Thursday, October 29, 2009

திருக்குறள்:130 (அறம் விரும்பும் பொறுமை அழகு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 130

அறம் விரும்பும் பொறுமை அழகு...

In English

கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும், ஆற்றின் நுழைந்து.

பொழிப்புரை :
சினம் வாராமற் காத்து, பொறுமையைக் கற்று, அடக்கத்துடன் காரியம் ஆற்றுவான் அழகை, அறமாகிய நல்வொழுக்கம் பார்க்கும், அவனது செயலாற்றலின் [வழி] நுழைந்து.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
சினம் தவிர்த்து, பொறுமை கற்று, அடக்கத்துடன் காரியம் ஆற்றுவானின் எழிலை, அழகை, அறமாகிய நல்லொழுக்கம் அவனது செயலாற்றலின் வழியே நுழைந்து பார்த்து நிற்கும்.

எனவே நல்லறமே வந்து நுழைந்து பார்க்கின்ற அவனது செயலாற்றலால், அவனது செய்கைகள், ஆக்கங்கள் உயரிய தரத்தோடு பரிமளிக்கும். சினம் வாராது, பொறுமையோடு, அடக்கத்தோடு ஆற்றும் காரியம் சிதறாது, பதறாது, நல்லறமே உள்நின்று ஒழுக்கத்தின் மேன்மையோடு நற்செயலாய், நல்வினைப் பொருளாய் வெளிப்படும். எனவே அஃது ஒப்பற்ற திறத்தோடும், நுணுக்கத்தோடும், கலையோடும், அழகோடும், ஆழத்தோடும், ஒழுங்கோடும் திகழும் என்பது உட் பொருள்.

இயலாமைக்கான கோபமன்றி, ஏமாற்றத்திற்கான ஆத்திரமின்றி, விடாது தொடரச் சலிப்பின்றி, திறமைக்கான அகம்பாவமின்றி அடக்கத்துடன் ஆற்றப்படும் நற் காரியத்தை நல்லொழுக்கமாகிய அறமே செயலின் வடிவாய் நுழைந்து கண்டு களிப்புற்று நிற்கும் என்பது செயல் திறனை அத்தகைய ஒப்பற்றதாக இருக்கும் என்று உயர்வுநவிச்சியோடு, கவிதை நயத்தோடு விளக்குகின்றார் வள்ளுவர். திருமகள் நிறைந்து நிற்கும் இல்லம் என்பதேபோல், அறமே வந்து ஆற்றலின் வழி நுழைந்து, கண்டு களிக்கும் உன்னதச் செயல்பாடு என்பது பொருள்.

இக்குறளுக்கு ”தக்க தருணம் பார்த்து அறக்கடவுள் காத்து நிற்கும்” என்பது போன்ற பொருள் அவ்வளவு ஏற்புடையதன்று. சினமற்று, கல்விகற்று, அடக்கத்துடன் பணியாற்றுவானைச் சேர இனி வேறுவொரு ’தக்க தருணம்’ எதுவென்பது ஒருபுறமிருக்க, அறக்கடவுள் அதற்குக் காத்திருப்பார் என்பவையெல்லாம் முற்றிலும் பொருந்தாதவை என்பது எனது தாழ்மையான கருத்து.

குறிப்புரை :
அடக்கம், பொறுமை, அறிவுடன் செயப்படும் செயல் உயரிய ஒழுக்கத்துடன் திகழும்.

அருஞ்சொற் பொருள் :
கதம் - சினம்
செவ்வி - பொருந்திய நேரம், தருணம், அழகு

ஒப்புரை :

திருமந்திரம்: 1880
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.

திருமந்திரம்: 1883
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே.

திருமந்திரம்: 1893
துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.

திருமந்திரம்: 1913
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

திருமந்திரம்: 1957
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

திருமந்திரம்: 1986
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த
னோடே அடங்குகின் றாரே.

திருமந்திரம்: 1987
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

திருமந்திரம்: 1988
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.

திருமந்திரம்: 1989
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.

திருமந்திரம்: 2008
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

திருமந்திரம்: 2010
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.

திருமந்திரம்: 2316
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

திருமந்திரம்: 2318
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

திருமந்திரம்: 2506
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்:
சித்தத்தோடு கிளத்தல்:
அஞ்ஞானம் போயிற்றுஎன்று தும்பீபற - பர
மானந்தம் கண்டோம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற! - மலை
மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற!

அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்கள் அற்றோமென்றே தும்பீபற!
தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோம் எனத் தும்பீபற!

ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அருவே பொருளாமெனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தவனவே தும்பீபற - ஒரு
தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற!

மூவாசை விட்டோம் என்றே தும்பீபற - பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற!
தேவாசை வைத்தோம் என்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!

பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!

எப்பொருங் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே த்ம்பீபற!
அப்பிலெழுத் துடல் என்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற!

ஔவையார். ஆத்திச்சூடி:
98. மோகத்தை முனி.

ஔவையார். கொன்றைவேந்தன்:
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

ஔவையார். நல்வழி:
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35

ஔவையார். மூதுரை:
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 130

The virtue loving gracefulness...
In Tamil

katham kAththu, kaRRu, adangal ARRuvAn sevvi
aRam pArkkum, ARRin nuzhainthu.

Meaning :
The virtue peek the gracefulness and seek through the actions of whom that executes with no wrath but learnt patience and self-control.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
The good virtue peek the gracefulness seeking through the deeds of that who accomplishes them with no anger but with learnt obedience, patience and self-control.

As the good virtue by itself witnesses the actions, his works, performance and accomplishments will be in good quality and outstanding. The action performed with no anger but with patience and self-control does not go scattered and agitated. Instead through the good virtue underneath, it emerges as the good work and useful product. Therefore that can stand out with incomparable quality, class, detail, sharpness, ingenuity, art, grace, depth, neatness and order is the implied meaning.

With no anger for the helplessness; no impatience for chagrin or disappointment; no any frustration and weariness for the perseverance; no haughtiness for the abilities but with self-control and humbleness when the good deed is executed, the good virtue itself enters through and delights by it. Such that is poetically described so by Valluvar to emphasize as incomparable excellent deed. It is just like the wealth of God residing home, the good virtue by itself enters through to enchant the excelling deed is the meaning.

For this Kural, "awaiting for suitable time to enter by the Good virtue" kind of interpretation is not much acceptable one. Apart from the point which would be 'suitable time' to join the anger less, learnt and obediently with self-controlled, the God of good virtue would be waiting is not at all relevant, is my sincere opinion.

Message :
Performance with self-control, patience and wisdom shall yield the high degree actions of the virtue.

***

4 comments:

புலவன் புலிகேசி said...

இதை எல்லாம் எங்கிருந்து திரட்டுகிறீர்கள்? விளக்கம் நன்றாக இருக்கிறது.

UthamaPuthra said...

பதிவிற்கு நன்றி புலவன் புலிகேசி அவர்களே.

விளக்கங்களை நானே ஆராய்ந்து எழுதுகின்றேன். நீங்கள் குறள் அமுதத்தின் முதல் குறளுக்கான விளக்கம் படிக்கவில்லை என்று எண்ணுகின்றேன். அதிலுள்ளது உங்களிற்காக மீண்டும்:

[1] நான் தற்சமயம் பரிமேலழகர், மணக்குடவர், மு. வரதராசனார், தேவனேயப் பாவாணர், G.U. போப், சித்தானந்த பாரதி, மு. கருணாநிதி, தமிழண்ணல், பி.எஸ். சுந்தரம் போன்றவர்களின் விளக்கங்களை ஒப்பீடு வழிகாட்டிகளாகக் கொண்டு விளக்க முயலுகின்றேன்.

உண்மையில் நேரமின்மையால் சந்தேகம் ஏற்படும்போழ்து மட்டுமே அவற்றை அதிகம் பயன் படுத்துகின்றேன். என்வேதான் புதிய கருத்துக்கள் என்னும் குறியீடு அனைத்திலும் இருக்குமென்று சொல்ல முடியாது, இருப்பினும் வேறு குறள்களிலும் கருத்துக்களில் நான் வேறு பட்டிருக்கலாம். அவை பின்னர் ஆராய முற்படுபவர்களுக்காக விட்டுவிடுகின்றென்.

முன்னர் திருமந்திரத்தை நானே தட்டச்சு செய்து பதிவு செய்து கொண்டிருந்தேன். தற்சமயம் www.shaivam.org லிருந்து எடுத்து பயன் படுத்துகின்றேன். அதில் திருவாசகம், தேவாரம் போன்றவையும் கிட்டுகின்றது.

மற்றைய ஒப்புரைத் திரட்டல்களை சித்தர் பாடல்கள் எனும் புத்தகத்திலிருந்தும், ஔவையார் புத்தகங்களை நெட்டிலிருந்தும் பயன் படுத்துகின்றேன். நினைவிற்கு வரும் ஒப்புரைகளை அவ்வமயம் நெட்டிலும், என்னிடம் உள்ள மற்றையப் புத்தகங்களிலிருந்தும் கொடுக்கின்றேன்.

நான் முன்னர் பதிவு செய்துள்ளது போலவே, குறளீற்கான முழுமையான மறை பொருள் விளக்கம் என்பதை நான் எங்கும் பார்க்கவில்லை. பரிமேலழகரும், தேவனேயப் பாவணரும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் கொடுத்திருப்பினும் அவர்களிலிருந்து நான் மிகவும் மாறு படுகின்றேன். எனவேதான் இந்த மொத்தப் பதிவுகளும்.

நாளை மறுநாள் இதுவரையில் இப்பதிவில் வந்துள்ள குறள்களூக்கான விளக்கத்துடனான மென் புத்தகத்தைப் புதுப்பிப்பேன். அவ்வமயம் அதை தரவிறக்கம் செய்து பயன் படுத்துங்கள். உங்களின் விமரிசனங்களை வரவேற்கிறேன்.

விடுபட்டுப் போன எண்ணங்களோ அல்லது மாற்றுக் கருத்துக்களோ அன்றில் ஏதேனும் தவறுகள் இருந்து சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளுவதுடன் நிச்சயம் நன்றியோடு பயன் படுத்திக் கொள்ளுவேன்.

விளக்கம் நன்றாக உள்ளது என்ற உங்களின் பதிவிற்கு மீண்டும் நன்றி.

UthamaPuthra said...

மேற்படி உரை ஆசிரியர்களின் விளக்கங்களும் நெட்டிலும் கிடைக்கின்றன. விப்ரங்களுக்கு www.tamilvu.org ஐப் பார்க்கவும்.

mannadi archana sai ushakiran said...

It would be great if you could add meaning of each word that forms the kural

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...