கவலை போக்குமா? வேடிக்கை கண்டால் உணவு தேறுமா? வேதனை எல்லாம் தானாய் மாறுமா? முயற்சியே இன்றி வெற்றி கிட்டுமா? முடங்கிப் படுத்தால் மேன்மை எட்டுமா? சந்ததி என்பது சுயமாய் வருமா? சங்கடம் என்றால் சஞ்சலம் விடுமா? இயங்காது இருத்தல் இயற்கை ஆகுமா? இறந்து போவதே பொறுமை ஆகுமா? திருந்தா அறிவால் பொறுப்புத் தீருமா? தெய்வம் இகழ்ந்தால் விருப்பங் கூடுமா? தீமை வளர்த்தல் தெளிவுடைப் பொருளா? தீராத் துயரம் தெய்வத்தின் அருளா? எதிர்மறைப் பலனே இயற்கையின் விதியா? இரவும் பகலும் இறைவனின் சதியா? வாய்மை என்பது ஊமையின் மொழியா? வாய்ப்பினை இழப்பது அறிவுடைச் செயலா? உழைத்தவர் இனத்தே பட்டினிச் சாவா? உலுத்தர் கூட்டம் கோட்டையில் வாழ்வா? கோட்டை என்பது கொள்ளையர் அறையா? கூடித் திருடும் கூட்டணிக் கடையா? தூய்மை என்பது தொலைந்த சரக்கா? துயரம் என்பது தொடரும் கிறுக்கா? இதயம் இருப்பது மனிதரின் பிழையா? இல்லை என்பதே இருப்பவர் தொழிலா? வாழ்க்கை என்பது அனுபவச் சிறையா? வாழ்வது என்பதே சாகசக் கலையா? நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்... *** | |
| |
குறிப்புரை : | |
எதிர் பலன்களான பொறாமை உடையவன் பெறும் நலமும், பொறாமை அற்றவன் பெறும் கேடும் ஆராயத் தக்கவை. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அவ்விய - பொறாமையுடைய செவ்வியான் - நேர்மையுடையோன் நினை - எண்ணு, சிந்தி, மனம்கொள், | |
| |
ஒப்புரை : | |
| |
சிலப்பதிகாரம்: 15: 91-93: இம்மைச் செய்தன யான்அறி நல்வினை: உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது. பட்டினத்தார்: என்செய லாவதி யாதொன்று மில்லை யினித் தெய்வமே உன்செய லேயென் றுனரப்பெற் றேனிந்த வூனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோவிங்ங நேவந்து மூண்டதுவே. திருமந்திரம்: 2686 மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. திருமந்திரம்: 2667 விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. திருமந்திரம்: 2679 மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம்சித்த மாகும் நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்: 6.40 திருமழபாடி - திருத்தாண்டகம் சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர் இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான் பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப் பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 407 ஔவையார். ஆத்திசூடி: 99. வாதுமுற் கூறேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு ஔவையார். மூதுரை: ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன். 19 எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. 22 ஔவையார். நல்வழி: தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. 30 வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. 37 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Prosperity of the envious mind and the adversity of the righteous mind are to be pondered. | |
| |
Explanation : | |
The exuberance of the jealous and the destitution of the righteous hearts are to be considered and analyzed. *** | |
| |
Message : | |
The opposite results such as envious mind's prosperity and the un-envious mind's affliction are worth to be contemplated. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...