|
| |
| |
பொழிப்புரை : | |
[நிலையற்ற] சிற்றின்பமாகிய பிறர் பொருள்மேல் வேட்கையைக் கொண்டு அறன் அற்றதைச் செய்யாரே; [அற நெறியால் வரும் வீடு பேறு எனும்] பேரின்பத்தை வேண்டி நிற்போர். | |
| |
விரிவுரை : | |
அறநெறியால் வரும் வீடு பேறு எனும் பேரின்பத்தை விரும்புவோர், நிலையற்ற சிற்றின்பமாகிய பிறன் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார். பிறன் பொருளை அபகரித்துக் கிட்டும் இன்பம் நிலையற்ற சிற்றின்பம் ஆகும். பேரின்பம் வேண்டும் எனும் உயர்ந்த எண்ணம் கொண்ட நல்லறத்தோர் இத்தகைய சிற்றின்பத்தின் பால் ஆட்பட்டு அறமற்றதைச் செய்யார். பிறன் பொருளைக் கவருவதால் வரும் நிலையற்ற சிற்றின்பமானது நல் அறமும் அல்ல என்பது உட்பொருள். அச் சிற்றின்ப மோகம் மேலும் அறம் அற்ற செயல்களைத்தான் தூண்டி விடும். ஒழுக்கமற்றோர் அத்தகைய சிற்றின்ப மாயைகளால் அறம் அற்றவற்றைச் செய்து கொண்டு, இடைவிடாத துன்பத்திலேயே உழண்டு கொண்டு இருப்பார்கள். தமது தொடர் துன்பங்களுக்கு மூல காரணம் பிறன் பொருள்மேல் கொண்ட ஆசை என்பதை அறியாமல் நிலையற்ற சிற்றின்பத்தை மீண்டும் மீண்டும் தொடர்வதால் அதை நீடிக்கச் செய்யலாம் எனும் அறிவீனம் கொண்டு தொடர்ந்து பாவச் செயல்களைச் செய்து கொண்டு இருப்பார்கள். அபகரித்த பொருளால் வரும் இன்பம் எவ்வளவு காலத்திற்கு வரும்? தீதால் சம்பாரித்த பொருள்களால் நிலையான நிம்மதியைக் கொடுக்குமா? அதால் நன்மைதான் விளையுமா? அப்பொருள் அழிவதோடு மட்டுமல்லாது தம் வசம் இருக்கும் நல்ல பொருட்களும் சேர்ந்து கெடும் அன்றில் தமக்கும் வல்லவனால் அனைத்தும் அபகரிக்கப்பட்டு விடும். அடுத்தவன் வயிற்றில் அடித்துப் பெறும் இன்பம் அடுக்குமா? ஏமாற்றிப் பெறும் இன்பம் நீடிக்காது பிறகு பெரிய ஏமாற்றத்தை அள்ளித் தரும். மோசத்தால் வரும் இலாபம் நாசத்திற்கு முதலீடு. நியாயமாகச் சேர்த்தவை, சம்பாரித்தவையே நிம்மதியையும், நீடித்த இன்பத்தையும் தர வல்லவை. அறத்தின் வழி வந்தவை குற்றமற்றவை. எனவே அவை தேவையற்ற மன சஞ்சலங்களை உண்டாக்காது ஒருவரை முன்னேற்றங்களை நோக்கி முன்னெடுத்துச் செல்லும். எனவே பிறர் பொருள் மேல் கொள்ளும் வேட்கை, பிறரை இம்சித்துத் தீதான வழியில் வருகின்ற சிற்றின்பமே. உயரிய நோக்கமாகிய பேரின்பத்தை எண்ணிப் பயணிப்போர் நிச்சயமாக இச் சிற்றின்பத்தை விரும்பி அறம் அற்றதைச் செய்வாரோ? | |
| |
குறிப்புரை : | |
பேரின்பம் வேண்டுவோர் நிலையற்ற சிற்றின்பமாகிய பிறன் பொருள் வேட்கையை விரும்பார். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
சிற்றின்பம் - சிறிய இன்பம், நிலையற்ற மகிழ்ச்சி. | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 229. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. திருமந்திரம்: 250. ஆர்க்கும் இடுமின் அவாவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. மாணிக்கவாசகர். திருவாசகம். 1. சிவபுராணம் : போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 ஔவையார். ஆத்திசூடி: 48. சூது விரும்பேல். 57. தீவினை யகற்று. ஔவையார். கொன்றை வேந்தன்: 68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் ஔவையார். நல்வழி: ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். 8 ஔவையார். மூதுரை: ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன். 19 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Those who wish the higher bliss will not aspire for petty pleasures of covetous and do any ill things on its behalf. | |
| |
Explanation : | |
Those who desire the bliss of liberation will not wish the trifling pleasures from covetous and its ill deeds. | |
| |
Message : | |
Those who desire the higher bliss will not aspire for trivial joys of covetous acts. | |
| |
*** |
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...