Friday, September 18, 2009

திருக்குறள்: 100 (கனியிருக்கக் காய் தின்பதா?)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 100
Chapter : 10

Amiability

Thirukkural

: 100


இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

பொழிப்புரை :
இனிய சொற்கள் இருக்கும்போது இனியவை அல்லாதவற்றைக் கூறுதல், கனிகள் இருக்க [அதைவிடுத்துக்] காய்களைக் கொள்ளுதல் போன்றது.

விரிவுரை :
பேசி மகிழ இனிய சொற்கள் இருக்கும்போது, வருத்தம் தரும் இனியவை அல்லாத சொற்களைக் கூறுதல், உண்டுமகிழச் சுவைதரும் கனிகள் இருக்கும்போது அதைவிடுத்து கனிவற்ற, சுவையற்ற அல்லது கசக்கும் காய்களைக் கொள்ளுதல் போன்றது.

அவ்விதம் பொருந்தாத, காய்களை விரும்புதலும், கடும் சொற்களைக் கூறுவதும் அறிவுடையோர் செயல் அன்று.

ஒரு வேளை கனிவும், இனிமையும், கனியும் இல்லாது போய் காய்த்தல் உண்டாயின் அதைக் கூட இயல்பெனப் பொருத்துக் கொள்ள இயலும். ஆயின் கனிவும், இனிமையும் கலந்த சொற்களும், தீஞ்சுவைக் கனியும் அள்ளக் குறையாது நிறைந்திருக்கையில் அறிவுடையோர் யாராவது வேண்டத்தகாதவற்றை விரும்புவார்களா?

அவ்வாறு விரும்பின் அவர்கள் இயல்பான அறிவுத் தன்மையற்ற, இயற்கைக்கு ஒவ்வாத மூடரே என்பது சொல்லாப் பொருள்.

குறிப்புரை :
நல்லவை இருக்க அல்லாதவை நாடுவது அறிவின்மை.

அருஞ்சொற் பொருள் :
உளவாக - உளதாக, இருக்கையில்
இன்னாத - இனியவை அல்லாத
கவருதல் - கொள்ளுதல், விரும்புதல், பறித்தல்

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 317

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. 530

தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே. 1175

வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே. 1335

நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே. 1338

மாணிக்கவாசகர். திருவாசகம்.
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் :

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642

ஔவையார். ஆத்திச்சூடி:
சுளிக்கச் சொல்லேல். 47

***

In English: (Thirukkural: 100)

iniya uLavAka innAtha kURal-
kani iruppa, kAy kavarnthaRRu.

Meaning :
While sweet words exist, uttering the bitter ones is like consuming the raw sour unripe one leaving the ripe sweet fruit available.

Explanation :

When there are pleasant words to speak and enjoy, speaking sorrowful unpleasant words is like preferring the sour and bitter unripe raw ones instead of sweet fruits available.

Such inappropriate preferences of bitter ones and using unpleasant words do not belong to wise.

In case if the kind, sweet and fruits were not available for the preference of bitter, it may be regarded as due no choice. But when pleasant words mixed with kindness and tasteful fruits are affluent, will any wise use the unwanted?

Therefore, that who prefers such unwanted senselessly against the natural order would be fool is the innate meaning.


Message :
While good ones are at plenty preferring the bad is foolishness.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...