Wednesday, September 30, 2009

திருக்குறள்: 105 (உதவிப் பெருமை நுகர்பவர் தரமே...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 105
Chapter : 11

Gratitude

Thirukkural

: 105

உதவி வரைத்து அன்று, உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொழிப்புரை :
அளவால் அறியப்படுவது அன்று, உதவி; [அது] உதவி செய்யப்பட்டவரின் சிறப்பின் அளவைப் பொறுத்தது.

விரிவுரை :
உதவி அதன் அளவால் அறியப்படுவதில்லை. அது உதவி பெறப்பட்டவர் சிறப்பின், மேன்மையின் அளவால் அறியப்படும்.

உதவி பெறுபவரின் சிறப்பே செய்யப்பட்ட உதவியின் அளவைத் தீர்மானிப்பது. எனவே ஒரே உதவி அதன் பெறுபவரின் தன்மைக்கேற்ப சிறப்பில் வேறுபடும். பெருந்தகையாளருக்குச் செய்த உதவி பெருமிதத்தையும், சிறுமையாளருக்குச் செய்த உதவி சிறுமையும் பெறும் என்பது கூறாப் பொருள்.

பெறுநரின் மேன்மை என்பது அவரது சான்றாண்மைக் குணத்தின் மேன்மை பற்றியது; அவரது பொருள் வளத்தால் அல்ல என்பதை அறியவும்.

நல்லவருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் எழுத்தே போல் நின்று பறை சாற்றும்.

குறிப்புரை
:
உதவியின் பெருமை அளவு அதைச் சேர்பவரின் மேன்மையால் அறியப்படும்.

அருஞ்சொற் பொருள் :
உதவி - துணைபுரி, கொடு, நன்மசெய், அறிவி, கூடியதாகு
வரை - வரையறு, நிர்ணயி, எல்லை, அளவு, காலம், இடம்
சால்பு - சிறப்பு, உயர்வு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை

ஒப்புரை :
ஔவையார். மூதுரை:
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

***

In English: (Thirukkural: 105. Recipient's merit is help's greatness...)

uthavi varaiththu anRu, uthavi; uthavi
seyappattAr sAlbin varaiththu.
Meaning :
Help is not known by its own measure. It depends by the recipient’s loftiness measure.
Explanation :

Help does not prescribe measure by its own size; it is measured by the receiver's merit and loftiness.

Help recipient's loftiness determines the measure for the help rendered. Therefore the same help depending upon it's receiver's merit differs in its greatness. The help rendered for the noble get nobility and the help offered for the petty minded becomes insignificant is the implied meaning here.

Loftiness of the recipient is about their greatness in quality; not about their greatness in wealth of material goods and money.

The help rendered for the good will stay and speak for it as if scripted in a stone.

Message :
Measure of Help's renown is known by it's recipient's majesty.

***

Tuesday, September 29, 2009

திருக்குறள்: 104 (உணரும் உதவி உயரியது...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 104
Chapter : 11

Gratitude

Thirukkural

: 104

தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர்-பயன் தெரிவார்.


பொழிப்புரை :
தினை போலும் நல் உதவியைச் செயினும், பனை போலும் கொள்வர் [அதன்] பயனை அறிந்தவர்.


விரிவுரை :
செய்யப்பட்ட உதவி தினை அளவே போலும் இருப்பினும், அதன் பயனை உணர்ந்தவர் அதனைப் பனை அளவே போலும் கொள்ளுவர்.

எனவே அவ்வுதவியை அவ்விதமாகப் போற்றி நன்றி கடப்பாடுடையவராய்த் திகழ்வர் என்பது உட்பொருள்.

வெளிப்பார்வைக்கும், பயனுறாதாருக்கும் வேண்டுமானல் அவை சிறு உதவியாகத் தோன்றலாம். ஆயின் அவ்வுதவியின் பயனை உணர்ந்தவர், தெரிந்தவர் அஃது தினை அளவாயினும், பனை அளவாகவே போற்றுவர்.

விபரமறிந்தோர் அவ்விதம் கொள்வர்; சிறு மதியாளர், அறியாதோர் அதைச் சிறிதென விட்டுவிடுவர் என்பது ஈண்டு பெறத் தக்கது.

உதவியின் பயனை உய்த்துணர்ந்து அதன் சிறப்பைப் பெரிதென மதித்தல், நன்றி மறவாதிருத்தல் பயன் தெரிந்தோர் கொள்ளவேண்டிய அறம். பயன் பெற்றோர் எவ்வித உதவியாகினும் அதைச் சிறிதெனச் சிறுமைப் படுத்தாது அதைப் பெரிதாகப் போற்றி மதித்தல் வேண்டும் என்பது உட்பொருள்.


குறிப்புரை
:
உதவி சிறிதெனினும் அதை உணர்ந்தோர் மிகப் பெரிதென மதிப்பர்.


அருஞ்சொற் பொருள் :
துணை - ஒத்திரு, போன்றிரு


ஒப்புரை :

ஔவையார். மூதுரை:
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

***

In English: (Thirukkural: 104. Realized help is great...)

thinaith thuNai nanRi seyinum, panaith thuNaiyAkak
koLvar-payan therivAr.

Meaning :
Though the help rendered is as small as millet that who knows the benefit will consider it as huge as a palm-tree.

Explanation :

Although the help rendered is as small as millet in size that who knows the benefit will deem it as huge as a palm-tree.

For such a help therefore they are obligated to such a great extent is the implied meaning.

For the onlooker and for those who have not benefited the help may look it as smaller. But who knows and feels the benefit will consider it as high though it is small in reality.

Wise will consider it so; mean minded and un-wise may leave and ignore it as small is also imbibed here.

Comprehend the received help, consider and appreciate it as huge and precious and thankful to it are the virtues of the beneficiaries. Also the implied meaning is that the benefited must consider the received help regardless of its real size as great and vast and not to ignore or ill-treat it as mean or meager.


Message :
Though the help is small, that who realizes shall regard it as big.

***

Monday, September 28, 2009

திருக்குறள்: 103 (தன்னலமற்ற உதவி இணையற்றது...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 103
Chapter : 11

Gratitude

Thirukkural

: 103

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
பொழிப்புரை :
[தனக்குப்] பயன் நோக்காமற் செய்த உதவியின் நற்பயனை நோக்கினால், அதன் நன்மை கடலினும் பெரியது.
விரிவுரை :
தனக்கு இன்ன பயன் தரும் எனக் கருதாது செய்த உதவியின் நற்பயனின் பண்பை ஆராய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலைக் காட்டிலும் பெரிது.

காலத்தில் செய்யப்பட்ட உதவி உலகைக் காட்டிலும் எப்படிப் பெரிதோ அதைப் போன்றே அதிலும் சுய இலாபம் கருதாது செய்த உதவியிலுள்ள நற் பண்பு கடலைக் காட்டிலும் பெரிதாம்.

தனக்கு பயனுள்ளதா என்று ஆராயமல் ஒருவருக்கு நன்மைதரும் உதவியைச் செய்பவரின் மனமும், குணமும், அன்பும், பரிவும் கடலை விட விசாலமானதே. அதற்கு எவ்வளவு கைம்மாறு செய்தாலும் தகும் என்பது உட்பொருள்.

சுய இலாபத்தை எண்ணாது செய்த உதவி என்றால், நொடிப்பொழுதில் உடனடியாகச் செய்யப்பட்டது என்றும் தெளியவும். உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களையும் உதவி என்பது உயரிய அன்பின் செயல்பாடு, வெளிப்பாடு. அதை அளக்கத்தான் இயலுமோ? எனவே அஃது கடலினும் பெரிதென்பதில் அளக்க இயலாதது என்பது உட்பொருள்.
குறிப்புரை :
சுய இலாபத்தை எண்ணாது செய்யப்பட்ட நல் உதவி கடலினும் பெரிதே.
அருஞ்சொற் பொருள் :
நயன் - உறவு, பரிவு, பண்பு, கனிவு, இனிமை, அருள், நற்பயன், நியதி, கொள்கை
ஒப்புரை :
ஔவையார். மூதுரை:
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

***

In English: (Thirukkural: 103)

payan thUkkAr seytha uthavi nayan thUkkin,
nanmai kadalin perithu.
Meaning :
The merit of the help bestowed without weighing the benefits for the self is vaster than the sea.
Explanation :

The merit of the Help rendered without intending for self-benefit is vaster than the sea.

Like the timely help which is greater than the world, the help with no strings attached for the benefit of the self is of the excellent quality and merit greater than the sea.

Without weighing for any self-benefits to offer helps to others, one’s character, quality, love and kindness are certainly greater and wider than a sea. Such that deserves reciprocation how much ever possible is the implied meaning.

Help without thinking for the self-benefit means, rendered instantly in a fraction of moment. It is like the help of the hand to save the falling dress worn; an instant help to resolve the problem; it is the highest degree of love's service and expression. Is there anyway to measure it? Therefore, vaster than the sea is meant to say that it is immeasurable.

Message :
The help rendered without weighing the self benefit is vaster than sea.

***

Sunday, September 27, 2009

திருக்குறள்: 102 (உற்றகால உதவி ஒப்பற்றது...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 102
Chapter : 11

Gratitude

Thirukkural

: 102

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது.
பொழிப்புரை :
தக்க சமயத்தில் செய்த உதவி [அளவில்] சிறிது எனினும், [அது] உலகைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது.
விரிவுரை :
உற்ற காலத்தில், காலம் தவறாது செய்த உதவி அளவில் சிறிதே எனினும், அஃது உலகைக் காட்டிலும் பன் மடங்கில் பெரியதாகும்.

இக்கட்டான, நெருக்கடியான, அவசரமான, உடனடியாகத் தேவைப்பட்டக் காலங்களில் செய்யப்படும் உதவியே, நன்மையே பல வேளைகளில் உயிரை, உடலை, உடைமையை, வாய்ப்பை, விபத்துக்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும், வழுவுவதிலிருந்தும், நழுவுவதிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அத்தகைய உதவி அளவில் சிறிதாக இருக்கலாம், ஆனால் அது செய்யப்பட்ட இடம், காலப் பொருத்தங்களின் பால் உலகைக் காட்டிலும் பல மடங்குகள் பெரியதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படும்.

ஓர் உயிரைக் காப்பாற்றச் செய்யப்படும் அவசரகால இரத்ததானம், உறுப்புத் தானம், விபத்தில் அகப்பட்ட ஒருவரை மருத்துவ மனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் உதவி, அவருக்குச் செய்யும் முதல் உதவிச் சிகிச்சை, மகப்பேற்று வலியில் துடிக்கும் பெண்டிருக்குச் செய்யும் உதவிகள் போன்றவை காலத்தினால் செய்யப்பட்ட உதவிக்கு உதாரணங்கள். உயிரைக் காப்பாற்றச் செய்யப்படும் உற்ற நேரத்து உதவிகள். அதைப்போலவே இடருற்ற காலத்தே, கால வரையறைக்குள் செய்யப்பட வேண்டிய அவசிய உதவிகள் எண்ணற்றவை. அவ்வாறு செய்யப்பட்ட உதவிகள் சில துளி நேரங்களையும், பொருளையும், முயற்சியையும் கொண்டு செய்யப்பட்டு இருந்தாலும் அவை செய்யப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து அவை நிச்சயம் முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும், உலகைக் காட்டிலும் பன் மடங்கில் பெரியதாகவும் கொள்ளப்படும். அவ்வாறு அவற்றைக் கருதி, மதிக்க வேண்டும் என்பதே கருத்து.
குறிப்புரை :
உற்ற காலத்துச் செய்த உதவி உலகைக் காட்டிலும் மிகப் பெரிது.
அருஞ்சொற் பொருள் :
நன்றி - நன்மை, உதவி
மாண் - மேன்மை, சிறப்பு, தகுதிபெறு, நிறைய, மாட்சிமை, பெருமை, தடவை, மடங்கு
ஒப்புரை :
ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

ஔவையார். நல்வழி:
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

***

In English: (Thirukkural: 102)

kAlaththinAl ceytha nanRi siRithu eninum,
njAlaththin mANap perithu.
Meaning :
Timely rendered help though small is greater in multitudes than the world.
Explanation :

Appropriately offered help in the need of the hour, though may be trivial is indeed greater in many folds than the world.

Help and the good service done at the difficult, crucial, critical, urgent and emergency times saves most of the time life, body, property, opportunity from accidents, risks and perils by either preventing or exiting. Such a help may be petty or small but by the situation, time, place and the nature it may be considered as many a times bigger and greater than the world.

Blood donation at emergency to save a life; body parts donation, admitting the victim of an accident to a hospital; providing first aid services to such needy, services and the assistance rendered to the pregnant women during their labors are examples of timely helps. Similar to the Helps rendered to save the life, essential helps which are necessary to be executed during difficulties within the stipulated times are countless. Such helps though may have taken up few drops of time, material and efforts, depending on the rendered situation, it may be considered as crucial, exceptional, significant and many times greater than the world.

Message :
Help rendered in the need of the hour is much greater than the world.

***

Saturday, September 26, 2009

திருக்குறள்: 101 (ஆரம்ப உதவி அளப்பரியது...)

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்

: 101
Chapter : 11

Gratitude

Thirukkural

: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொழிப்புரை :
பிரதி உபகாரமாகச் செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும், வானகமும் கூட ஈடாகுதல் அரிது.

விரிவுரை :
தான் எந்த உதவியும் செய்யாமல், தனக்கு ஒருவர் செய்த உதவிக்கு வையகத்தையும், வானகத்தையும் [இணைத்தும்] ஈடாக ஆக்குதல் அரிது.

பிரதிபலனாகச் செய்யப் படும் உதவி, நன்றிக் கடனைத் தீர்ப்பதால் அதற்கு ஒப்பீடு இருக்கிறது. ஆனால் பிரதி பலனாக அன்றிச் செய்யப்படும் முதல் உதவிக்கு ஒப்பீடு ஏது? அது ஈடு, இணையற்றது. எனவே அத்தகைய உதவிக்கு பூமியும், வானமும் இணையாகாது.

செய்யாமல் செய்த உதவி என்பதற்கு யாரும் செய்யாமல் கைவிட்ட போழ்து செய்த உதவி என்றும் கொள்ளலாம். மேலும் செய்ய இயலாது, சிரமத்தின் ஊடே செய்யப்பட்ட உதவி என்றும் கொள்ளலாம். அனைத்திலும் அத்தகைய உதவிக்கு கைம்மாறாக விண்ணையும், மண்ணையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது என்பதே கருத்து.

எனவே செய்யப்பட்ட உதவியின் அளவைக்காட்டிலும் அதற்குக் கைம்மாறு செய்வதற்காகக் காட்ட வேண்டிய நன்றிக்கு அளவே இல்லை என்பது உட்பொருள். உண்மைதானே?

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, சம்பந்தமில்லாத நபர் ஒருவர் கருணை கொண்டு செய்யும் ஒரு சின்ன உதவியினால் வாழ்வில் முன்னேறி இருப்பவர்கள் காலா காலத்திற்கும் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பார்களே. அதற்கு அளவு ஏதும் உளதோ? அன்றில் நன்றி மறந்தவர்கள் உண்மையில் மனிதர்களா?

குறிப்புரை :
பிரதி பலனன்றிச் செய்யும் முதல் உதவிக்கு பூமியும், வானமும் இணையாகாது.

அருஞ்சொற் பொருள் :
ஆற்றல் - தணித்தல், நிறைவேற்றுதல், நிகழ்த்துதல், நடத்துதல், பொறுத்தல், உதவுதல், தேடுதல், வலிமை அடைதல், போதியதாகுதல், நீக்குதல்.

ஒப்புரை :

ஔவையார். மூதுரை:
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால். 1

ஔவையார். நல்வழி:
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

மாணிக்கவாசகர். திருவாசகம்.
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்:

...
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257

அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258


மாணிக்கவாசகர். திருவாசகம்.
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி :
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377

***

In English: (Thirukkural: 101)

seyyAmal seytha uthavikku vaiyakamum
vAnakamum ARRal arithu.

Meaning :
The unreciprocated help offered cannot be compensated with Sky and Earth together.

Explanation :

Having no any help received previously, if one offers the help; such help cannot be equaled with sky and earth together.

The help offered after any prior helps received becomes reciprocated help and there is possibility always to compare it with the previous one. But is there a comparison for the unreciprocated help that is the first help? That cannot be compared at all. Therefore it cannot be equalized even with sky and earth put together.

"seyyAmal seytha uthavi' in Tamil can also be considered as not only that The help offered without any prior helps, but also that the help not offered by any others. Also it can mean as the Help rendered with great difficulties. However in all the cases the driving point is that such help cannot be compared with sky and earth together.

Therefore than the size of the actual help offered, the size of the reciprocation and the gratitude in return for it cannot be measured and compared. That is the implied meaning here. Is it not true?

Born somewhere, brought up somewhere but with no any relation as such, someone out of blue comes and kindly offers a small help, to turn and change the entire life and be the cause for successful life of today. For such help received, the receivers will have gratitude throughout their life. Is there any measure to it? Or one who forgets such helps will be indeed a human being?


Message :
Sky and earth cannot equalize the unreciprocated help offered.

***

அதிகாரம்: 11. செய்ந்நன்றி அறிதல் - முகவுரை

அதிகாரம்

: 11

செய்ந்நன்றி அறிதல்

முகவுரை

Chapter : 11

Gratitude

Preface



மனிதர்கள் தமது வாழ்வில் பிறருக்கு உதவிகள் செய்யவும், பிறரிடம் உதவிகளைப் பெறவும் செய்கின்றோம். இவை சமயங்களில் இன்றியமையாததாய் ஆகி விடுவதும் உண்டு.

அதைப் போலவே பிறருக்குச் செய்யும் உதவியைக் கூட எந்த எதிர்பார்ப்பும் இன்றிச் செய்தல் சிறப்பு என்பார்கள். ஆயின் பிறர் செய்த உதவியை மறக்காது நன்றி உணர்வோடு திகழுதல் அதனினும் சிறந்தது, மிக அத்தியாவசியமானது.

சமூக வாழ்வில் உதவிகளைப் பெற்றதைப் போலவே, அதற்கு நன்றி உணர்வோடு திகழுதல், நன்றி பாராட்டுதல் என்பது ஓர் அறம். இனிய மொழிகள் பேசி இணக்கத்தோடு வாழும் வாழ்வில் நன்றி பாராட்டுதல் சமூக உறவிற்கு முக்கிய அங்கமாகத் திகழ்வதால், வள்ளுவர் அதைத் தொடர்ந்து இந்த அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதைக் கவனித்தால் விளங்கும்.

தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை என்பதோடு நன்றி உணர்வும், பிரதி உபகாரமும் ஒருவரின் இன்றியமையாத கடமையாகின்றது.


ஒப்புரை (Reference)

ஔவையார். ஆத்திச்சூடி:
21. நன்றி மறவேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

மாணிக்கவாசகர். திருவாசகம்.
48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631



***


In English:

We, human beings, within our life- time help others and also get help from others. These helps become inevitable at times.

Likewise when the help is offered to others without any strings attached and without any expectation it becomes great. However when a help received from someone is revered and duly cherished with gratitude it is still greater and that is more imperative.

As the helps received, being gratitude for that and returning thanks are good virtues in social Life. Speaking sweet words and prevailing with positive attitude, helping, thanking and giving due credits, appreciations are essentials for the social relationships in a Life. Hence this chapter aptly succeeds the Amiability; the importance given in the order of the chapters by Valluvar is well understandable.

It is more imperative and essential duty for any one not to forget ever the helps received from others and to remember them with gratitude forever and to reciprocate them appropriately whenever possible in the Life and there after.

***

Friday, September 18, 2009

Announcement: Kural Amutham Free eBook Update

அறிவிப்பு

:

குறள் அமுதம் மென்புத்தகம்

Announcement : Kural Amutham eBook

புதுப்பிக்கப்பட்ட விபரம்.

Updated Details

1. அதிகாரம் 10 முழுமையாக இணைக்கப் பட்டுள்ளது

1. Chapter 10 is updated in full.

அன்புடையீர்,

குறள் அமுதம் மென் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். மகிழ்ச்சியுடன் பயன்படுட்திக் கொண்டிருப்பீர்களென நம்புகின்றேன்.

ஆர்குட்டிலும், இணையத்திலும் விமரிசனங்களைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி. ஆர்குட் கமெண்ட்களைப் பதிவு செய்ய முயலுவேன்.

எமது கணினி பழுது அடைந்திருப்பதால் பதிவுகளில் தாமதம் ஏற்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வாரத்தில் கணினி பழுது சரி செய்யப்பட்டுவிடும் என நம்புகின்றேன்.

நன்றி.

உத்தம புத்திரா.

சில கேள்வி பதில்கள்:

1. மென்புத்தகத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது?
இலவச மென்புத்தகங்கள் என்னும் இணைப்பைச் சுட்டி தேவையானதைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முதலில் தரவிறக்கம் செய்த போது செய்த செயல்பாடுகளை இப்போதும் செய்து கொள்ளுங்கள். அடிப்படையில் உங்களின் கணினியில் இருக்கும் பழைய சுவடி, இப்புதிய கோப்பால் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.முதன் முதலில் தரவிறக்கம் செய்வது எப்படி?
முதன் முறை தரவிறக்கம் செய்தால் .zip சுட்டியைத் தரவிறக்கம் செய்து, unzip செய்து பயன் படுத்தவும். இம்முறையில் மென்புத்தகத்தின் அகலம், உயரம் போன்றவை ஏற்கனவே நான் அமைத்துள்ளபடி உங்களுக்குக் கிட்டலாம். எனவே இந்தச் சுட்டியைத் தரவிறக்கம் செய்வதையே நான் பரிந்துரைப்பேன்.

3. KuralAmutham.chm சுட்டியைத் தரவிறக்கம் செய்து கொள்வது எப்படி?
இச் சுட்டியைத் தரவிறக்கம் செய்தால், கீழ்க்கண்ட முறைகளை மேலும் கையாள வேண்டும். முதலில் தரவிறக்கம் செய்த பிறகு இக்கோப்பைச் தேர்ந்தெடுத்துக் கொண்டு, வலது மவுஸ் பொத்தானை ஒத்தி, file Properties குச் செல்லவும்.General tab பகுதிக்குச் சென்று Unblock பொத்தானை ஒத்தவும். பிறகு Apply மற்றும் Ok பொத்தான்களை ஒத்தி வெளியேறவும். இவ்வாறு செய்யாவிடின் இவ்விதமாக தரவிறக்கம் செய்யப்பட்ட மென்புத்தகம் பொருளடக்கத்தைக் காண்பிக்காது. எனவே மென்புத்தகத்தில் Unblock அவசியம் செய்து
கொள்ளவும்.

4. எப்படிக் கமெண்ட் செய்வது?
குறள் அமுதம் இணையப் பக்கத்தில் உள்ள கமெண்ட் பாக்ஸைப் பயன் படுத்தி, உங்கள் எண்ணங்களை, பின்னூட்டங்களைப் பதியவும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டிலும் இங்குப் பதியலாம்.

5. ”குறள் அமுதம் பக்கத்தில்” ஒரு குறளை எப்படித் தேடுவது?
’Search' எனும் பாக்ஸில் உங்களுக்குத் தேவையான குறளின் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது குறளின் எண்ணை உள்ளீடு செய்து, ‘Search' பொத்தானை ஒத்தவும். பெரும்பாலும் உங்களின் தேடலுக்கான அட்டவணை அல்லது வாய்ப்புக்கள் ஒன்று மட்டும் இருந்தால் நீங்கள் கேட்ட தகவலுக்கான குறளமுதம் பக்கம் காண்பிக்கப்படும்.

***

In English: (About KuralAmutham eBook)

Dear Friends

I extend my thanks to all who have downloaded the "KuralAmutham" eBook. I am sure you are
using it happily.

Thanks to those who registered their comments on Orkut and in this web site. I will try to post the orkut comments here for others sake.

I regret to inform that as my system went down there were delays in the posts. I hope that the problem will be set right in the comming week to be back on track.

Thanks

UthamaPuthra.


Few Questions and Answers:

1. How to update your KuralAmutham eBook?
Click the link "My Free eBooks" from KuralAmutham.blogspot web site. Choose whichever file you require to update. Just follow the same procedures you followed to install the previous copy. Ensure that the newer copy basically overwrites your old copy at your system.

2. How to download for the first time?
I would recommend going for the KuralAmutham.zip file download because it is very simple. After download just you have unzip it. That is it. You are ready to use by then the KuralAmutham.chm file directly. You would also get the width and height is preset done by me. In the other method you have to do it manually by yourself.

3.How to download 'KuralAmutham.chm' file directly?
You can also download the KuralAmutham.chm file directly from the link given below. But in this method you have to take care to Unblock and adjust the sizes by yourself.

After download, Remember to unblock the file after downloading to your system otherwise you won't get the proper content display. Therefore, Locate the downloaded file and right click at it to get the file Properties. Click on the Unblock button on the General tab and follow it thru Apply and Ok buttons to close the property window. Now you can just double click the file to see the content. You may have to size the window to your convenience.

4. How to comment?
Use the Comment box in the Kural Amutham web site, to register your feedback and thoughts. Please Type in only in English or Tamil.

5. How to search for a particular Thirukkural in the web page?
Use the Search box in the page. Type out any word from the Kural you are looking for either in English or in Tamil. Alternatively you can also type the Kural Number, to fetch the same. You may be given a result of List to pick one or when only single choice you get the direct display of the Kural Amutham.


***

அதிகாரம்: 10. இனியவை கூறல் - முடிவுரை


அதிகாரம்

: 10

இனியவை கூறல்

முடிவுரை

Chapter : 10

Amiability

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

91 இனிய சொல் எனப்படுவது உண்மையை உண்மையாக அன்போடு பேசுவதே.

Pleasant words are truths spoken truly and lovely.
92 ஈதலைக் காட்டிலும் இன் முகத்தோடு பேசும் இனிய சொல் நல்லது.

Sweet words with a pleasant smile are better than gracious gifts.
93 அகமும், முகமும் மலர, இனிய பார்வையுடன், இன் சொல் பேசுவதே நல் ஒழுக்கம்.

Gracious heart and face, happy look and sweet words are the good virtue of conversation.

94 இன்புறத்தக்க இனிய சொல் பேசுபவர்களுக்கு துணையற்ற தனிமை எப்போதுமில்லை.

Those who speak pleasant and sweet words will never have paining loneliness.
95 பணிவும், இன் சொல் பேசுதலுமே ஒருவருக்கு உண்மையான அழகு, மற்றவை அல்ல.

Humility and sweet words speaking are the true beauties for one and nothing else.
96 பிறர்பால் நன்மை தரும் இனிய சொற்களைச் சொல்லின் ஒருவருக்கு நல் வினை பெருகும்.

Seeking goodness and speaking sweet words to others will grow good deeds for one.
97 நற் பண்பு மிக்க, பயனுடைய, இனிய சொற்கள் உறவையும் நன்மையையும் விளைவிக்கும்.

Courteous, Useful and sweet words yields good relations and goodness.
98 சிறுமைக் குணமற்ற இனிய சொல் எக்காலத்திலும் இன்பம் தரும்.

Mean free sweet words yield happiness ever.
99 இனிய சொல் இன்பமென அறிந்தும் துன்பம் தரும் கடும் சொல்லை பயன் படுத்துவோர் அறிவற்றோர்.

Knowing that kind words only yield happiness, hurting harsh words users shall be the fools.
100 நல்லவை இருக்க அல்லாதவை நாடுவது அறிவின்மை.

While good ones are at plenty preferring the bad is foolishness.

குறிப்புரை

இனிய சொல் எனும் உண்மையை உண்மையாக அன்புடன், அகமும், முகமும் மலரப் பேசுதல் ஈதலைக் காட்டிலும் சிறப்பான நல் ஒழுக்கம். அவ்வாறு இனிய சொல்லைக் கெட்ட எண்ணமின்றிப் பேசுவோருக்கு அது உண்மையான அழகாய் இருப்பதுடன், நல் வினை பெருக்கி, உறவையும் நன்மையையும் விளைவித்து எக்காலத்திலும் இன்பம் பயக்கும் ஆதலால் அவருக்குத் தனிமைத் துன்பம் எப்போதுமில்லை.

நல்லனவாகிய இனிய சொல் இன்பம் தருமென அறிந்திருந்தும் கடும் சொல்லையும், நல்லவை அல்லாதனவற்றையும் பேசுவோர் அறிவிலிகள்.

Message

Speaking the Pleasant words, the truth sincerely with Love in heart and face is better virtue than gracious gifts. Speaking such pleasant words mean free yields true beauties, good deeds, relations, goodness and happiness forever. Therefore they never suffer paining loneliness.

Knowing that good and kind words only yield happiness, hurting harsh and bad words users shall be the fools.

திருக்குறள்: 100 (கனியிருக்கக் காய் தின்பதா?)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 100
Chapter : 10

Amiability

Thirukkural

: 100


இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

பொழிப்புரை :
இனிய சொற்கள் இருக்கும்போது இனியவை அல்லாதவற்றைக் கூறுதல், கனிகள் இருக்க [அதைவிடுத்துக்] காய்களைக் கொள்ளுதல் போன்றது.

விரிவுரை :
பேசி மகிழ இனிய சொற்கள் இருக்கும்போது, வருத்தம் தரும் இனியவை அல்லாத சொற்களைக் கூறுதல், உண்டுமகிழச் சுவைதரும் கனிகள் இருக்கும்போது அதைவிடுத்து கனிவற்ற, சுவையற்ற அல்லது கசக்கும் காய்களைக் கொள்ளுதல் போன்றது.

அவ்விதம் பொருந்தாத, காய்களை விரும்புதலும், கடும் சொற்களைக் கூறுவதும் அறிவுடையோர் செயல் அன்று.

ஒரு வேளை கனிவும், இனிமையும், கனியும் இல்லாது போய் காய்த்தல் உண்டாயின் அதைக் கூட இயல்பெனப் பொருத்துக் கொள்ள இயலும். ஆயின் கனிவும், இனிமையும் கலந்த சொற்களும், தீஞ்சுவைக் கனியும் அள்ளக் குறையாது நிறைந்திருக்கையில் அறிவுடையோர் யாராவது வேண்டத்தகாதவற்றை விரும்புவார்களா?

அவ்வாறு விரும்பின் அவர்கள் இயல்பான அறிவுத் தன்மையற்ற, இயற்கைக்கு ஒவ்வாத மூடரே என்பது சொல்லாப் பொருள்.

குறிப்புரை :
நல்லவை இருக்க அல்லாதவை நாடுவது அறிவின்மை.

அருஞ்சொற் பொருள் :
உளவாக - உளதாக, இருக்கையில்
இன்னாத - இனியவை அல்லாத
கவருதல் - கொள்ளுதல், விரும்புதல், பறித்தல்

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 317

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. 530

தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே. 1175

வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே. 1335

நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே. 1338

மாணிக்கவாசகர். திருவாசகம்.
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் :

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642

ஔவையார். ஆத்திச்சூடி:
சுளிக்கச் சொல்லேல். 47

***

In English: (Thirukkural: 100)

iniya uLavAka innAtha kURal-
kani iruppa, kAy kavarnthaRRu.

Meaning :
While sweet words exist, uttering the bitter ones is like consuming the raw sour unripe one leaving the ripe sweet fruit available.

Explanation :

When there are pleasant words to speak and enjoy, speaking sorrowful unpleasant words is like preferring the sour and bitter unripe raw ones instead of sweet fruits available.

Such inappropriate preferences of bitter ones and using unpleasant words do not belong to wise.

In case if the kind, sweet and fruits were not available for the preference of bitter, it may be regarded as due no choice. But when pleasant words mixed with kindness and tasteful fruits are affluent, will any wise use the unwanted?

Therefore, that who prefers such unwanted senselessly against the natural order would be fool is the innate meaning.


Message :
While good ones are at plenty preferring the bad is foolishness.

***

Tuesday, September 15, 2009

திருக்குறள்: 99 (இன்சொல்லிருக்க வன்சொல் எதற்கு?)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 99
Chapter : 10

Amiability

Thirukkural

: 99


இன்சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ-
வன் சொல் வழங்குவது?

பொழிப்புரை :
இனிய சொற்களால் இனிமை பிறத்தலைக் காண்பவன், எதற்காகவோ, [துன்பம் தரும்] வன்மைச் சொல்லை வழங்குவது?

விரிவுரை :
இனிய சொற்களால் இன்பம் பிறத்தலைக் காண்பவர், [துன்பம் தரும்] கடும் சொற்களை வழங்குவது எதன் பாலோ?

இனிய சொல் இன்பம் தருவதை அறிந்திருந்திருந்தும், துன்பம் தரும் கடும் சொற்களைப் பிரயோகிப்பது எதற்காக என்று சொல்லுங்களேன்.

எனவே இன்பம் தரும் இனிய சொல் மட்டும் போதாதா? போதும். கடும் சொற்களைப் பயன் படுத்தாது இருப்பீர்களாக என்பதை வினாவினால் கேட்டு, அறிவோடு இனிய சொல்லை மட்டும் பயன் படுத்துங்கள் என்கின்றார் வள்ளுவர்.

அறியாமல் வன் சொற்களைப் பயன் படுத்தின் கூட அறியாமையால் சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம், ஆனால் இனிய சொல் இன்பத்தையே தரும் என அறிந்திருந்தும் அதைப் பயன் படுத்தாது துன்பத்தைத் தரும் வன் சொல்லைப் பயன் படுத்துதல் அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல என்பது பொருள்.

இனிமையான பேச்சு என்பது நேர்மறையானது. அது உறவையும், நலனையும் நல்கும். அவை யாரையும் காயப் படுத்துவதில்லை.

தீய சொற்கள் என்பது எதிர்மறையானது. அவற்றால் துன்பத்தையும், எதிர்ப்பையும், எதிர்களையும், கெடுதலையும் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

வள்ளுவர் அதிகாரம் 13.அடக்கம் உடைமை. திருக்குறள்: 129 :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

இதை இவ்வாறு சொல்லி இருக்கின்றார்.

இதுவரையில் நாம் பேசிய தீய சொற்கள் அறியாமையால் ஏற்பட்டவை என்று கொண்டு, இனிமேல் வாழ்வில் இனிமையானவற்றை மட்டுமே பேசுவோம் என உறுதி எடுத்துக் கடைப்பிடிக்க முன்வருவோமாக.

பேசும் சொற்கள் நாம் பெற்றெடுப்பவையே. எனவே ஏன் கெட்டவற்றைப் பெற வேண்டும்?
நாம் உதிர்க்காத சொற்களுக்கு நாம் அதிபதி. நாம் உதிர்த்த சொற்கள் நமக்கு அதிபதி. எனவே நல்ல சொற்கள் நம்மை ஆள, இனிமை நிறைக்க அவற்றை மட்டுமே பெற்றெடுப்போம்.

குறிப்புரை :
இனிய சொல் இன்பமென அறிந்தும் துன்பம் தரும் கடும் சொல்லை பயன் படுத்துவோர் அறிவற்றோர்.

அருஞ்சொற் பொருள் :
எவன்கொலோ - எதற்காகவோ, என்ன பயன் கருதியோ, எதன் மாட்டோ.

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 85

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 1109

சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம்
சொல்லஒண் னாத திகைத்தங்கு இருப்பர்கள்
வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி
மல்லஒண் ணாத மனோன்மணி தானே. 1164

பகையில்லை கௌமுத லயது வீறா
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுறு எல்லாம்
வகையில்லை யாக வணங்கிடம் தானே. 1339

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்
நலங்கிடும் காம வெகுளி மயக்கந்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே. 1340

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே. 1341

மாணிக்கவாசகர். திருவாசகம்.
36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு :

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529

காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய
ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531

மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532

அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533

ஔவையார். ஆத்திச்சூடி:
ஆறுவது சினம்.2
கடிவது மற. 32

***

In English: (Thirukkural: 99)

insol inithu InRal kANbAn, evankolO-
van col vazhanguvathu?

Meaning :
Who sees sweet words yield happiness, why should utter harsh and unpleasant words?

Explanation :

While one could see the happiness yielding through pleasant words, why would they speak harsh and unpleasant words?

Even after knowing that sweet words bring happiness, why one uses the sorrowful harsh and obnoxious words? Can anybody tell the reason?

Hence, won't the pleasant words alone be sufficient? Yes that's enough. By asking a question, Valluvar means not to use the harsh language but to use only pleasant words with sense.

One may ignore when harsh words are spoken out of ignorance. But when one knew that happiness comes by pleasant words, instead of using them, using grief yielding harsh words will not be delivered by wise, is the imbibed meaning.

Pleasant speech is positive in nature. It brings only relations and goodness. Also it won't hurt anyone.

On the other hand, Unpleasant speech is negative in nature. It can bring only sadness, rebels, enmity, troubles and harms.

Thiruvalluvar. Chapter 13. Self-Control. Thirukkural: 129
thIyinal sutta puN uLLARum, ARAthe
nAvinAl sutta vadu.

Has said so.

Therefore think that whatever the unpleasant words we have spoken so far are out of ignorance; now onwards in life we shall speak only the pleasant words. Let us take this as a resolution and come forward to practice it.

Speaking words are what we deliver. Therefore why should we "deliver" bad ones? We are the masters for the words we have not spoken. Spoken words are the masters of us. Therefore to make the good words to master us and to bring the happiness, let us use only them.


Message :
Knowing that kind words only yield happiness, hurting harsh words users shall be the fools.

***