Sunday, October 25, 2009

திருக்குறள்: 126 (ஒருமுகப் படுத்தும் அடக்கம்...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 126

ஒருமுகப் படுத்தும் அடக்கம்...

In English

ஒருமையுள், ஆமைபோல், ஐந்து அடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பொழிப்புரை :
ஒருமுகப்பட்ட நிலையில், ஐந்து உறுப்புக்களை ஓட்டினுள் அடக்கும் ஆமை போன்று, ஐம்புலன்களை அடக்கிச் செயலாற்றினால், [அஃது] ஏழ் பிறவிக்கும் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை உடைத்து.

விரிவுரை :
தனது ஓட்டினுள் கால்கள், மற்றும் தலை ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கும் ஆமையைப் போன்று, தனது ஐம்புலன்களையும் ஒருமுகப்பட்ட மனத்தினுள் அடக்கிச் செயலாற்றின், அஃது ஏழ் பிறவிக்கும் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை கொண்டது.

ஐம்புலன் உணர்வுகளை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு ஒருமுகப்பட்ட நிலையைக் கொண்டு தமது செயலாற்றினால் எதிலும் வெற்றி என்பது நிச்சயமே. ஆகவே அடக்கம் என்பதன் முக்கிய நோக்கம் மற்றும் பயன் என்பது மனம் ஒருமுகப்பட்டுச் செயல்பட வேண்டுமென்பதே இக்குறளின் முக்கிய உட்கருத்து.

மன அடக்கத்தோடு, புலன் அடகத்தோடு, ஒருமுகப்பட்டுச் செய்யும் செயலின் வெற்றி காலா காலத்திற்கும் காத்து நிற்கும் தன்மை உடையது என்பதற்கு ‘திருக்குறளைக்’ காட்டிலும் வேறு உதாரணம் தேவையா? திருக்குறளின் வெற்றி, திருவள்ளுவரின் பெயருக்கும், புகழுக்கும் என்றென்றும் கட்டியம் கூறிக் காத்து நிற்பது அவர் அடக்கத்துடன் செயலாற்றிச் செய்வித்ததன் பயன் தானே?

அடக்கமின்றி, ஆரவாரங்களோடு செய்யப்படும் செயல் எதிலும் ஆழம் இருப்பதில்லை; வெறும் மேல் பூச்சாக மட்டுமே அவற்றால் விளங்க இயலும். அடக்கம் தரும் மன அமைதியிலேயே ஆழப்படுதல் சாத்தியம். அத்தகைய நிலையில் மன ஒருமைப் பட்டுச் செயலாற்றும் போது, செயலின் ஆழமும் வீரியமும் வெற்றியும் காலங்களை விஞ்சி நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது அனைத்து உளவியலாளர்களும் கூறும் உண்மைதானே. எனவே வள்ளுவர் ஓர் தலை சிறந்த உளவியலாளர் என்பதற்கு இக்குறளும் உதாரணம்.

குறிப்புரை :
புலன்களை அடக்கி ஒருமுகப்பட்டு ஆற்றப்படும் செயல் காலங்களை விஞ்சி நின்று நன்மை பயக்கும்.

அருஞ்சொற் பொருள் :
ஒருமை - ஒருமுகப்பட்ட நிலை
ஏமாப்பு - பாதுகாவல், அரண், ஆதரவு, செருக்கு, இறுமாப்பு

ஒப்புரை :

திருமந்திரம்: 133.
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.

திருமந்திரம்: 2158
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.

திருமந்திரம்: 1581
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9

திருமந்திரம்: 1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13

திருமந்திரம்: 1603
அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14

திருமந்திரம்: 1604
மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15

திருமந்திரம்: 1639
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 7

திருமந்திரம்: 1672
அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5

திருமந்திரம்: 1674
ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே. 7

திருமந்திரம்: 1675
தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8

திருமந்திரம்: 2088
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5

திருமந்திரம்: 2090
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7

பத்திரகிரியார். மெய்ஞானப் புலம்பல்:
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? (1)
...
வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? (19)
...

பாம்பாட்டி சித்தர் பாடல்:
எள்ளில் எண்ணெய் போலவுயிர் எங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே (4)
...
அங்கையிற் கண்ணாடிபோல் ஆதி வந்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படம் எடுத்து ஆடு பாம்பே (14)
...
அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே (17)
...
தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுது தொழுது ஆடு பாம்பே (70)
...
ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மித்தித்தே
காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோம் என்று ஆடு பாம்பே (79)
...
தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்;
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்;
பின்னை யொரு கடவுளைப் பேண நினையார்;
பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே (95)

சிவவாக்கியர்:
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுஙாஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள்மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. (319)

ஔவையார். ஆத்திச்சூடி:
67. நாடு ஒப்பன செய்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
63. புலையும் கொலையும் களவும் தவிர்

ஔவையார். மூதுரை:
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 126

Focused self-control...
In Tamil

orumaiyuL, AmaipOl, ainthu adakkal ARRin,
ezhumaiyum EmAppu udaiththu.

Meaning :
The actions by one who focuses single mindedly, like the tortoise which controls its five body parts within its shell, controlling all five senses within oneself, shall stand as the protection for seven births.

Explanation :
Like the tortoise which controls its head and legs into its shell, that who controls all his five senses within the focused single minded self and works that will stand as the glory of guard for seven births.

When senses are controlled within self and work with single minded focus, the success is certain in anything. Therefore the purpose and importance of the self-control is to focus single mindedly is the implied meaning here.

For the success of focused single minded work, having controlled the mind and senses, which is standing as the outstanding guard for all the ages, do we require any example beyond 'Thirukkural' itself? The success of Thirukkural, guarding the fame and name of Thiruvalluvar panegyric forever, is it not because of his self-controlled dedicated accomplishment?

Any work done with indulgence, clamor and pomp will not be a deep one; that can only be just superficial. It is possible to deepen only by the peace achieved through the self mind-control. Such state of working with focused mind only can produce the accomplishments with the vigor, depth and success which can with stand any period of time is of no doubt. This is the truth uttered and assured by all psychologists as well. Hence this Kural is one of the examples to say Valluvar is a great psychologist.

Message :
Actions of focused mind with controlled senses will stand beyond ages providing goodness.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...